மனுநீதிச் சோழன் – எல்லாளன்

சங்கஇலக்கியங்களில் திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்ட மனு என்ற பெயர் கொண்ட மன்னர், பசுவிற்கு நீதி வழங்கும் பொருட்டுத் தன் மகனைத் தேர் ஏற்றிக் கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போன்ற நிகழ்வை இலங்கையின் சரித்திரக் குறிப்புகள் அடங்கிய பாளி மொழியில் எழுதப்பட்ட ‘மஹாவம்சம்’ எனும் நூலிலும் காணலாம். மேலும் மஹாவம்சம் நூலின் வாயிலாக கி.மு 205ல் இருந்து கி.மு 161ம் ஆண்டு வரை எல்லாளன் என்ற சோழ மன்னன் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு இலங்கையை 44 ஆண்டு காலம் ஆட்சி செய்தார் என்பதுவும் தெரியவருகின்றது. இதன் மூலம் சங்கஇலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சோழ மன்னர் மனுவும் மஹாவம்சம் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள சோழ மன்னர் எல்லாளனும் ஒருவரே எனக்கொள்ளலாம். சிலப்பதிகாரம் மற்றும் பெரிய‌ புராண‌ம் ஆகிய நூல்களிலும் மன்னர் மனு நீதி சோழனின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர் ஏறி கன்று கொல்லப்படுதல்
பசு சோழ மன்னனின் ஆராய்ச்சி மணியை அடித்தல்
இளவரசனை தேர்காலில் இட்டு கொல்லும் மனுநீதி சோழனின் தண்டனை
சிவபெருமான் கன்றையும், இளவரசனையும் உயிர்ப்பிக்கும் காட்சி
ஆந்திரப் பிரதேசத்தின், லேபாக்ஷி வீரபத்திரன் கோவில் விதான ஓவியம்
நன்றி Wikipedia

கி.மு 247க்கும் கி.மு 29 வரைக்கும் இடைப்பட்ட 218 ஆண்டு காலத்தில் 19 மன்னர்கள் அனுராதபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்துள்ளனர். இதில் 8 தமிழ் மன்னர்கள் 81 வருடங்களுக்கு மேல் அனுராதபுரத்தை ஆட்சி புரிந்துள்ளனர். தமிழ் மன்னர்கள் ஆண்ட 81 வருடங்களில் 44 வருடங்கள் மன்னர் எல்லாளன் அனுராதபுரத்தை ஆண்டார்.

நன்றி Google

மஹாவம்சம், மன்னர் எல்லாளனின் நீதி மற்றும் நேர்மையான ஆட்சியை மிகவும் புகழ்ந்துரைத்துள்ளது. ஆயினும் இவர் தவறான மார்க்கத்தினை (இந்து மதத்தினை) தழுவியவர் எனவும் குறிப்பிட்டுள்ளது. மன்னர் எல்லாளன் தனது ஆட்சியில் பெளத்த மதத்திற்கு ஆதரவு அளித்த போதிலும், தன் பழைய மதநம்பிக்கையைக் கைவிடவில்லை என மகாவம்சம் கூறுகிறது.

மன்னர் எல்லாளன் மக்கள் அனைவர்க்கும் சமநீதி வழங்கியதாகக் கூறும் மகாவம்சம், அவரது நீதிநெறி தவறாத ஆட்சியை மனுநீதிச் சோழனின் கதைகளோடு இணைத்து விவரித்துள்ளது. மன்னர் எல்லாளனின் படுக்கை அறையில் ஓர் ஆராய்ச்சிமணி கட்டப்பட்டிருந்ததாகவும், நீதி வேண்டுவோர் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கோட்டைவாசலில் தொங்கும் ஆராய்ச்சிமணியின் கயிற்றினை இழுக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளது.

கல் தேர், திருவாரூர்
கல் தேர், திருவாரூர்
கல்லில் செதுக்கப்பட்ட பசுவும், கன்றும், திருவாரூர்
இளவரசனை தேர்காலில் இட்டு கொல்லும் காட்சி, திருவாரூர்
நன்றி Google

மஹாவம்சம், மன்னர் எல்லாளன் எல்லா மதத்தையும் ஒன்றுபோல் பாவித்தார் என்று கூறுகிறது. மேலும் மகாவம்சத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு செய்தியின் வாயிலாக மன்னர் எல்லாளன் பெளத்த மதத்திற்கு ஆதரவளித்து போற்றிப்பாதுகாத்தார் என்பதை நாம் சந்தேகத்திற்கு இடமின்றி அறியலாம்.

மன்னர் எல்லாளன் அவரது தாய் மரணித்ததை அறிந்து தேரிலேறி சேத்தியகிரி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, தேரின் அச்சு தாதுகோபமொன்றில் பட்டு தாதுகோபத்திற்குச் சேதத்தை ஏற்படுத்தியது. தாதுகோபத்தில் பதினைந்து கற்களே சிதைவடைந்திருந்தன. அப்படியிருந்தும் அந்தத் தாதுகோபத்தை புனரமைக்க மன்னர் எல்லாளன் பதினையாயிரம் பணங்களைச் செலவிட்டதுடன் தன் தாயின் இறுதிக்கிரியைக்குச் செல்லாமல் தாதுகோபம் புனரமைக்கும் வரை அங்கேயே தங்கியிருந்தார் எனவும் மஹாவம்சம் வாயிலாக நாம் அறியமுடிகிறது. தாதுகோபம் எனப்படுவது புத்த பெருமானுடைய சரீரத்தை எரித்த சாம்பலும், அவரால் பயன்படுத்திய பொருட்களையும் வைத்துக்கட்டப்பட்ட வழிபாட்டு நினைவுச்சின்னம் ஆகும்.

மன்னன் களனிதீசனின் மகள் மகாதேவியாவாள். பின்னாளில் இவள் விகாரைமகாதேவி என்று அழைக்கப்பட்டாள். விகாரைமகாதேவியின் தாயாரான களனிதீசனின் மனைவி சித்ததேவி களனிதீசனின் தம்பியாருடன் கள்ள உறவு கொண்டிருந்ததாக மகாவம்சம் கூறுகிறது. மன்னர் எல்லாளனின் தோல்விக்கு விகாரைமகாதேவியே மிக முக்கிய காரணமாக அமைகிறாள். விகாரைமகாதேவி தன் அழகினால் மன்னர் எல்லாளனின் முக்கியமான கோட்டைத் தளபதிகளான மகேலனையும், தித்தம்பனையும் மணம் புரிவதாகக் கூறி சூழ்ச்சி செய்து மகேல நகரக் கோட்டையையும், அம்பதித்தகக் கோட்டையையும் கைப்பற்றிக் கொள்கிறாள். மஹாவம்சம் இதை சிறந்த ராஜதந்திரம் என்று வர்ணிக்கிறது.

உருகுணையின் மன்னனான காக்கவண்ணதீசன் ( காவன் தீசன் ) ஆட்சி பீடம் ஏறுவதற்காக உருகுணையின் தமிழ் இளவரசி ஐஸ்வர்யாவை மணந்திருந்தான். பின்னர் பெளத்த இளவரசனே ஆட்சிக்கு வரவேண்டுமென்ற ஆசையினால் விகாரைமகாதேவியினை மணந்தான். இந்த இருவர்களுக்கும் பிறந்தவனே பின்னாளில் துட்டகைமுனு அல்லது துட்டகாமினி என்று அறியப்பட்ட மன்னன். பிறந்ததில் இருந்தே இனவெறியூட்டப்பட்டு மன்னர் எல்லாளனை கொல்வது ஒன்றே நோக்கமென கூறி துட்டகாமினி வளர்க்கப்பட்டான் என மஹாவம்சம் கூறுகிறது.

மன்னர் காக்கவண்ணதீசன் இறந்தபிறகு மன்னரான துட்டகாமினி பெரும்படையுடன் மன்னர் எல்லாளனின் மீது படையெடுத்தான் என மஹாவம்சம் கூறுகிறது. மேலும் இப்படையெடுப்பை பற்றிய போதிய ஆதாரங்கள் மஹாவம்சத்தில் காணப்படுகின்றது. இறுதி யுத்தமானது விஜிதபுரவில் நடைபெற்றதாகக் கூறப்படுகின்றது. இறுதிப்போரில் மன்னர் எல்லாளனும் மன்னர் துட்டகாமினியும் யானை மீதமர்ந்து போர் புரிந்ததாகவும் இதில் மிகவும் வயதான 70வது வயதை எட்டிய மன்னர் எல்லாளனை வாலிப வயதினன் ஆன மன்னர் துட்டகாமினி கொன்றான் என மஹாவம்சம் கூறுகிறது.

எல்லாளனின் சமாதியென நம்பப்படும் தக்கின தாது கோபுரம், அனுராதபுரம்
நன்றி Wikipedia

விரோதியானாலும் மன்னர் எல்லாளனின் மீது பெருமதிப்பு கொண்டிருந்த மன்னர் துட்டகாமினி, மன்னர் எல்லாளன் இறந்த இடத்தில அவரின் நினைவைப் போற்றும் வகையில் ஸ்தூபம் அல்லது நடுகல் ஒன்றை கட்டினார்.

நன்றி Wikipedia

நீதிக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கும் மன்னர் எல்லாளன் அவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

About the author