தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கியமான கோயில்களில் ஒன்று காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயில். வைஷ்ணவ திருக்கோயில்களில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இந்தத் திருக்கோயில். இது சென்னைக்கு அடுத்த காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள முப்பதோராவது திவ்ய தேசமாகும். இந்த திருக்கோயில் திருக்கச்சி, ஹஸ்திகிரி, வேழமலை, அத்திகிரி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது.

இக்கோயில் எப்பொழுது யாரால் கட்டப்பட்டது என்பது தெரியவில்லை. எனினும் கி பி 1053 இல் சோழர்களால் இக்கோயில் விரிவாக்கப்பெற்றது என்று கல்வெட்டுகளின் மூலம் அறியபடுகிறது. முதலாம் குலோத்துங்க சோழனும், விக்கிரம சோழனும் கோயிலை விரிவுபடுத்திக் கட்டியுள்ளனர். பதினான்காம் நூற்றாண்டில் தாயார் சன்னதியும், அபிஷேக மண்டபமும் கட்டப்பட்டன. விஜயநகர அரசர்களின் ஆட்சி காலத்தில் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம் மற்றும் கல்யாண மண்டபங்கள் கட்டப்பட்டன.

கல்யாண மண்டபம், வரிசைக்கு பன்னிரண்டு தூண்கள் வீதம் எட்டு வரிசைகளில் 96 சிற்பகலை மிக்க ஒரே கல்லால் ஆன தூண்கள் நிறைந்த மண்டபம் ஆகும்.தூண்களில் யாளி, போர்குதிரை, வீரர்கள் மற்றும் பல்வகை சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதற்கு உள்ளே உள்ள நான்கு தூண்கள் கொண்ட சிறிய மண்டபத்தையும் சேர்த்து நூறு கால் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்டபத்தின் நான்கு மூலைகளில் தொங்கும் கல்லால் ஆன சங்கிலிகள் தமிழர் சிற்பக்கலையின் உன்னதத்தை எடுத்துகாட்டுவதாக உள்ளது. கோயிலின் கிழக்கு கோபுரம் ஒன்பது நிலைகளுடன் 180 அடி உயரமுடையது.தற்போது இக்கோபுரம் சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
தேவராஜப் பெருமாள் இந்த திருக்கோயிலின் மூலவராக அமர்த்துள்ளார். வேழ மலை அல்லது அத்திகிரி மலை மேல் நின்றபடி நாற்கரத்துடன் அருள்பாலிக்கிறார். மலையில் மூலவர் கர்பகிரகத்தின் நேர் கீழே குடைவரை கோயிலில் யோக நரசிங்க பெருமாள் வீற்றுக்கிறார். மூலவரைக் காண குன்றின் மேல் இருப்பதிநான்கு படிகள் ஏறிச்செல்லவேண்டும். இந்த கோயிலில் அமைத்துள்ள தங்கப் பல்லி மற்றும் வெள்ளிப் பல்லி மிகவும் பிரசித்தம்.

தென்மேற்கு திசையில் பெருந்தேவி தாயாருக்கு தனி சன்னதி மூலவரை நோக்கியபடி அமைத்துள்ளது. கோயிலின் திருக்குளத்தின் எதிரே சக்கரதாழ்வர் சன்னிதி உள்ளது. கோயில் வெளி பிரகாரத்தில் கண்ணன், ராமர், வராஹா பெருமாள் சன்னதிகளும், ஆண்டாள், ஆழ்வார்கள், களியமானிக்க பெருமாள், ஆச்சார்யர்கள் சன்னதிகளும் மற்றும் நம்மாழ்வார் சன்னதியும் உள்ளன. இந்த திருக்கோயிலின் இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது.

முழுவதும் அத்திமரத்தால் ஆன நீண்ட நெடிய உருவம் கொண்ட பள்ளிகொண்ட பெருமாளின் திரு உருவம் கோயிலில் அமைந்துள்ள திருக்குளதின் உள்ளே உள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்திவரதரின் திருவுருவச் சிலையை வெளிக் கொணர்ந்து கோயிலில் பள்ளிகொள்ள வைக்கப்படும். இடைத் தொடர்ந்து ஒரு மாத காலத்திற்கு உற்சவங்கள் மிகவும் விமர்சையாக நடைபெரும் .

திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என அழைக்கப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. பதினாறு கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கும் சக்கரத்தாழ்வாரின் மிகப்பெரிய திருமேனி தமிழகத்தில் வேறு எங்கும் காணமுடியாது.வைகாசி மாதத்தில் நடைபெரும் உற்சவத் திருவிழாவில் நடைபெறும் கருடசேவையும், தேரும் மிகவும் பிரபலம்.