சோழர்களின் வரலாற்றில் ஒரு நீங்காத இடம் பிடித்தவர் பெரியபிராட்டி பேரரசி செம்பியன் மாதேவி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் சோழ மண்டலத்தை ஆண்ட ஐந்து மன்னர்களை உருவாக்கியவர் பேரரசி செம்பியன் மாதேவி. இவரின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையில் ஏறக்குறைய 50 முதல் 60 ஆண்டுகள் வரை சோழ மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது. தமிழர்களின் வீரம் மற்றும் இறைபக்தியின் அடையாளமாகத் திகழ்ந்தவர் செம்பியன் மாதேவி. அவரது 13ம் வயதில் கண்டராதித்ய சோழரை மணந்து, மதுராந்தக சோழரைப் பெற்றெடுத்தார். செம்பியன் மாதேவியின் 15 வது வயதில் கண்டராதித்ய சோழர் இறந்தார்.
முதலாம் பராந்தக சோழனுக்கு பிறகு ஆட்சிக்கு வந்தவர் கண்டராதித்தர். இவர் கி.பி 950 தொடக்கம் 955 வரை சோழ நாட்டை ஆண்டார். முதலாம் பராந்தக சோழன் காலத்திலேயே சோழநாட்டின் வடக்கே இராஷ்டிரகூடர்கள் பலமடைந்து இருந்தனர். கண்டராதித்தரின் ஆட்சியின்போது அவர்கள் தஞ்சைக்கு முன்னேறி அதனைத் தாக்கினர். சோழர்கள் பலமிழந்திருந்த இச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதுவரை சோழருக்குக் கீழ்ப்பட்டுத் திறை செலுத்தி வந்த பாண்டிய நாடும் சோழர் மேலாதிக்கத்தை உதறினர். பலமுறை முயன்றும் போர்கள் பல புரிந்தும் சோழநாட்டின் எல்லைகள் குறுகுவதைக் கண்டராதித்தரால் தடுக்க முடியவில்லை.

செம்பியன் மாதேவி அவரது மகன் மதுராந்தகன், கொழுந்தனார் சுந்தர சோழரின் மகன்களான ஆதித்த கரிகாலன், அருள்மொழிவர்மன், மற்றும் சுந்தர சோழரின் மகளான குந்தவைப் பிராட்டியையும் பொறுப்புடன் வளர்த்தார். சோழப் பேரரசில் கண்டராத்தினார் மறைந்த பிறகும், ஆதித்த கரிகாலன் மறைந்த பிறகும் ஏற்பட்ட சங்கடமான சூழலில் பட்டத்திற்கு உரியவர் யாரென்று ஆலோசனை கூறியவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவி. ராஜராஜ சோழன் என்னும் அருள்மொழிவர்மன் சிறந்த சிவபக்தனாக விளங்கியதற்கும், தஞ்சை பெருவுடையார் கோவிலை கட்டுவதற்கும் மிக முக்கியக் காரணமாக இருந்தவர் பெரியபிராட்டி செம்பியன் மாதேவியார்
செம்பியன் மாதேவி கண்டராதித்ய சோழரின் மறைவுக்குப் பின்னர் அரிஞ்சய சோழனை அரசனாக்கினார். இவர் முதலாம் பராந்தக சோழன்னின் மகன் மற்றும் கண்டராதித்த சோழனின் தம்பியும் ஆவர். வடக்கிலும், தெற்கிலும் சோழ நாடு சுருங்கிப் போன ஒரு கால கட்டத்தில் பட்டத்துக்கு வந்த இவர், சோழ நாட்டின் வடக்குப் பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த இராட்டிரகூடர்களை அகற்றுவதற்கு படையேடுத்துச் சென்றார். ஆற்றூர் என்னுமிடத்தில் நடந்த போரில் இவர் வீர மரணம் தழுவினார். அரிஞ்சய சோழனுக்கு அந்த ஊரில் பள்ளிப்படை அமைக்கப்பட்டது. இவரது ஆட்சி மிகக் குறுகிய காலமாக சில மாதங்கள் மட்டுமே நிலைத்திருந்தது
அரிஞ்சய சோழனுக்குப் பின் அவரது மகன் சுந்தர சோழரை மன்னராக அரியணை ஏற்றி வைத்தார் பெரியபிராட்டி. இடைக்காலச் சோழர்களில் பலம் வாய்ந்த மன்னர்களில் ஒருவராக விளங்கியவன் சுந்தர சோழன். இவர் இரண்டாம் பராந்தகச் சோழன் என்றும் அழைக்கப்பட்டார். இவர் கி.பி 957 முதல் 973 வரை 16 ஆண்டுகள் சோழ நாட்டை ஆண்டார். இவர் முதலாம் பராந்தகச் சோழனின் பேரனும், அரிஞ்சய சோழனின் மகனும் ஆவார். முன்னோர்கள் காலத்தில் இழந்த நிலப்பகுதிகளை மீட்டுச் சோழ நாட்டை வலிமையுள்ள நாடாக மாற்றியவர் இவர். தெற்கே திறை செலுத்த மறுத்துவந்த பாண்டிநாட்டின் மீது படை நடத்தி வெற்றிகண்டார். வடக்கிலும் இராஷ்டிரகூடர்களிடம் இழந்த பகுதிகளைக் கைப்பற்றும் பொருட்டு அவர்களுடன் போரிட்டு அவற்றை மீண்டும் சோழ நாட்டின் ஆட்சிக்கு உட்படுத்தினார்.
கி.பி 969 ஆம் ஆண்டில் சுந்தர சோழனின் மூத்த மகனும் மிகப் பெரிய வீரனுமான, இரண்டாம் ஆதித்தன் சந்தேகத்துக்கு உரிய முறையில் எதிர்பாராத சூழ்நிலையில் கொல்லப்பட்டார். இதனால் மிகவும் மனம் வருந்திய மன்னன் சுந்தர சோழன் நோயுற்று கி.பி 973 ல் காலமானார். காஞ்சிபுரத்தில் பொன்னாலான மாளிகையில் சுந்தரசோழன் இறந்தார். அதனால் ‘பொன் மாளிகைத் துஞ்சின தேவன்’ என்றே அழைக்கப்பட்டார். மலையமான்களின் பரம்பரையைச் சேர்ந்த வானவன் மாதேவி என்ற இவர் மனைவி, கணவன் இறந்ததும் உடன்கட்டை ஏறினாள். இம்மன்னனுடைய சிலை ஒன்று இவள் மகள் குந்தவையால் தஞ்சைக்கோயிலில் வைக்கப்பட்டது.தலைசிறந்த தமிழ் புதினங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் இவருடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற சம்பவங்களைத் தழுவியே எழுதப்பட்டுள்ளது.
சுந்தர சோழனின் மறைவுக்குப் பிறகு ராஜமாதா செம்பியன் மாதேவி உத்தமசோழர் என்று அழைக்கப்பட்ட அவரது மகன் மதுராந்தக சோழரை மன்னராக்கினார். உத்தமசோழர் 12 ஆண்டுகள் சோழநாட்டை ஆட்சி புரிந்தார். இவர் சிறந்த முறையில் நாட்டை ஆட்சி செய்ததாகத் தெரிகிறது. உத்தமசோழரின் மறைவுக்குப் பின்னர் உலகப் புகழ் பெற்ற சோழப் பேரரசன் ராஜராஜ சோழன், சோழ மன்னராக அரியணை ஏறினார்.
கணவர் மறைவுக்கு பின்னர் முற்றிலும் சிவஞானியான செம்பியன் மாதேவி, மண்ணாலும் சுடுகல்லாலும் கட்டிச் சிதைந்துபோன சிவாலயங்களைப் புதிதாகக் கட்டினார். வெகு தொலைவில் இருந்து, கருங்கற்களைக் தருவித்து ஏராளமான சிற்பிகளைக் கொண்டு பிரசித்தி பெற்ற 10 சிவாலயங்களை நிர்மாணித்து சிவத்தொண்டாற்றினார்.
திருநல்லம் (கோனேரிராஜபுரம்)
திருமுதுகுன்றம் (விருத்தாச்சலம்)
திருவாரூர் அரநெறி ( அசலேஸ்வரர் கோயில்)
திருமணஞ்சேரி
தெங்குரங்காடுதுறை (ஆடுதுறை)
திருக்கோடிக்காவல்
ஆதாங்கூர்
குத்தாலம்
திருவக்கரை
திருச்சேலூர்
கும்பகோணம் அருகே உள்ள கோணேரி ராசபுரத்தில் கண்டராதித்தேஸ்வரம் என்ற பெயரில் சிவாலயத்தை நிறுவி உலகிலேயே பெரிய அளவில் தொன்மையான ஐம்பொன் நடராஜர் சிலையை நிறுவினார் செம்பியன் மாதேவி. அதே கோவிலில் ஐம்பொன்னாலான செம்பியன் மாதேவி சிலையை அவரது மகனும் பட்டத்தரசருமான உத்தமச் சோழர் நிறுவினார்.
அவருக்கு பின்னர் பேரன் ராசராசசோழனை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்து 1001 ஆம் ஆண்டில் இறைவனடி சேர்ந்தார் செம்பியன்மாதேவி. 1019 ஆம் ஆண்டில் செம்பியன் மாதேவியை, பார்வதியின் அவதாரமாக கருதி, நாகப்பட்டினம் அருகே உள்ள கைலாசநாதர் கோவிலில் கல்லால் ஆன செம்பியன்மாதேவி சிலையை மன்னர் முதலாம் ராஜேந்திர சோழர் அமைத்தார். இன்று வரை அங்கு பூஜை நடைபெற்று வருகிறது.
Comments