திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில்

திருஅண்ணாமலையார் கோயில் என்றும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் என்றும் அறியப்படும் தலம் சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட ஸ்தலமாகும். இத்தக் கோயிலில் மூலவர் அருணாசலேசுவரர் என்றும், அம்பிகை உண்ணாமுலையாள் என்றும் அழைக்கப்படுகிறார்.

ஸ்தல வரலாறு

படைக்கும் கடவுளாகிய பிரம்மாவும் காக்கும் கடவுளாகிய திருமாலும் தங்களில் யார் பெரியவரென கேள்வி எழுந்தது. நடுவில் ஔிப்பிழம்பு போன்ற அந்த ஔிப்பிழம்பின் அடியையும், முடியையும் யார் கண்டு முதலில் வருகின்றனறோ அவரே நம்மில் பெரியவர் எனக்கூறினர்.

இதனால் திருமால் வராக ( பன்றி) அவதாரம் எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்துச்சென்றும் அடியை கண்டறிய இயலவில்லை. அன்னவடிவமெடுத்து முடியை காணபுறப்பட்ட பிரம்மர் தாழம்பூ கீழே வருவதைக் கண்டு இந்த நெருப்புபிழம்பு என்ன என்று கேட்க அதற்குத் தாழம்பூ இது சிவபெருமான் என்றும் நான் அவரின் சடையிலிருந்து நழுவி நாற்பதாயிரம் ஆண்டுகளாக கீழ் நோக்கி வந்து கொண்டு இருக்கிறேன் என்றும் கூறயது.

பிரம்மன் முடியைக்காணும் முயற்சியை விடுத்து தாழம்பூவிடம் நெருப்புப் பிழம்பான இந்த சிவனின் முடியை நான் கண்டேன் என திருமாலிடம் பொய் சொல்லும்படி கேட்க அதன்படியே தாழம்பூவும் பொய் கூறியது. தன்னால் கண்டறிய இயலவில்லையென பிரம்மரிடம் திருமால் ஒப்புக்கொண்டார். பிரம்மன் திருமாலை நீ எனக்கு ஒரு குழந்தைக்கு ஒப்பானவன் என்று கூறி எள்ளிநகையாடினார். இதனால் கோபமுற்ற சிவபெருமான் பிரம்மனிடம் பத்மகற்பத்தில் நீ திருமாலின் உந்திகமலத்தில் பிறப்பாயெனவும், உனக்கு பூமியில் தனிஆலயம் அமையாது எனவும், பொய்சாட்சிகூறிய தாழம்பூவிடம் நீ இனி சிவ வழிபாட்டில் பயன்படமாட்டாயென உரைத்தார்.

தன் தவறினை உணர்ந்து மன்னிப்புகேட்க தாழம்பூவிடம் நான் எனது பக்தைக்காக பூமியில் குழந்தையாக அவதரித்த உத்திர கோசமங்கை எனும் திருத்தலத்தில் மட்டுமே பயன்படுவாயெனவும் உரைத்தார். பிரம்மன் தன்னிடம் மன்னிப்பு கேட்டதால் அவருக்கு வழிபாடு நிகழ்வதற்காகவும், திருமாலால் தனது அடியை கண்டறிய இயலாததால் திருமாலை சிறியவரென உரைப்பார்களென்பதால் காருணாமூர்த்தியான சிவன் உடனே நாம்மூவரும் ஒருங்கிணைந்து சிவலிங்கமாகலாமென உரைத்தார். அதன்படியே அடிபாகம் பிரம்மனாகவும் , நடுப்பாகம் திருமாலாகவும், மேல்பாகம் சிவனாக மாறி வேதங்கள் புகழும் சிவலிங்கம் தோன்றிய நாளே மகா சிவராத்திரி நாளாகும்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அந்த மலையே சிவபெருமானாகக் கருதப்படுகிறது. எனவே கோயிலில் இறைவனை வலம் வருதலைப் போல மலையை வலம் வரும் பழக்கம் இங்குள்ளது. மலையைச் சுற்றிவர இரண்டு வழிகள் உள்ளன. மலையை ஒட்டிச் செல்லும் வழியில் பாறைகள், முட்கள் மிகுந்த கடின பாதையாக அமைந்துள்ளது. மலையைச் சுற்றியுள்ள பாதை ஜடாவர்ம விக்கிரம பாண்டியனால் கி.பி 1240ல் திருப்பணி செய்யப்பட்டது. பொதுவாக மக்கள் வலம் வரும் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்களும், ரமணமகரிசி, சேசாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன.

எல்லா நாட்களிலும் மலையை மக்கள் வலம் வரலாம் என்றாலும் பௌர்ணமி நாளில் வலம் வருதல் சிறப்பாக கருதப்படுகிறது. இம்மலையானது யுகங்களின் அழிவுகளிலும் அழியாமல் இருப்பதாக கருதப்படுகிறது. கிருதா யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் பொன் மலையாகவும், கலியுகத்தில் கல் மலையாகவும் மாறியிருப்பதாக நம்பப்படுகிறது.

எட்டு திசைகளிலும் அஷ்டலிங்கங்களைக் கொண்ட எண்கோண அமைப்பில் திருவண்ணாமலை நகரம் காணப்படுகிறது. அஷ்டலிங்கங்கள் எனப்படுபவை இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் ஆகும்.

தேவாரத்தில் புகழப்படும் ஆதி அண்ணாமலை திருக்கோயில் மலை வலப்பாதையில்தான் அமைந்துள்ளது. இந்த மலையின் சுற்றளவு 14 கிலோமீட்டர் உள்ளது. இம்மலையில் இன்றும் பல சித்தர்கள் வாழ்ந்து வருவதாக வரலாறு. மலையை வளம் வரும்போது மனிதர்கள் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம். கிரிவலம் செல்லும்போது பஞ்சாச்சர நாமத்தையோ( நமசிவாய,சிவாயநம) அல்லது திருமுறைகளையோ ( தேவாரம், திருவாசம்) உச்சரிக்க வேண்டும்.

விழாக்கள்

பிரம்மோற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் ஆண்டு தோறும் நான்கு பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.

ஆனி மாத பிரம்மோற்சவம்

ஆனி மாத பிரம்மோற்சவம் என்பது தட்சணாயன பிரம்மோற்சவம் என்று அழைக்கப்படுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் இந்த விழா, அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதனையும் பராசக்தியம்மன், விநாயகர், சந்திரசேகரர் சாமிகளுக்கு பூசைகள் செய்யப்படுகின்றன. விநாயகர் மற்றும் சின்னநாயகர் அம்மன், சந்திரசேகரர் வீதியுலா, ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர் எழுந்தருளுதல், ஆனி திருமஞ்சனம் ஆகியவை நடைபெறுகின்றன.

மாசி மகம் தீர்த்தவாரி

வள்ளாள ராஜாவின் மகனாக சிவபெருமானே பிறந்ததாக ஒரு தொன்மக் கதையுண்டு. இதன் காரணமாக வள்ளாள மகாராஜாவின் திதியை சிவபெருமானே அளிக்கின்றார். இந்நிகழ்வினை மாசி மகம் தீர்த்தவாரி என்றழைக்கின்றனர்.

கார்த்திகை தீபம்

கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறுகிறது. இதில் பத்து நாட்கள் உற்றவர்களின் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும் அதனையடுத்து சண்டிகேசுவர் உற்சவமும் நடைபெறுகிறது. சிவன் கார்த்திகை மாத கிருத்திகை நட்சத்திரத்தில், திருமால், பிரம்மன் இருவருக்கும் அக்னி வடிவமாக காட்சி தந்தார். இந்நாளிலேயே தீபத்திருநாள் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் அண்ணாமலையார் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’ தத்துவம் என்கிறார்கள். பரம்பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

பரணி தீபம்

பத்தாம் நாள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றை தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நிதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணிதீபம் காலையில் நடக்கும். பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்சமுகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சன்னதியில் வைக்கின்றனர்.

மகாதீபம்

மகா தீபம் கார்த்திகை தீப திருவிழா நாளின் மாலையில் அண்ணாமலை மலையின் மீது ஏற்றப்படுகிறது. இம்மலை 2,668 அடி உயரமானதாகும். மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீசுவரர் உற்வச கோலம் தீபமண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது. இந்த மகாதீபத்தினை பக்தர்கள் மலையின் மீது ஏறிப் பார்க்கின்றனர்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *