தமிழ் நாட்டை ஆண்ட மூவேந்தர்கள் ஆகிய சோழர்கள், பாண்டியர்கள், சேரர்கள் மற்றும் பல்லவ மன்னர்கள் குறித்து நாம் பெரிதும் அறிய உதவுவது சங்க இலக்கியங்கள் ஆகும். இது தவிர மன்னர்கள் காலத்து கல்வெட்டுகளும், செப்புப் பட்டயங்களும் நாம் இவர்களை பற்றி அறிய பெரிதும் உதவுகின்றது.

தமிழகத்தை ஆண்ட முக்கிய மன்னர் பரம்பரைகளில் ஒன்றான சோழர் பரம்பரையை பற்றி சங்க இலக்கியங்கள் மூலம் ஓரளவிற்கு தெரிய வந்தாலும், சோழர்களின் தோற்றம் பற்றி ஒன்றும் அறிய முடியவில்லை. சோழர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்ளவோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்ளவோ இயலவில்லை.
இடைக்காலச் சோழ மன்னர்கள் ஏற்படுத்திய ஆதி சோழர்கள் பற்றிய செப்பேடுகள் வாயிலாக, சோழர்கள் சற்றேறக்குறைய கி.மு 3000 ஆண்டுக்கு முன்னரே தமிழ் நாட்டை ஆண்டிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. ஆனால் இதற்கு ஆதார பூர்வமாக எந்த ஒரு அத்தாட்சியும் இதுவரை சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.
திருவாலங்காட்டில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகள் வாயிலாக தமிழகத்தை ஆண்ட ஆதி சோழ மன்னர்கள் பெயர் தெரியவருகின்றது. கி.மு 3020ல் தமிழகத்தை ஆண்ட சோழ மன்னர் பெயர் “ஏரி ஒலியன்” என்பதும் தெரியவருகின்றது. இது தவிர இவருக்கு பிறகு ஆண்ட ஐம்பத்திற்கும் மேற்பட்ட சோழ மன்னர்கள் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் திருவாலங்காட்டில் கிடைக்கப்பெற்ற செப்பேடுகள் தவிர வேறு எங்கிலும் இவர்கள் பெயரோ காலமோ குறிப்பிடப்படவில்லை. சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு ஆதாரப்பூர்வமாக எதுவும் இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை.

பாளி மொழியில் எழுதப்பெற்ற, இலங்கையின் வரலாற்று தகவல்களை தன்னகத்தே கொண்ட நூலான “மகாவம்சம்” வாயிலாக முற்காலச் சோழர்கள் பற்றிய தகவல்கள் நாம் பெறமுடிகின்றது. இது தவிர சற்றைக்குறைய முதலாம் நூற்றாண்டில் சோழநாட்டை பற்றியும் சோழ நகரங்கள் பற்றியும் குறிப்புகள் சோழ நாட்டுடன் வாணிபத்தில் ஈடுபட்டிருந்த கிரேக்கர்கள் எழுதிய குறிப்பேடுகள் வாயிலாக அறிய முடிகின்றது. அலெக்சாண்டிரியாவைச் சேர்ந்த வணிகர் ஒருவர் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் வாயிலாக சோழ வரலாறு குறித்து நாம் அறிய பெரிதும் உதவுகின்றன.
Super.waiting my posts like this.keep going
Super.waiting for many posts like this.keep going
Great effort… Keep it up