ஆதித்ய சோழன்

கி.பி 850இல் சிற்றரசறாக உறையூரில் பதவி ஏற்றார் மன்னர் விசயாலய சோழன். இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க குறுநில மன்னர்களான விளங்கிய முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் ஆட்சி புரிந்து வந்தனர்.செந்தலையில் கிடைத்த கல்வெட்டுகள் மூலம் இவர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று தெரிகிறது. பரகேசரி விசயாலய சோழன் முத்தரையர்களை போரில் வென்று தஞ்சையை சோழ ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இந்தப் போரின் மூலம் தமிழகத்தில் முத்தரையர்கள் ஆட்சி முழுவதுமா முடிவுக்கு வந்தது.

பரகேசரி விசயாலய சோழனின் தஞ்சை வெற்றிக்கு பிறகு சோழ ராஜ்ஜிய விஸ்தரிப்பைத் தடுக்கும் பொருட்டு பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னர் இரண்டாம் வரகுணவர்மனுக்கும் இடையே ஒரு போர் உடன்படிக்கை ஏற்பட்டது. ஆனால் மூன்றாம் நந்திவர்மன் இறந்ததை தொடர்ந்து அவரது இரண்டு மகன்களாகிய நிருபதுங்கவர்ம பல்லவன் மற்றும் அபராஜிதவர்ம பல்லவனுக்கிடையே யார் அடுத்த பல்லவ மன்னன் என்பது குறித்து சண்டை ஏற்பட்டது.

நிருபதுங்கவர்ம பல்லவனுக்கு பாண்டியர்கள் ஆதரவு அளிக்க, அபராஜிதவர்ம பல்லவனுக்கு கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி மற்றும் விஜயாலய சோழன் ஆதரவு அளித்தனர்.

இரண்டாகப் பிரிந்த பல்லவ சகோதரர்களால் தமிழ் நாட்டில் பெரும் போர் மூண்டது. திருப்புறம்பியம் எனும் இடத்தில் நடத்த போர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராகக் கருதப்படுகிறது. வயதான காரணத்தினால் விஜயாலய சோழனுக்கு மாறாக அவர் மகன் முதலாம் ஆதித்ய சோழன் தலைமையில் சோழப் படைகள் போருக்கு வந்தன.

திருப்புறம்பியத்தில் கி பி 879ல நடந்த இந்த வரலாற்று சிறப்புமிக்க போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்ம பல்லவன் படைகள் பெரும் தோல்வியை அடைந்தன. இப்போரில் கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி இறந்தார். போரில் கிடைத்த வெற்றியின் பரிசாக பெரும் நிலப்பகுதியை ஆதித்தய சோழனுக்கு அபராஜிதவர்ம பல்லவன் அளித்தார். போரின் முடிவில் ஆதித்தய சோழனின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தது. பாண்டியர்களின் வசம் இருந்த சாம்ராஜ்யத்தின் பெரும்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டது. திருப்புறம்பியப் போரில் தோல்வி அடைந்த பாண்டிய மன்னர் இரண்டாம் வரகுணவர்மன் ராஜ வாழ்கையத் துறந்து துறவறம் மேற்கொண்டார். இந்த திருப்புறம்பியப் போரானது அதைத் தொடர்ந்த 400 ஆண்டுகளுக்கு சோழப் பேரரசு தென்இந்தியாவை ஆள ஒரு ஆரம்பமாக அமைந்தது.

பின்னர் ஏற்பட்ட ஒரு போரில் ஆதித்ய சோழன் பலம் மிக்க பல்லவப் பேரரசன் அபராசிதவர்மனை தோற்கடித்து, அவரது ஆட்சியைக் கைப்பற்றினான் என்று திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

கி பி897ல காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த பல்லவப்பேரரசின் கடைசி மன்னனா அபராஜிதவர்ம பல்லவனுக்கும் ஆதித்தய சோழனுக்கு நடந்த ஒரு போரில் அபராஜிதவர்ம பல்லவன் இறந்தார். ஒரு யானையின் மீது அமர்ந்திருந்த பல்லவ மன்னன் மீது பாய்ந்து அவனை ஆதித்ய சோழன் கொன்றான் என்று கன்னியாக்குமரிக் கல்வெட்டுகள் கூறுகிறது. இதன் மூலம் தொண்டை மண்டலத்தை ஆண்டு வந்த பல்லவ மன்னர்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது. இதன் மூலம் தொண்டைநாடு பாவிய இராசகேசரிவர்மன் என்ற பட்ட பெயர் ஆதித்ய சோழனுக்குக் கிடைக்குது.

தில்லைஸ்தானம் என்னுமிடத்திலுள்ள ஒரு கல்வெட்டு மூலம் இராசகேசரிவர்மன் தன் இராஜ்ஜியத்தை இராஷ்டிரகூடர்களின் எல்லைவரை பரப்பினான் என்று தெரிகின்றது. இதைத்தொடர்ந்து விரைவிலேயே கங்கர் மன்னனும் ஆதித்தய சோழனின் தலைமையை ஏற்றார். தஞ்சாவூர் பட்டணத்தில் பேரரசனாக முடி சூட்டிக்கொண்ட பின் ஆதித்தய சோழன் கொங்கு தேசத்திற்கு வந்து அதை ஆண்டு கொண்டிருந்த பாண்டிய மன்னர் பராந்தக வீரநாராயணரை வெற்றிகொண்டார் என்று கொங்கு தேச ராஜாக்கள் என்னும் குறிப்பேடு கூறுகிறது.

இந்த காலகட்டத்தில் சேர மன்னனின் ஆட்சிப்பகுதி தவிர தென்இந்தியாவின் மொத்த நிலப்பரப்பும் சோழப் பேரரசின் ஆட்சிக்குக் கீழ இருந்தது. ஆதித்தய சோழன் காலத்தில் வாழ்ந்த சேரமன்னன் தாணுரவி என்பவனுடன் ஆதித்தய சோழன்நெருங்கிய உறவு கொண்டிருந்தான் என்று தில்லைத்தானத்திலுள்ள ஆண்டு குறிப்பிடாத ஒரு கல்வெட்டு கூறுகிறது. இது தவிர ஆதித்தய சோழனின் மகன் முதலாம் பராந்தக சோழன் சேரமன்னன் தாணுரவியின் மகளை மணந்தார் என்பதும் தெரிகிறது.

முதலாம் ஆதித்தயவர்ம சோழன் அவர் காலத்தில் அதிகமாகக் கோவில்கள் கட்டினார். காவிரியின் இரு கரைகளிலும் எண்ணற்ற சிவாலயங்களைக் கட்டுவித்தார் என அன்பில் செப்பேடுகள் கூறுகின்றன. குறைந்தது 50ல் இருந்து 108 சிவாலயங்கள் வரை கட்டப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

ஆதித்தயவர்ம சோழன் பள்ளிப்படை

சோழப் பேரரசர் இராசகேசரிவர்ம ஆதித்தயவர்ம சோழன் சித்தூர் மாவட்டம் காளத்தியின் அருகேயுள்ள தொண்டமானாற்றூர் என்னுமிடத்தில் இறந்தார். இவனது மகன் பராந்தகன், ஆதித்தயவர்ம சோழன் இறந்த இடத்தில் அவருக்குப் பள்ளிப்படை அமைத்தார். இப்போது இந்த இடம் தொண்டைமானாடு என்று அழைக்கப்படுகிறது. முதலாம் பராந்தக சோழனைத்தவிர, ஆதித்தயவர்ம சோழனுக்கு கன்னரதேவர் என்ற மற்றொரு மகனும் இருந்தார். சோழ பேரரசர் ஆதித்தய சோழனின் மறைவுக்கு பிறகு அவர் மகன் முதலாம் பராந்தக சோழப் பேரரசராக பதவி ஏற்றார்.

About the author