அதிராஜேந்திர சோழன் – Athirajendra Chola

வீரராஜேந்திர சோழரின் மறைவைத் தொடர்ந்து சோழ மன்னராக அதிராஜேந்திர சோழர் பதவியேற்றார். அதிராஜேந்திர சோழன் வீரராஜேந்திர சோழனின் மகன் ஆவார்.  தந்தை இருந்த காலத்திலேயே சோழ இளவரசராக இவருக்கு பட்டம் சூட்டப்பட்டது. அதிராஜேந்திர சோழரின் ஆட்சி காலம் மிகக் குறுகிய காலமாக சில மாதங்களே நடைபெற்றது. சோழ மன்னராகப் பதவியேற்ற ஆண்டிலேயே சில மாதங்களில் அதிராஜேந்திர சோழர் மரணமடைந்தார்.

கி.பி. 1068 ஆம் ஆண்டில் மன்னர் முதலாம் சோமேஸ்வரனின் மறைவுக்குப் பிறகு இரண்டாம் சோமேஸ்வரன் மேலைச் சாளுக்கிய மன்னராக பதவியேற்றார்.  இதைத் தொடர்ந்து இவருக்கும் இவரது தம்பியான விக்கிரமாதித்தனுக்கும் இடையே யார் மேலை சாளுக்கிய நாட்டிற்கு மன்னர் என்பது குறித்து அதிகாரப் போட்டி ஏற்பட்டது. மேலை சாளுக்கிய நாட்டில் உள்நாட்டுக் கலவரம் ஏற்பட்டது. இந்த நிலையில் வீரராஜேந்திர சோழன் விக்ரமாதித்தனை ஆதரித்தார். இரண்டாம் சோமேஸ்வரன் மேலை சாளுக்கிய நாட்டின் தென்பகுதியை விக்ரமாதித்தனுக்கு விட்டுக் கொடுத்தார். வீரராஜேந்திர சோழன் தனது மகளை ஆறாம் விக்ரமாதித்தனுக்கு மணமுடித்து வைத்தார்.

இதே காலகட்டத்தில் வேங்கி மன்னரான ராஜராஜ நரேந்திரா இறந்தார். இதைத் தொடர்ந்து வேங்கிக் கோட்டையை கைப்பற்றிய இரண்டாம் சக்திவர்மன் வேங்கி நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். இதை தொடர்ந்து சோழருடன் ஏற்பட்ட போரில் இரண்டாம் சக்திவர்மன் இறந்தார். வீரராஜேந்திர சோழன், ஆறாம் விக்கிரமாதித்தனின் தம்பி விஜயாதித்தனை வேங்கி நாட்டின் மன்னராக ஆக்கினார். இதனால் நேரடி வாரிசான அநபாய சாளுக்கியனுக்கு அரசு இல்லாமல் போனது. ஆனால் வீரராஜேந்திர சோழனுக்கு உதவும் பொருட்டு சாளுக்கிய தேசத்துடன் நேர்ந்த போரில் தன் போர் திறனைக் காட்டியதைத் தொடர்ந்து தற்போதைய சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள பஸ்டர் எனும் மாவட்டத்தை ஒட்டிய இடங்களை பெற்று குறு நில மன்னராக ஆண்டு வந்தார்.

வீரராஜேந்திர சோழரின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டில் கலகங்கள் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஆறாம் விக்ரமாதித்தன் காஞ்சிபுரம் விரைந்தார். காஞ்சிபுரத்தில் கலகத்தை கட்டுப்படுத்தினார். கங்கை கொண்ட சோழபுரத்தில் ஏற்பட்ட உள்நாட்டு குழப்பத்தை போர்புரிந்து கட்டுப்படுத்தினார். இதைத் தொடர்ந்து  சோழ மன்னராக அதிராஜேந்திர சோழர் பதவியேற்றார். அமைதி திரும்பிய சோழ நாட்டில் சில மாதங்கள் இருந்த ஆறாம் விக்ரமாதித்தன் அவர் நாட்டிற்குத் திரும்பிச் சென்றார். விக்ரமாதித்தன் திரும்பிய சில நாட்களிலேயே வாரிசுகள் ஏதும் அற்ற அதிராஜேந்திர சோழர் இறந்ததும், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் சோழ மன்னராகப் பதவியேற்றதும் நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலும் கங்கை கொண்ட சோழபுரத்திலும் யார் கலகங்களையும் உள்நாட்டு சண்டைகளையும் ஏற்படுத்தினார் என்பது குறித்து சரியாய் தகவல்கள் ஏதும் இல்லை. இந்த கலகங்களுக்கு அநபாயச் சாளுக்கியனுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பது பற்றியும் ஆதாரப்பூர்வமான தகவல்கள் ஏதும் சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்குக் கிடைக்கவில்லை.

வைணவ நூலொன்று  அதிராஜேந்திர சோழன் நோய் வாய்ப்பட்டு இறந்ததாகக் கூருகிறது. அதிராஜேந்திர சோழரின் மரணம் தொடர்பாக பல்வேறு கருத்துகள் நிலவுகின்றது. சைவர்களுக்கும் வைணவர்களுக்கு இடையே பிரச்சனைகள் மிகுந்திருந்த காலம் அது. உள்நாட்டில் வைணவர்கள் தொல்லைகளுக்கு ஆளானதாகவும் இதன் காரணமாகக் சோழ நாட்டில் கலகங்கள் நிகழ்ந்ததாகவும் கருதப்படுகின்றது. இதன் தொடர்பாகவும்  அதிராஜேந்திர சோழன் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற கருத்தும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் இடையே நிலவுகிறது.

வாரிசு அற்ற நிலையில் அதிராஜேந்திர சோழர் மரணமடைந்தார். இதுவரை விஜயாலய சோழனின் நேரடி ஆண் வாரிசுகளால் ஆளப்பட்டு வந்த சோழ நாடு, முதலாம் இராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவியின்  வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியனின் கீழ் வந்தது. பின்னாளில் முதலாம் குலோத்துங்க சோழன் என அறியப்பட்டவரே அநபாயச் சாளுக்கியன்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published.