சோழ மன்னர் பெருநற்கிள்ளியின் ஆட்சிக்கு பிறகு சுருங்கத்தொடங்கிய சோழப்பேரரசு, தொடர்ந்து தனது வலுவையும் நிலங்களையும் இழந்து நிலை தாழ்ந்து சிற்றரசர்களாக நீண்டகாலம் இருந்தது. இந்த நிலையை மாற்றி சோழப்பேரரசின் பெருமையை மீண்டும் தமிழகத்தில் நிலை நிறுத்தியவர் மன்னர் விஜயாலய சோழன்.
சோழக் குறுநில மன்னர் ஸ்ரீ காந்த ஸ்ரீ மனோகரச் சோழனின் மகனான விஜயாலய சோழன் கி.பி 850இல் சிற்றரசனாக உறையூரில் பதவி ஏற்றார். அக்காலத்தில் திருச்சி, மாயவரம் மற்றும் சிதம்பரம் ஆகிய சிறு நிலப்பரப்பையே சோழ மன்னர்கள் ஆண்டு வந்தனர்.
பாண்டியரும், பல்லவர்களும் மிகவும் பலம் பெற்று விளங்கிய அந்த காலகட்டத்தில் மற்ற சிற்றரசர்கள் பாண்டியர்களையோ அல்லது பல்லவர்களையோ சார்ந்தே இருந்துவந்தனர்.
முத்தரையர்கள்
இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க மற்றும் ஓர் குறுநில மன்னர்களான முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை அவர்கள் வசப்படுத்தி ஆட்சி புரிந்து வந்தனர்.செந்தலையில் கிடைத்த கல்வெட்டுகள் வாயிலாக இவர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று தெரிகிறது.
முத்தரையர்கள் மற்ற குறுநில மன்னர்களை போலவே, சுதந்திர ஆட்சியை தனித்து நிலைநாட்ட முடியாமல், பாண்டியர்களுடனோ அல்லது பல்லவர்களுடனோ நட்பு கொள்ளவேண்டியிருந்தது. மேலும் கல்வெட்டுகள் மூலமும் மற்றும் இவர்கள் பெற்ற விருதுகள் மூலமும் முத்தரையர்கள் தங்கள் முன்னேற்றத்தை மட்டும் நோக்கமாகக்கொண்டு அவ்வப்போது தங்கள் ஆதரவை மாற்றிக் கொண்டனர் என்பது விளங்குது.
பாண்டிய மன்னர் வரகுணவர்மனின் ஆட்சி காலத்தில், விருப்பதினாலோ அல்லது வற்புறுதலினாலோ முத்தரையர்களின் மன்னர் இளங்கோ முத்தரையர்கள் ஆதரவை பாண்டியர்களுக்கு அளித்தார். இதைத் தொடர்ந்து பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையில் போர் மூண்டது.
இந்த சமயத்தை பயன்படுத்தி சோழ மன்னர் விஜயாலய சோழன் தஞ்சை மீது படை எடுத்துச் சென்றார். போரில் விஜயாலய சோழன் வெற்றி பெற்று தஞ்சையை அவரது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இந்த போரின் மூலம் தமிழகத்தில் முத்தரையர்கள் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது. போரில் வென்ற விஜயாலய சோழன் பல்லவர்ககள் ஆதிக்கத்திலிருந்து சோழ நாடு விடுதலை பெற்றதாக அறிவித்தார்.

புதுக்கோட்டையில் உள்ள நார்த்தாமலை மீது விஜயாலய சோழீஸ்வரம் என்ற கோவில் உள்ளது. இக்கோவிலின் வெளிப்புறச் சுவரில் காணப்படும் கல்வெட்டுமூலம் இக்கோவில் சாத்தன் பூதி என்பவரால் கட்டப்பட்டதாகத் தெரிகின்றது. பெரும் மழையினால் சிதிலமடைந்த இந்தக் கோவிலை மல்லன் விடுமன் என்பவர் இதை விஜயாலய சோழன் காலத்தில் புதுப்பித்தார் என்று கல்வெட்டுகள் கூறுகின்றன. விஜயாலய சோழன் காலம் முதல் இக்கோவில் விஜயாலய சோழீஸ்வரம் என்று பேர்பெற்று விளங்குகிறது. சோழர்கள் கட்டிய மிகவும் புராதாணமான கோவில்களில் இதுவும் ஒன்று.
இடவை போர்
முத்தரையர்களின் வீட்சியைத் தொடர்ந்து பாண்டிய மன்னன் வரகுணவர்மனின் படைகள் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தன. பாண்டியனின் படைகள் இடவை என்ற இடத்தில போர் களம் அமைத்து சோழப் படைகளுடன் போரிட்டன. இந்த போரில் பாண்டியர்களின் படைகள் பெரிய தோல்வியை சந்தித்தது.
சோழ நாட்டின் ஏழுச்சி கண்டு பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னர் வரகுணவர்மனுக்கும் இடையே ஓர் போர் உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால் போர் துவங்குவதற்கு முன்பே பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மர் இறந்தார். மூன்றாம் நந்திவர்மன் இறந்ததைத் தொடர்ந்து அவரது இரண்டு மகன்களாகிய நிருபதுங்கவர்மனுக்கும் மற்றும் கம்பவர்மனின் மகனாகிய அபராஜிதவர்ம பல்லவனுக்கும் இடையே யார் அடுத்த பல்லவ மன்னன் என்பது குறித்து சண்டை ஏற்படுத்து.
நிருபதுங்கவர்மனுக்கு பாண்டியர்கள் ஆதரவு அளித்தனர். அபராஜிதவர்ம பல்லவனுக்கு கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி மற்றும் விஜயாலய சோழன் ஆதரவு கிட்டியது.
இரண்டாகப் பிரிந்த பல்லவ சகோதரர்களால் தமிழ் நாட்டில் பெரும் போர் மூண்டது. திருப்புறம்பியம் எனும் இடத்தில் நடத்த போர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராகக் கருதப்படுகிறது.
திருப்புறம்பியம் போர்
பல்லவ சகோதரர்கள் மற்ற அரசர்கள் துணை கொண்டு பெறும் போரில் ஈடுபட்டார்கள். கொள்ளிடத்தின் கரையில் கும்பகோணதிற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற ஊரில் இந்த போர் நடை பெருது. முதுமையின் காரணத்தால விஜயாலய சோழனுக்கு மாறாக அவர் மகன் முதலாம் ஆதித்த சோழனின் தலைமையில் சோழ படைகள் போருக்கு வந்தன.
வரலாற்று சிறப்புமிக்க இந்த திருப்புறம்பியப் போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்மன் படைகள் பெரும் தோல்வித் தழுவின. இப்போரில் கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி இறந்தார். போரில் கிடைத்த வருவாயின் பெரும் பகுதி ஆதித்த சோழனுக்குக் கிட்டியது. போரின் முடிவில் சோழர்களின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தன. அடுத்த 400 ஆண்டுகளுக்குச் சோழப் பேரரசு தென்இந்தியாவை ஆள இந்தப் போர் ஒரு தொடக்கமாக அமைத்ததாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.
இந்தப் போரைத் தொடர்து குறுநில மன்னராக விளங்கிய ஆதித்த சோழன் போரில் பெற்ற செல்வதை சோழ சாம்ராஜ்ய விஸ்தரிப்புக்காக பயன்படுத்தினார். ஆதித்தய சோழனுக்கும் அபராஜிதவர்ம பல்லவனுக்கு இடையில் நடந்த மற்றும் ஒரு போரில் அபராஜிதவர்ம பல்லவன் இறந்தார். தொடர்ந்து போர்கள் பல புரிந்து பாண்டியர்கள், பல்லவர்கள் மற்றும் பல குறுநில மன்னர்களை வென்று ஆதித்தய சோழன் சோழப் பேரரசை விஸ்தரித்தார்.
Comments