இரண்டாம் இராஜேந்திர சோழன் – Rajendra Chola II

வடக்கில் மேலைச் சாளுக்கியர்கள் இடைவிடாது சோழப் பேரரசின் எல்லைகளில் தொல்லை கொடுத்து வந்தனர். இதனால் சோழர்களுக்கும் மேலை சாளுக்கியர்களுக்கும் பல போர்கள் நடந்தன. கி.பி. 1054ல் துங்கபத்திரை ஆற்றுக்கு அருகில் நடந்த ஒரு போரில் மேலைச்சாளுக்கிய மன்னன் முதலாம் சோமேசுவரனுடன் நடைபெற்ற போரில் கொப்பம் எனும் இடத்தில் இராஜாதிராஜ சோழன் இறந்தார்.

இராஜாதிராஜ சோழன் இறந்ததைத் தொடர்ந்து அவரின் தம்பி இரண்டாம் இராஜேந்திர சோழன் போரைத் தொடர்ந்து நடத்தி மேலைச்சாளுக்கியர்களைத் தோற்கடித்து சோழர்களுக்கு வெற்றி தேடித்தார். இரண்டாம் இராஜேந்திர சோழன், முதலாம் இராஜேந்திர சோழனின் இரண்டாவது மகன் ஆவார். போரில் இராஜாதிராஜ சோழன் இறந்ததைத் தொடர்ந்து போர்க் களத்திலேயே சோழ நாட்டின் அரசனாக முடி சூட்டிக்கொண்ட இரண்டாம் இராஜேந்திர சோழன் கி.பி 1064 ஆம் ஆண்டுவரை சோழ நாட்டின் அரசனாக ஆட்சி நடத்தினார்.

இரண்டாம் இராஜேந்திர சோழனின் போர்களில் கொப்பத்தில் நடைபெற்ற இந்தப் போர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கொப்பம் என்னும் இடம் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்தில் கோலாபூர் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

போரில் படைகளின் முன்னணியில் மன்னர் இராஜாதிராஜ சோழனும், சோழப் படைகளின் பின்னணியில் இரண்டாம் இராஜேந்திர சோழனும் தலைமை ஏற்று நடத்தி வந்தனர். பட்டத்து யானையின் மேல் அமர்ந்து போர் புரிந்த மன்னர் இராஜாதிராஜ சோழனை சாளுக்கியர்களின் படை சுற்றிவளைத்து தாக்கியது. இந்த தாக்குதலில் மன்னர் இராஜாதிராஜ சோழன் போர்க்களத்திலேயே இறந்தார். இடைத் தொடர்ந்து சோழப் படைகள் பின்வாங்க முற்பட்டன. தமையனின் இறப்பை கண்ணுற்ற இரண்டாம் இராஜேந்திர சோழன் உடனடியாகப் போர்க்களத்திலேயே சோழ மன்னனாக முடி சூடிக்கொண்டார். போரில் காயம் அடைந்திருந்த நிலையிலும் இரண்டாம் இராஜேந்திர சோழனின் இந்தச் செயல் பின்வாங்க முற்பட்ட சோழப் படைகளுக்கு புது உத்வேகத்தை அளித்தது. இரண்டாம் இராஜேந்திர சோழனின் தலைமையில் தொடர்ந்து நடந்த போரில் சாளுக்கியப் படைகள் பெரும் தோல்வியைத் தழுவின. மணிமங்கலத்தில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டு வாயிலாக நாம் இந்தத் தகவலை உறுதி செய்யமுடிகிறது.

போரில் தோல்வியைத்தழுவிய சாளுக்கியர்களின் படை பின்வாங்கியது. இரண்டாம் இராஜேந்திர சோழன் சாளுக்கியர்களின் படையைத் தொடர்ந்து சென்று சாளுக்கியர்களின் தலைநகரான கல்யாணபுரத்தை அழித்து தீக்கிரையாகினார். இந்த வரலாற்று சிறப்புமிக்க போர் பற்றிய தகவல்களளை நாம் கலிங்கத்துப்பரணி மற்றும் விக்கிரம சோழன் உலா போன்ற நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது.

கொப்பம் போரில் பெரும் தோல்வியடைந்ததற்கு பழிவாங்கும் பொருட்டும் தலைநகரை காக்கமுடியாத அவமானத்தை தீர்க்கவும் சாளுக்கியர்கள் கிபி 1062ஆம் ஆண்டு பெரும் படை கொண்டு சோழப் பேரரசின் மேல் போர் தொடுத்தனர். துங்கபத்திரா நதியும் கிருஷ்ணா நதியும் கூடும் இடத்தில் இந்தப் போர் நடைபெற்றது.

தளபதி தண்டநாயக்க வலதேவ சாளுக்கியப் படைகளுக்குத் தலைமையேற்று வந்தார். சோழர் படைகள் ராஜமஹேந்திர சோழன் தலைமையில் போருக்கு வந்தன. மேலும் விஜய ராஜேந்திர சோழனும் போரில் பங்குபெற்றார். சாளுக்கியர்களின் பழிவாங்கும் நோக்கமும் அவமானத்தைத் துடைக்கும் எண்ணமும் மற்றும் வேங்கி நாட்டை கைப்பற்றும் ஆசையும் ராஜமஹேந்திர சோழனால் தகர்க்கப்பட்டது. போரில் சாளுக்கியப் படைகள் பெரும் தோல்வியைத்தழுவி புறமுதுகிட்டு ஓடின. சாளுக்கியத் தளபதி தண்டநாயக்க வலதேவ போரில் இறந்தார்.

சாளுக்கியர்களுடன் நடைபெற்ற போரைத் தவிர இலங்கையில் முதலாம் விஜயபாகுவுடன் நடந்த போரிலும் இரண்டாம் இராஜேந்திர சோழன் வெற்றி பெற்றார். சோழர்களுக்கும் கீழைச் சாளுக்கியர்களுக்கும் உறவு நல்ல நிலையில் இருந்தது. இரண்டாம் இராஜேந்திர சோழனின் மகளான மதுராந்தகி கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன். இரண்டாம் இராஜேந்திரனைத் தொடர்ந்து, அவனுடைய தம்பியான வீரராஜேந்திரன் சோழ மன்னராகப் பதவியேற்றார்.

About the author

Comments

  1. இரண்டாம் இராஜேந்திர சோழனின் மகளான மதுராந்தகி கீழை சாளுக்கிய இளவரசனான இராசேந்திரன் என்பவனை மணந்திருந்தாள். இவர்களுக்குப் பிறந்தவனே முதலாம் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனாகி, சாளுக்கிய சோழ மரபு வழியை உருவாக்கியவன்.

    இந்த செய்தி தவறு. ராஜேந்திரன் பின்னாளில் குலோத்துங்கன் என்ற பெயருடன் சோழ நாட்டு அரசனானான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *