இளஞ்சேட்சென்னி

முற்கால சோழர்களில் மனுநீதிச் சோழனுக்குப் பிறகு சோழர் பரம்பரையில் ஆட்சிக்கு வந்தவர் சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி. இவருடைய ஆட்சிக்காலம் குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. எனினும் இவர் கி.மு 3ஆம் நூற்றாண்டை ஒட்டிய காலகட்டத்தில் ஆட்சி செய்திருக்கலாம் என்று தெரிகிறது.

சங்க இலக்கிய நூல்களில் இருந்து மன்னர் இளஞ்சேட்சென்னியைப் பற்றிய தகவல்களை நாம் கிடைக்கப்பெறலாம். புறநானூற்றிலும், அகநானூற்றிலும் மன்னர் இளஞ்சேட்சென்னியைப் பற்றியப் பாடல்கள் உள்ளன. பரணர் என்னும் புலவரும், கழாத்தலையார் அல்லது பெருங்குன்றூர் கிழார் என்பவரும் மன்னர் இளஞ்சேட்சென்னியைப் பற்றியப் பாடியுள்ளனர்.

மன்னர் இளஞ்சேட்சென்னி கொடையிலும், போர்த் திறத்திலும் புகழ் பெற்றிருந்தார் என்பது இந்தப் பாடல்கள் வாயிலாகத் தெரிகிறது. வம்பர், வடுகர் ஆகியோரை மன்னர் இளஞ்சேட்சென்னி போரில் தோற்கடித்தார் என்று இவரைப் பற்றி அகநானூற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. புறநானூற்றில் உள்ள நான்காம் பாடல், மன்னர் இளஞ்சேட்சென்னியின் குதிரைப் படை, யானைப் படை பற்றிய குறிப்புக்களைத் தருகின்றது. மேலும் மன்னர் இளஞ்சேட்சென்னி குதிரைகள் பூட்டிய தேரில் வரும் காட்சியை சிவந்த சூரியனுக்கு உவமையாகக் கூறுகின்றது. மன்னர் இளஞ்சேட்சென்னி ரதங்கள் மிகவும் அழகுவாய்ந்தது எனவும் தெரிகிறது.

மன்னர் இளஞ்சேட்சென்னியின் ஆட்சி காலத்தில் சோழ சாம்ராஜ்யம் மிகவும் பலம் பொருந்திய அரசாக விளங்கியது. சேரர்கள் மற்றும் பாண்டியர்கள், சோழ சாம்ராஜ்ஜியத்திற்கு உட்பட்ட அரசர்களாக விளங்கினர்.

புகழ் பெற்ற மௌரியப் பேரரசின் மன்னரும், பேரரசர் ஆன சந்திரகுப்த மௌரியரின் மகனும் ஆன பிந்துசாரர் ஒருபெரும்படையைத் தென்இந்தியாவிற்கு அனுப்பினார். தென்இந்தியாவின் மேல் படையெடுத்துவந்த முதல் வடநாட்டு அரசரும் இவரே ஆவர். மௌரியப் படையும், கோசர் படையும் இணைந்து முதலில் தென்கன்னடம் என்னும் கொண்கனத்தின் கடற்கரைப் பகுதியான சிற்றரசான துளுநாட்டின் மீது போர் தொடுத்தது. போரில் தோல்வியடைந்த துளு நாட்டை ஆண்டுகொண்டிருந்த நன்னன் என்னும் தமிழ் மன்னன் நாட்டை விட்டு காட்டிற்குள் துரத்தப்பட்டார். கோசர்கள் துளு நாட்டின் தலைநகரான “பாழி” யை அரணாக்கி, வலிமைபடுத்தி அதனையே அவர்களது அடுத்த படையெடுப்பிற்க்குகான கோட்டையாக்கிக் கொண்டனர். இந்த விவரங்களை “அழியல் வாழி” எனத் தொடங்கும் குறுந்தொகைப் பாடல் வாயிலாக நாம் அறியலாம்.

“அழியல் வாழி தோழி நன்னன்
நறுமா கொன்று நாட்டிற் போக்கிய
ஒன்று மொழிக் கோசர் போல”
(குறுந்.73)

பிறகு கோசர் படை சேர நாட்டையும் , தென்கிழக்காக வந்து பாண்டிய நாட்டு எல்லையில் ஆட்சி செய்து கொண்டிருந்த கொங்குநாட்டு அரசன் பழையன் மோகூரயும், சோழ நாட்டு எல்லையில் இருந்த அழுந்தூர்வேள் திதியனையும் படிப்படியாக தாக்கினர்.

கொங்குநாட்டு அரசன் பழையன் மோகூர், கோசர் படையை பாண்டிய நாட்டு எல்லையில் தோற்கடித்து கோசர் படையை பின்வாங்கச் செய்தார். அழுந்தூர்வேள் திதியன் கோசர் படையை தோற்கடித்ததுடன் புறமுதுகிட்டு ஓடவும் செய்தார். இதுவரையில் எல்லைப் படைகளே போரில் ஈடுபட்டிருந்தன. கோசர் படையின் பெரும் தோவியைத் தொடர்ந்து , கோசர் படைக்குத் துணையாக மௌரியப் பேரரசு ஒரு பெரும்படையை அனுப்பியது. அந்தப் படை, மைசூரிலிருந்து தமிழகம் வரும் வழியில், படையைச் சேர்ந்த தேர்களும் சரக்கு வண்டிகளும் வருவதற்குத் தடையாயிருந்த பாறைகளையெல்லாந் தகர்த்து, பாதையைச் உருவாக்கி வந்தது. இதை அகநானுற்றுப் பாடல் வாயிலாக நாம் அறியலாம்.

“துனைகா லன்ன புனைதேர்க் கோசர்
தொன்மூ தாலத் தரும்பணைப் பொதியில்
இன்னிசை முரசங் கடிப்பிகுத் திரங்கத்
தெம்முனை சிதைத்த ஞான்றை மோகூர்
பணியா மையிற் பகைதலை வந்த
மாகெழு தானை வம்ப மோரியர்
புனைதேர் நேமி யுருளிய குறைத்த
இலங்குவெள் ளருவி யறைவாய்”
(அகம்.251)

மௌரியப் படைகள் மற்றும் கோசர் படைகளுடன் வடுகர் படைகளும் இணைத்து துளுவத்தில் தங்கி சோழ சாம்ராஜ்யத்தின் எல்லையில் அமைத்த சிற்றசுகளுடன் தொடர்ந்து போரில் ஈடுபட்டனர். இதுவரை சோழர்களுக்கு உட்பட்ட சிற்றசுகளே போரில் ஈடுபட்டுவந்தன.

மௌரியப் படைகள் வந்ததைத் தொடர்ந்து சோழ மன்னர் இளஞ்சேட்சென்னியும் பெரும் படையைத் திரட்டினார். இப்போரில் சோழப் படைகளும், சிற்றரசுகளின் படைகளும் இணைந்து செயல்பட்டன. மௌரியர், கோசர் மற்றும் வடுகர் படைகள் போரில் பெரும் தோல்வியைத் தழுவின. போரில் தோற்ற படைகள் துளுவ நாட்டிற்குப் பின்வாங்கின. மன்னர் இளஞ்சேட்சென்னி, மௌரியப் படைகள் மற்றும் கோசர் படைகளை துளுவ நாட்டிற்குத் துரத்திச் சென்று, பாழிக் கோட்டையை முற்றுகையிட்டு, அந்த கோட்டையை முழுவதும் தரைமட்டமாக்கினார். சோழ மன்னர் இளஞ்சேட்சென்னி மௌரியரும், கோசரும் சேர்ந்த பெரும் படையைத் தோற்கடித்தவர் என்று அகநானூற்றுப் பாடல்களில் புகழப்படுகின்றார்.

“முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்றிசை மாதிரம் முன்னிய வரவிற்கு
விண்ணுற வோங்கிய பனியிருங் குன்றத்
தொண்கதிர்த் திகிரி யுருளிய குறைத்த
அறையிறந்து”
(அகம்.281)

“எழாஅத் திணிதோட் சோழர் பெருமகன்
விளங்குபுகழ் நிறுத்த இளஞ்சேட் சென்னி
குடிக்கட னாகலிற் குறைவினை முடிமார்
செம்புறழ் புரிசைப் பாழி நூறி
வம்ப வடுகர் பைந்தலை சவட்டி
கொன்ற யானை”
(அகம்.375)

மன்னர் இளஞ்சேட்சென்னி, அழுந்தூர் வேளிர் குல இளவரசி ஒருத்தியை மணந்தார். இவ்விருவருக்கும் பிறந்தவனே, முற்காலச் சோழர்களுள் மிகவும் புகழ் பெற்றவனும், உலகப் புகழ் பெற்ற கல்லணையை ஆன சோழ மன்னர் கரிகால சோழன். கரிகால சோழன் சிறுவனாய் இருந்த போது மன்னர் இளஞ்சேட்சென்னி இருங்கோவேள் என்பவனால் கொல்லப்பட்டார்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *