கரிகாற் சோழனுக்குப் பின் சோழ அரசனாக பதவி ஏற்றவர் நலங்கிள்ளி. நலங்கிள்ளிகும், நெடுங்கிள்ளி என்னும் இன்னொரு சோழனுக்கும் ஏற்பட்ட அதிகாரப் போட்டி அல்லது உள்நாட்டுக் கலவரம் காரணமாக சோழ நாடு சீரழிந்ததாக சங்க இலக்கியங்கள் மூலம் தெரிய வருகின்றது.
நலங்கிள்ளி மன்னர் கரிகால சோழனின் மகனாக நம்பப்பட்டாலும் அதை உறுதிப்படுத்தும் விதமாக ஏந்த ஒரு அத்தாட்சியும் இது வரை சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை.
புறநானூற்றில் குறைத்தது 14 பாடல்கள் நலங்கிள்ளியைப் பற்றி புலவர்கள் பாடியுள்ளார்கள். நலங்கிள்ளியைப் பற்றி புறநானூற்றில் அதிகமாக பாடல்களை இயற்றியவர் கோவூர்கிழார்.
காவிரிப்பூம்பட்டினத்தில் நலங்கிள்ளி சோழப் பேரரசனாக பதவியேற்றதும், ஆவூரில் சோழர் பரம்பரையின் இன்னொரு கிளையின் வழி வந்த நெடுங்கிள்ளிக்கும் பகைமை ஏற்பட்டது . இதைத் தொடர்ந்து நெடுங்கிள்ளியின் படைகள் உறையூருக்குச் சென்று அதை ஆக்கிரமித்தது.
இதை அறிந்த நலங்கிள்ளி ஆவூரில் இருந்த நெடுங்கிள்ளி மேல் படையெடுத்து சென்றார். நலங்கிள்ளியுடன் போர் புரியப் பயந்து நெடுங்கிள்ளி கோழை போல் போர் புரியாமல் ஆவூர் கோட்டையின் கதவுகளை அடைத்து கோட்டைக்கு உள்ளேயே இருந்தார். இதைத் தொடர்ந்து மன்னர் நலங்கிள்ளி ஆவூர் கோட்டையை முற்றுகையிட்டார்.
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து,
அலமரல் யானை உரும் என முழங்கவும்,
பால் இல் குழவி அலறவும், மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்!
அறவை ஆயின்,’ நினது’ எனத் திறத்தல்;
மறவை ஆயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லையாக,
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின்
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே.
இரும் பனை வெண் தோடு மலைந்தோன் அல்லன்;
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே
கோட்டையின் உள்ளே அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது
ஆவூர் கோட்டையினுள் இருந்த நெடுங்கிள்ளி அங்கு இருந்து உறையூர் கோட்டைக்குத் தப்பிச்சென்றார். அவர் எவ்வாறு ஆவூர் கோட்டையில் இருந்து உறையூர் கோட்டைக்கு சென்றார் என்பது பற்றிய தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
இதைத் தொடர்ந்து மன்னர் நலங்கிள்ளி உறையூர் கோட்டைக்குச் சென்று அதை முற்றுகையிட்டார். பொதுமக்கள் இந்த முற்றுகையால் மிகவும் பாதிப்படைந்தார்கள். பொதுமக்களின் துயர் கண்டு வருந்திய கோவூர்கிழார் எனனும் புலவர் இரு மன்னர்களிடமும் சென்று போரை நிறுத்துமாறு அறிவுரை கூறினார்.
நீங்கள் சண்டையிடுவது பாண்டியரிடமோ அல்லது சேரரிடமோ அல்ல இன்னொரு சோழனிடம். இருவரில் யார் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைவது இன்னொரு சோழன்தான் என்று உண்மையை எடுத்துரைத்தார். இதனால் போரை நிறுத்தி இருவரையும் சமாதானமாக போகச் சொல்லி அறிவுரை வழங்கினார்.
பொதுமக்களின் துயர் துடைக்க எண்ணிய நலங்கிள்ளி அவருடைய உறையூர் முற்றுகையை விலக்கிக்கொண்டார். உறையூரரை தலைநகராகக் கொண்டு நெடுங்கிள்ளியை ஆட்சி செய்துவந்தார்.
நெடுங்கிள்ளி பகைமையை மறக்காமல் மன்னர் நலங்கிள்ளியை தோற்கடிக்க எண்ணி தொடர்ந்து இன்னல்கள் பலவும் நலங்கிள்ளிக்கு செய்தார். பிற்காலத்தில் காரியாறு என்ற இடத்தில நடந்த போரில் நலங்கிள்ளி நெடுங்கிள்ளியை போரில் கொன்றார்.
பேரரசன் ஆகிய நலங்கிள்ளி தொடர்ந்து பாண்டிய நாட்டுடன் போர்கள் பல புரிந்தார். நலங்கிள்ளியிடம் மிகவும் வலிமை மிக்க கடற்படை, குதிரைப் படை இருந்தன. நலங்கிள்ளி போருக்கு தேர்மீது ஏறி செல்லும் பழக்கம் உடையவர். நலங்கிள்ளியின் காலாட்படைகள் மூவகைப்படும். துரசிப்படை, இடையணிப்படை, இறுதியணிப்படை என்று மூன்று வகையா காலாட்படை பிரிக்கப்பட்டடிருந்தது. பாண்டிய நாட்டில் அரண் மிக்க வலிய கோட்டைகள் ஏழு இருந்தன. நலங்கிள்ளி அவற்றைக் கைப்பற்றி, அவற்றில் தன் புலிக் கொடியை ஏற்றினர்.
மன்னர் நலங்கிள்ளியின் படை மிகப் பெரியது. ஆலத்தூர் கிழார் எனும் புலவர் எவ்வளவு பெரியது என்பதை ஓர் உவமையால் தெரிவிக்கிறார்.
தலையோர் நுங்கின் தீங்சோறு மிசைய,
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்,
கடையோர், விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர,
நிலமார் வையத்து வலமுறை வளைஇ,
வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு,
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள், இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை,
முள்ளுடை வியன்காட் டதுவே-நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்?
இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்,
தூக்கணம் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி,
ஞாலங் காவலர் கடைத்தலைக்,
காலைத் தோன்றினும் நோகோ யானே
(புறம் 225)
பனங்காய் நுங்கு தின்னும் காலம், அது பழுத்துப் பனம்பழமாகி பனம்பழம் தின்னும் காலம், பனம்பழம் நிலத்தில் புதைக்கப்பட்டு அது முளைத்து வளரும் பழங்கிழங்கைத் தின்னும் காலம் ஆகிய மூன்று கால இடைவெளிகளை உவமையாக்கிப் காட்டுகிறார். முன்னே செல்லும் படை நுங்கு தின்னுமாம். இடையில் செல்லும் படை பனம்பழம் தின்னுமாம். கடைசியில் செல்லும் படை பனங்கிழங்கு தின்னுமாம். இது மிகப்பெரிய படை என்பதைக் காட்டும் உயர்வு நவிர்ச்சி அணி.
கோவூர்கிழார் பாடியது கொண்டு நலங்கிள்ளி மிகப்பெரிய பேரரசன் எனவும் வடநாட்டு அரசர்களும் இவரை கண்டு அஞ்சி நடுங்கினர் என்பதுவும் தெரியவருகிறது.
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
‘போர்’ எனின், புகலும் புனை கழல் மறவர்,
‘காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய;
செல்வேம் அல்லேம்’ என்னார்; ‘கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
வல முறை வருதலும் உண்டு’ என்று அலமந்து,
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.
நலங்கிள்ளி இலவந்திகை எனும் இடத்தில் இறந்தார் எனத்தெரிகிறது. எந்த இடத்தில இறந்தார். இறந்ததிற்கான காரணம் என்ன என்றோ இதுவரை அறியப்படவில்லை.
Comments