குடவோலை முறை | Kudavolai System

குடவோலை முறை | Kudavolai System

குடவோலை என்பது சோழர்கள் காலத்தில் நடை முறையில் இருந்த நிர்வாக சபை உறுப்பினரைத் தேர்ந்து எடுக்கப் பயன்பட்ட தேர்தல் முறை. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

இடைக்காலச் சோழர்கள்

இடைக்காலச் சோழர்களின் ஆட்சி காலத்தில் கி.பி. 9ம் நூற்றாண்டு முதல் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வரை இந்த குடவோலை முறை தேர்தல் நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.பி. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தக சோழன் காலத்திற்கு உட்பட்ட மூன்று கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.
இதில் இரண்டு காஞ்சிபுரத்தின் அருகில் உள்ள உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன. இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் முதலாம் பராந்தக சோழன் ஆவான்

உத்திரமேரூர் கல்வெட்டு

பல்லவர்கள் காலத்தில் கட்டப்பட்ட தொன்மையான பல கோயில்கள் உத்திரமேரூரில் உள்ளன. இந்த கோயில்களில் சோழர்கள்,பல்லவர்கள், பாண்டியர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களின் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்றில் இந்த சோழர் கால குடவோலை தேர்தல் முறை விவரிக்கப்பட்டுள்ளது. ஒருவர் தேர்தலில் நிற்க வேண்டுமாயின் அவரின் அடிப்படைத் தகுதிகளையும் இந்த கல்வெட்டு விளக்குகிறது. மேலும் தேர்ந்து எடுக்கப்பட்டவரின் பதவி காலத்தையும் உத்திரமேரூர் கல்வெட்டு வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

உத்திரமேரூர் கல்வெட்டு – Uthiramerur Kalvettu

தேர்தல் முறை

குடவோலை தேர்தல் முறையின் விதிகளுக்கு உட்பட்ட குற்றமற்றோரின் பெயர்களையும் தகுதியுள்ளோர்களின் பெயர்களையும் ஓலைகளில் எழுதி மக்கள் எதிரில் அவற்றைக் குடத்தில் இட்டுக் குலுக்குவார்கள். பின்னர், கள்ளம் கபடம் ஏதும் அறியாத சிறு பிள்ளையைக் கொண்டு ஓர் ஓலையை எடுக்கச் செய்வர். அந்த ஓலையில் வரும் பெயருடைய நபரையே தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிப்பார்கள். இந்த குடவோலை முறையில் பூசலின்றி தேர்தல் நடைபெற்றது என்பதை கல்வெட்டு வாயிலாக நாம் அறியலாம்.

பொது வேலைகள் பல வாரியங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வாரியத்திற்கும் குடவோலை முறையில் தேர்தல் நடைபெற்றது

ஸம்வத்ஸர வாரியம், தோட்டவாரியம்,ஏரிவாரியம்,பொன் வாரியம்பஞ்சவாரவாரியம் என்று பல வாரியங்கள் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்களின் பணி என்ன என்பது பற்றி கல்வெட்டுகளில் குறிப்பிடப்படவில்லை. அதனால் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் வாரியத்தின் பெயர் கொண்டு ஸம்வத்ஸர வாரியம் என்பது – மேற்பார்வைக்குழு என்றும், தோட்டவாரியம் – தோட்டப்பணிகளைக் கண்காணிப்பது என்றும், ஏரிவாரியம் – நீர் நிலைகளை நிர்வகிப்பது என்றும், பொன் வாரியம் – பொன்னின் மாற்றை காண்பதற்கும், பஞ்சவார வாரியம் – நில வரி வாரியம் என்றும் கருத்து தெரிவிக்கின்றனர்.

உத்திரமேரூர் கல்வெட்டு செய்திகள்

குடவோலை தேர்தல் விதிமுறைகளையும், வேட்பாளர்களின் தகுதி மிகக் கடுமையான விதிகள் மூலம் நிர்ணயிக்கப்பட்டதையும் மிகவும் விரிவாகத் தெரிவிக்கும் கல்வெட்டு தமிழ்நாட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் கல்வெட்டு.

உத்திரமேரூர் கல்வெட்டின்படி வேட்பாளராக நிற்க ஒருவருக்கு இருக்க வேண்டிய தகுதி

*கால் நிலத்துக்கு மேல் அரை நிலம் உடையவர்
*தனது நிலத்திலேயே வசிக்க வீடு கட்டிக் கொண்டுள்ளவர்
*35 வயதிலிருந்து 70 வயதிற்குட்பட்டவர்
*3 ஆண்டுகளுக்குள் வாரியப்பணி புரியாதவர்
*வேதங்கள் எடுத்துரைக்கும் புலமை வேண்டும்
*ஒரு வேதமாவது அறிந்தவனுக்கு அரைக்கால் நிலம் இருந்தாலும் போதும்
*அவர்கள் தொழிலில் நிபுணனாக இருத்தல் வேண்டும்
*பொருள் சுத்தம் மனச் சுத்தம் உடையான்…

உத்திரமேரூர் கல்வெட்டின்படி வேட்பாளராக நிற்கத் தகுதியற்றவர்

*வாரியங்களுக்குக் கணக்கு காட்டாது இருந்தவன்- இவனின் சிற்றவை, பேரவை மக்கள், அத்தை மாமன் மக்கள், தாயோடு உடன்பிறந்தான், தந்தையோடு உடன் பிறந்தான், உடன் பிறந்தான், பிள்ளை கொடுத்த மாமன், ..என்று பல உறவு முறையிலும் தொடர்பிலும் வருவோரும் சேர்ந்தே தகுதி இழக்கின்றனர்
*கையூட்டு செய்தவன்
*பாதகம் செய்து பிராயச்சித்தம் செய்து சுத்தன் ஆனவன்
*பிறரின் பொருள் பறித்தவன்

வெளி இணைப்புகள்

குடவோலை முறை – Wikipedia

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published.