இரண்டாம் இராஜேந்திர சோழனின் மறைவுக்குப் பிறகு சோழப் பேரரசின் மன்னராக வீரராஜேந்திர சோழன் கி.பி 1063ஆம் ஆண்டு பதவியேற்றார். இரண்டாம் இராஜேந்திரனின் மகனும், முடிக்குரிய வாரிசுமான இராஜமகேந்திர சோழன் தந்தைக்கு முன்னரே இறந்துவிட்டதால் வீரராஜேந்திர சோழன் மன்னராகப் பதவியேற்றார். இவர் இரண்டாம் இராஜேந்திர சோழனின் தம்பி ஆவார்.
வீரராஜேந்திர சோழனின் ஆட்சிக்காலம் சோழர் வரலாற்றில் பிரச்சினைகள் மிகுந்த காலமாயிருந்தது. தெற்கு, வடக்கு இரு புறங்களிலுமிருந்தும் போர்களையும் உள்ளாட்டுக் கலகங்களையும் சந்திக்க வேண்டியிருந்தது.

வீரராஜேந்திர சோழன், சோழர்களின் பரம்பரை எதிரிகளான மேலை சாளுக்கியர்களுடன் பல போர்களை நடத்த வேண்டியிருந்தது. கீழைச் சாளுக்கியப் பகுதியான வேங்கி நாட்டுடன் சோழருக்கு இருந்த நல்லுறவே இந்தப் போர்களுக்கு முக்கிய காரணமாய் அமைந்தது. மேலும் உள்நாட்டில் சேரர்,பாண்டியர்களாலும் மற்றும் ஈழத்தில் ஏற்பட்ட சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை போர் கொண்டு அடக்கவேண்டி இருந்தது.
வீரராஜேந்திர சோழனின் பதவி ஏற்றதும் முதல் போர் சோழர்களில் ஆட்சிக்கு உட்பட்ட சேர நாட்டில் நடந்தது. சேர நாட்டில் ஏற்பட்ட கிளர்ச்சியை வீரராஜேந்திர சோழன் போர் கொண்டு முறியடித்தார். இதைத் தொடர்ந்து பாண்டிய நாட்டிலும் போர் நடந்தது. பாண்டிய இளவரசர்களால் பாண்டிய நாட்டில் ஏற்பட்ட சோழர்களுக்கு எதிரான கிளைச்சியை வீரராஜேந்திர சோழன் தோற்கடித்தார். உள்நாட்டில் ஏற்பட்ட இந்த குழப்பமான நிலையைப் பயன்படுத்தி மேலை சாளுக்கிய மன்னனான முதலாம் சோமேசுவரன் சோழ நாட்டின் மீது படையெடுத்து வந்தான்.
வீரராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் வாயிலாக சோழர்கள் மேலை சாளுக்கியர்களுடன் நடத்திய கடுமையான போர்கள் பற்றிய விவரங்களை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. வீரராஜேந்திர சோழன் சோழப் பேரரசின் மன்னர் ஆகும் முன்னரே அப்போதைய சோழ இளவரசர் இளவரசனான இராஜமகேந்திர சோழனின் தலைமையில் மேலை சாளுக்கியர்களுடன் போர் புரிந்துள்ளார். இந்தப் போரில் மேலை சாளுக்கியர் படையை முறியடித்துச் சோழர் படை பெருவெற்றி பெற்றது.
போரில் தோற்ற அவமானத்தைத் துடைக்கவும் கீழை சாளுக்கிய நாடான வேங்கியைக் கைப்பற்றவும் கருதி மேலை சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் மீண்டும் ஒரு போருக்கு அழைப்பு விடுத்தான். முன்னர் தோல்வியடைந்த அதே கூடல் சங்கமம் என்னும் இடத்தைப் போருக்கான இடமாகவும் குறித்திருந்தான்.
போருக்கான அழைப்பை ஏற்ற வீரராஜேந்திர சோழன் படைகளுடன் குறிப்பிட்ட இடத்திற்கு அருகே முகாமிட்டுக் காத்திருந்தார். போருக்காகக் குறிக்கப்பட்ட தினமான 10 செப்டெம்பர் 1067 அன்று மேலை சாளுக்கியப் படைகள் போருக்கு வரவில்லை. மேலும் ஒரு மாதம் வரை காத்திருந்த வீரராஜேந்திர சோழன் சுற்றியிருந்த மேலை சாளுக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, துங்கபத்ரா நதிக்கரையில் வெற்றிக்கம்பம் ஒன்றையும் நிறுவினார்.
போருக்கு அழைப்புவிடுத்த மேலை சாளுக்கிய மன்னன் சோமேஸ்வரன் போருக்கு வராததற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. போருக்கு வராததால் மேலும் அவமானமடைந்த மன்னன் சோமேஸ்வரன் தற்கொலை செய்து கொண்டதாகக் தெரிகிறது.
கூடல் சங்கமத்தில் இருந்து கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரான வேங்கிக்குச் சென்ற வீரராஜேந்திர சோழனின் படைகள் அங்கே சோழர் ஆதிக்கத்துக்கு எதிரான கிளர்ச்சிகளை தோற்கடித்தது. இந்தப் போரில் வீரராஜேந்திர சோழன், ஜனநாதன் என்பவன் தலைமையிலான மேலைச் சாளுக்கியப் படைகளைக் கிருஷ்ணா நதிக் கரையில் முறியடித்தார். வேங்கியின் வீழ்ச்சியைத் தொடர்ந்து கீழைச் சாளுக்கியர் பகுதி முழுவதையும் வீரராஜேந்திர சோழன் சோழர்களின் ஆட்சிக்கு உட்படுத்தினர். வீரராஜேந்திர சோழன், விஜயாதித்தன் என்னும் கீழைச் சாளுக்கிய இளவரசனை வேங்கியின் மன்னனாக்கினார். வடபகுதிப் போர்களில் கலிங்க நாடு, மேலைச் சாளுக்கியருக்கு உதவியாக இருந்தது. இதனால் கலிங்கத்தின் மீதும் படையெடுத்து அதையும் வீரராஜேந்திர சோழனின் படைகள் வென்றது.
சோழப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்த ஈழத்தின் தென் பகுதியில் விஜயபாகு என்னும் சிங்கள அரசன் சோழர்களை தோற்கடிக்க எண்ணி அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டான். பர்மாவின் மன்னன் படைகளையும் கப்பல்களையும் விஜயபாகுவிற்குத் துணையாக அனுப்பினான்.வீரராஜேந்திர சோழனின் இவனை அடக்குவதற்காக இலங்கையில் இருந்த சோழர் படைகளை இலங்கையின் தென்பகுதியான உறுகுணைப் பகுதிக்கு அனுப்பினார். துவக்கத்தில் ஈழத்தின் சோழர் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கிளர்ச்சிகளை உருவாக்குவதில் விஜயபாகு வெற்றி பெற்றான்.
வீரராஜேந்திர சோழனின் ஈழத்தில் ஏற்கெனவேயிருந்த சோழர் படைகளுக்குத் துணையாகச் சோழநாட்டிலிருந்தும் படைகளை ஈழத்திற்கு அனுப்பினார். இதன் மூலம் வீரராஜேந்திர சோழன் ஈழத்தில் ஏற்பட்ட கிளர்ச்சிகளை அடக்கினார். எனினும் உருகுணைப் பகுதியில் வீரபாகுவின் பலம் அதிகரித்தது. வீரபாகுவின் சோழர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் பின் வந்த ஆண்டுகளிலும் தொடர்ந்தது.
வீரராஜேந்திர சோழனின் ஏழாம் ஆட்சியாண்டில் ஏற்படுத்தப்பட்டக் கல்வெட்டின் வாயிலாக, வீரராஜேந்திர சோழன், அரசன் ஒருவனின் வேண்டுகோளுக்கு இணங்கிக் கடாரத்தின் மீது படையெடுத்து வெற்றி கொண்டதாகத் தெரிகிறது. ஆனால் அந்த உதவி கோரிய மன்னன் யாரென்றோ அது தொடர்பான வேறு தகவல்களோ எதுவும் கிடைக்கவில்லை. இந் நிகழ்ச்சி கி.பி 1068 இல் இடம் பெற்றிருக்கலாம் என்று சரித்திர ஆராச்சியாளர்களால் கருதப்படுகின்றது.
கி.பி. 1068 ஆம் ஆண்டில் மன்னர் முதலாம் சோமேஸ்வரனின் மறைவுக்குப் பிறகு இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய மன்னராக பதவியேற்றார். இதைத் தொடர்ந்து இவருக்கும் இவரது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே யார் மேலை சாளுக்கிய நாட்டிற்கு மன்னர் என்பது குறித்து அதிகாரப் போட்டி ஏற்பட்டது. மேலை சாளுக்கிய நாட்டில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில் வீரராஜேந்திர சோழன் விக்ரமாதித்தனை ஆதரித்தார். இரண்டாம் சோமேஸ்வரன் மேலை சாளுக்கிய நாட்டின் தென்பகுதியை விக்ரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தார். வீரராஜேந்திர சோழன் தனது மகளை விக்ரமாதித்தனுக்கு மணமுடித்து வைத்தார். வீரராஜேந்திர சோழன் கி.பி 1070 ஆம் ஆண்டில் காலமானார் . வீரராஜேந்திர சோழன் இறப்பைத் தொடர்ந்து அவரின் மகன்களில் ஒருவரான அதிராஜேந்திர சோழன் என்பவர் சோழப் பேரரசின் மன்னராகப் பதவியேற்றார்.
Comments