கடாரம் கொண்ட முதலாம் இராஜேந்திர சோழரின் மறைவுக்குப் பிறகு சோழ மண்டலத்தின் மன்னராக முடிசூடியவர் இராஜாதிராஜ சோழன் ஆவர். இவர் இராஜேந்திர சோழனின் முதல் மகன் இல்லாவிடினும் இவரின் திறமையைக் கண்டு இராஜேந்திர சோழனால் இளவரசராகப் பட்டம் சூட்டப்பட்டார் .இராஜாதிராஜ சோழன் கி.பி. 1018ல் இருந்தே தந்தையுடன் ஆட்சிப்பொறுப்பில் இருந்து வந்தார். ஏறக்குறைய 26 ஆண்டுகள் தந்தையும் மகனும் இணைந்தே சோழப் பேரரசை நிர்வகித்து வந்தனர்.
கடாரம் படையெடுப்பிற்குப் பின்னர் இராஜேந்திர சோழன் இருபது ஆண்டுகள்சோழ மன்னராக ஆட்சி செய்தார். இதன் பின்னர் ஏற்பட்ட போர்களில் இராஜேந்திர சோழன் கலந்து கொள்ளாமல், தன் மகன்களிடம் பொறுப்பை ஒப்படைத்ததார்.
சோழ நாட்டிற்குள் அடங்கிய பாண்டிய, கேரள நாடுகளில் அடிக்கடி உள்ளாட்டுக் குழப்பங்கள் ஏற்பட்டதை அடக்கி ஒடுக்க வேண்டியிருந்தது. இராஜேந்திர சோழனின் மகனான இராஜாதிராஜன் ஒரு நீண்ட படையெடுப்பை மேற்கொண்டார். இந்தப் படையெடுப்பு எப்பொழுது மேற்கொள்ளப்பட்டது என்பது சரியாகத் தெரியவில்லை. வெற்றிகொண்ட இராஜாதிராஜன் கல்வெட்டுகள் வாயிலாகவே இதனை நாம் அறிகிறோம். இந்த உள்நாட்டு கலகத்திற்கு சுந்தரபாண்டியன் தலைமையேற்று நடத்தி இருக்க வேண்டுமென்று தெரிகிறது.
‘திங்களேர்’ என்று தொடங்கும் இராஜாதிராஜனின் மெய்க்கீர்த்தி ஒன்று, மூன்று பாண்டிய மன்னர்களுடன் இவர் செய்த போர்களை விவரிக்கிறது. இராஜேந்திர சோழனை எதிர்த்த விக்கிரம நாராயணனுடன் போரிட்டு இராஜாதிராஜன் அவனை வென்றதாகக் கூறுகிறது. பத்துநாள் நடைபெற்ற போரின் முடிவில் இராஜாதிராஜன் பூபேந்திரச் சோழன் என்ற பட்டத்தைப் பெற்றார். மெய்க்கீர்த்தியில் பின்பகுதியில் கூறப்படும் சாளுக்கியருடனான இரண்டாம் போரில் விக்கிரம நாராயணன் பெயர் என்று குறிப்பிடப்படுவதால், விக்கிரம நாராயணன் சாளுக்கிய படைத்தலைவனாகயிருக்க வேண்டும் என்று தெரிகிறது.
மேலும் இராஜாதிராஜனின் பாண்டிய நாட்டுப் படையெடுப்பைத் தொடர்ந்து இராஜாதிராஜன் காந்தளூருக்குச் செல்லும் வழியில் வேணாடு மன்னனை போரில் கொன்றான் என்று தெரிகிறது. பின்னர் தென் திருவாங்கூரைச் சேர்ந்த கூபகர்களின் படைகளை நிர்முலமாக்கினான் என்றும் தெரிகிறது.
இராஜாதிராஜ சோழன் காலகட்டத்தில் சோழப் பேரரசில் தெற்கில் ஈழத்திலும், சேர, பாண்டிய நாடுகளிலும் தொடர்ந்து கிளர்ச்சியில் ஏற்பட்டன. இராஜாதிராஜ சோழன் சேர, பாண்டிய நாடுகளுக்குப் படைகளை அனுப்பி அவற்றை அடக்கி பேரரசு சிதையாமல் பார்த்துக்கொண்டார்.
ஆயினும் வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் இடைவிடாது சோழப் பேரரசின் எல்லைகளில் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் பல போர்கள் நடந்தன. கி.பி. 1054ல் துங்கபத்திரை ஆற்றுக்கு அருகில் நடந்த ஒரு போரில் மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் நடைபெற்ற போரில் கொப்பம் எனும் இடத்தில் இராஜாதிராஜ சோழன் இறந்தார்.
இராஜாதிராஜ சோழன் இறந்ததைத் தொடர்ந்து இரண்டாம் இராஜேந்திர சோழன் போரைத் தொடர்ந்து நடத்தி மேலைச்சாளுக்கியர்களைத் தோற்கடித்து சோழர்களுக்கு வெற்றி தேடித்தார். இரண்டாம் இராஜேந்திர சோழன் முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் ஆவார். போரில் இராஜாதிராஜ சோழன் இறந்ததைத் தொடர்ந்து போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இவர் கி.பி 1064 ஆம் ஆண்டுவரை ஆட்சி நடத்தினார்.
வடநாட்டு மன்னர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுவது பொதுவான வழக்கமாக இருந்தது, ஆனால் சோழ இராச்சியத்தை உறுதியாக நிலைநாட்டிய இராஜராஜனும், அவனுடைய திறமை மிக்க மகன் இராஜேந்திரன் காலங்களில் இந்த வழக்கு தலைகீழாக மாறி, சோழருடைய வெற்றிச் சின்னமான புலிக்கொடி வடக்கே வெகு தூரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. இராஜேந்திர சோழனுக்குப் பிறகு அவனுடைய மூன்று மக்களும், ஒருவரை அடுத்து ஒருவராக அரியணை ஏறினர். தங்கள் தந்தையிடமிருந்து பெற்ற பரந்த இராய்ச்சியத்தை அதன் புகழ் மங்காதவண்ணம் இம்மூவரும் திறமையுடன் காத்தனர்.
Comments