முதலாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola I

அதிராஜேந்திர சோழர், சோழ மன்னராகப் பதவியேற்ற சில மாதங்களிலேயே வாரிசு அற்ற நிலையில் மரணமடைந்தார். இதுவரை விஜயாலய சோழனின் நேரடி ஆண் வாரிசுகளால் சோழ நாடு ஆளப்பட்டு வந்தது. நேரடி ஆண் வாரிசு அற்ற நிலையில் முதலாம் இராஜேந்திரனின் மகள் அம்மங்கா தேவியின் வழியில், கிழக்குச் சாளுக்கிய அரச மரபில் வந்த இளவரசன் அநபாயச் சாளுக்கியன் சோழப் பேரரசின் மன்னராக முடிசூடினார். இவரே பின்னாளில் முதலாம் குலோத்துங்க சோழன் என்று அனைவராலும் அறியப்பட்டு புகழ் பெற்று விளங்கியவர். மேலும் சாளுக்கிய சோழர்கள் வம்சத்தின் முதல் மன்னரும் முதலாம் குலோத்துங்க சோழன் ஆவார். இவரது வழி வந்தவர்கள் தெலுங்கு சோழர் என அழைக்கப்படுகின்றனர். முதலாம் குலோத்துங்க சோழன் 1070 ஆம் ஆண்டிலிருந்து 1120 ஆம் ஆண்டுவரை ஐம்பது ஆண்டு காலம் சோழ நாட்டை மன்னராக ஆண்டார்.

விஜயாலய சோழர் வம்சத்தின் நேரடி வாரிசாக அமையாமல் போனதால் மன்னராகப் பதவியேற்ற ஆரம்ப காலகட்டங்களில் சிற்சில குழப்பங்களையும் பிரச்சனைகளையும் முதலாம் குலோத்துங்க சோழன் சந்திக்க நேரிட்டது. அதன் விளைவுகளால் சில இழப்புகளும் நேர்ந்தன. குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்ற உடனேயே சாளுக்கியர்களுடன் போரிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த குழப்பமான சூழ்நிலையைப் பயன்படுத்தி பாண்டியர்களும் சேரர்களும் சோழப் பேரரசிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்ற பின்னர் தொடர்ந்து போர் புரிவதிலும் கலகங்களை அடக்குவதிலும் சில காலங்கள் செலவிட நேர்ந்தது.

மேலை சாளுக்கிய நாட்டின் தென்பகுதியை ஆண்ட மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு குலோத்துங்க சோழன் சோழப் பேரரசின் மன்னராகப் பதவியேற்றது ஆரம்பம் முதற்கொண்டே ஏற்புடையடையதாய் இல்லை. மேலும் ஆறாம் விக்கிரமாதித்தனால் சோழ மன்னராக்கப்பட்ட அதிராஜேந்திர சோழர் இறந்ததற்கு குலோத்துங்க சோழன் காரணமாய் இருக்கலாம் என்ற சதேகமும் ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு இருந்திருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் சிலர் சோழ நாட்டை ஆள வேண்டும் என்ற எண்ணம் ஆறாம் விக்கிரமாதித்தனுக்கு இருந்திருக்கலாம் என்று கருதுகின்றனர்.

சாளுக்கிய போர்

காரணம் எதுவாயினும் ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கியை ஆண்ட அவரின் தம்பி விஜயாதித்தன் மற்றும் மேலை சாளுக்கிய நாட்டின் வடபகுதியை ஆண்ட அவரின் அண்ணன் இரண்டாம் சோமேஸ்வரன் ஆகியோரின் துணை கொண்டு குலோத்துங்க சோழனுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினான். கிபி 1075-76ல் நன்கிலி என்ற இடத்தில இந்தப் போர் நடைபெற்றது. இந்த இடம் தற்போதைய கர்நாடகா மாநிலத்தில் உள்ள கோலார் மாவட்டத்தில் அமைந்துள்ளது. போரில் ஆறாம் விக்கிரமாதித்தன் தலைமையிலான படைகள் பெருத்த தோல்வியைத் தழுவின. போரில் தோற்ற ஆறாம் விக்கிரமாதித்தன் போர்க்களத்திலிருந்து ஓடிவிட்டதாகத் தெரிகிறது. போரில் ஆயிரக்கணக்கில் யானைகளையும் குதிரைகளையும் குலோத்துங்க சோழன் பெற்றார். மேலும் கங்கவாடி சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. ஆறாம் விக்கிரமாதித்தன் வடக்கு துங்கபத்திராவரை துரத்தப்பட்டார். இந்தப் போரில் ஏற்பட்ட படுதோல்வி சாளுக்கியர்களை அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு சோழர்களுக்கு எதிராக போர்க்கோடி தூக்காத வண்ணம் செய்தது.

முதலாம் கலிங்கப் போர்

சாளுக்கிய போரில் பெரும் தோல்வியைத் தழுவிய ஆறாம் விக்கிரமாதித்தன், நேரடியாக சோழர்களுடன் போர் புரிய விரும்பாமல், கலிங்க நாட்டை வேங்கி நாட்டின் மீது போர் தொடுக்க வைத்தான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான். வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் வேங்கியின் மீது போர் தொடுத்தனர். வேங்கிக்கு நாட்டிற்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர்.சோழர்களுக்கும் கலிங்கர்களுக்கும் இடையில் நடந்த இந்தப் போரானது சரித்திரத்தில் முதலாம் கலிங்கப் போர் என்று குறிக்கப்பட்டுள்ளது. குலோத்துங்க சோழனின் தலைமையில் நடந்த இந்த சரித்திரப்புகழ் பெற்ற போரில் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் தளபதியாகத் தலைமையேற்றார். விக்கிரம சோழனிற்குத் துணையாக காளிங்கராயனும் கருணாகரனும் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர். கலிங்க நாடு என்பது தற்போதைய ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் அடங்கிய பகுதியாகும். முதலாம் கலிங்கப் போரில் கலிங்கர்கள் பெரும் தோல்வியைத் தழுவினர். கலிங்க நாட்டின் தென்பகுதி சோழர்களின் வசம் வந்தது.

கிபி 1077ல் வேங்கி நாட்டின் மன்னன் விஜயாதித்தன் இறந்ததைத் தொடர்ந்து குலோத்துங்க சோழன் அவரது மூத்த மகன் ராஜேந்திர சோழனை வேங்கி நாட்டின் மன்னராகினார். ஆயினும் ஒரு ஆண்டு கழித்து ராஜேந்திர சோழன் சோழ நாடு திரும்பினார். அவரைத் தொடர்ந்து அவரின் தம்பி வீர சோழன் கிபி 1084வரை ஆறு ஆண்டுகள் வேங்கியை ஆண்டு வந்தார் என்பது கல்வெட்டுகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது. வீர சோழனைத் தொடர்ந்து அவரின் தம்பி விக்ரம சோழன் வேங்கி நாட்டின் மன்னராக முடிசூடினர்.

ஈழப் போர்

வீரராஜேந்திர சோழனின் காலத்திலேயே சிங்களதில் சோழர்களை தோற்கடிக்க எண்ணி முயன்று தோற்ற விஜயபாகு, குலோத்துங்க சோழன் சாளுக்கியர்கள் மற்றும் கலிங்கர்களுடன் போரிட்ட சமயத்தைப் பயன்படுத்திக் கொண்டான். சிங்களதில் சரியான சேனாதிபதி இல்லாத காரணத்தால் விஜயபாகு சோழர்கள் மீது அதிரடி தாக்குதல் செய்து சோழர்களை பின்வாங்கச் செய்தான்.

சாளுக்கியர்கள் மற்றும் கலிங்கர்களை வென்ற பின் குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டை நோக்கிப் படையுடன் பயணப்பட்டான். சிங்களதிற்கு குலோத்துங்க சோழன் அவனது மகன் ராஜேந்திர சோழனை அனுப்பினான். ராஜேந்திர சோழன் சிங்களத்தை அடையும் முன்பே சோழ வீரர்கள் விஜயபாகுவிற்கு ஈடுக் கொடுக்க முடியாமல் பின் வாங்கத் தொடங்கி இருந்தனர்.

ராஜேந்திர சோழன் வருகையால் பலம் பெற்ற சோழர்கள் அனுராதபுரத்தில் விஜயபாகுவை புறமுதுகிட்டு ஓட செய்தனர். அனுராதபுரத்தில் போர் நிகழ்ந்ததாக மஹாவம்சம் கூருகின்றது. நேரடிப்போரில் வெற்றி பெறமுடியாததால் மகானகக்குல்லாவில் தனது ரகசியப் படையை அனுப்பிவிட்டு புலனருவாவில் இருந்தும் அனுராதபுரத்தில் இருந்தும் அதிரடி தாக்குதல் நிகழ்த்தினான் விஜயபாகுவை. நடுவில் இருந்த மகானகக்குல்லாவில் விஜயபாகு எதிர்பாராதவிதமாகக் கலவரத்தை ஏற்படுத்தினான்.

தென் தமிழகத்தில் பாண்டியர்களுடனும் சேரர்களுடனும் ஏற்பட்ட போர்கள் காரணமாக ஈழத்தில் தீவிர கவனம் செலுத்த இயலாத குலோத்துங்க சோழன் ராஜேந்திர சோழனை சோழ நாட்டிற்குத் திரும்பும் படிக் கட்டளை இட்டான். இதனால் விஜயபாகு சுதந்திர இலங்கை அரசை நிறுவினான்.

பாண்டியப் போர்

குலோத்துங்க சோழன் சாளுக்கியர்களுடன் போர் புரிந்து கொண்டிருந்த சமயத்தில், பாண்டியர்களும் சேரர்களும் சோழ நாட்டின் ஆளுமையிலிருந்து விடுதலை வேண்டி உள்நாட்டில் குழப்பங்களும் கலகங்களும் ஏற்படுத்தலாயினர். குலோத்துங்க சோழன் சாளுக்கியர்கள் மற்றும் கலிங்கர்களை வென்ற உடன் அவரது கவனத்தை பாண்டிய நாட்டின் மீது திருப்பினார். வெற்றி பெற்ற படைகளுடன் சோழ நாடு திரும்பாமல் நேராக பாண்டிய நாடு சென்றார்.

பொன்னமராவதி அருகே குலோத்துங்க சோழனின் படைத் தளபதி உடையான் ஆதித்தன் சோழர் படையுடன் விக்கிரம சோழன் மற்றும்  குலோத்துங்க சோழனின் வருகைக்காக முகாமிட்டுக் காத்திருந்தார். இரண்டு படைகளும் குலோத்துங்க சோழன் தலைமையில் பாண்டிய நாட்டிற்குள் நுழைந்தது. குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டிற்குள் நுழைந்து கலகத்தில் ஈடுப்பட்டிருந்த பாண்டியர்களை ஒடுக்கி சோழ அரசினை நிலை நாட்டினர்.

குலோத்துங்க சோழன் ஐந்து பாண்டிய மன்னர்களுடன் போரிட்டார் என்பது கல்வெட்டுகளின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் சோழர் படைகளிடம் தோற்று ஐந்து பாண்டிய மன்னர்களும் புறமுதுகிட்டு ஓடியதாகத் தெரிகிறது. குலோத்துங்க சோழன் பொதிகை மலைவரை உள்ள பகுதிகளை சோழர்களின் நேரடி ஆதிக்கத்திற்கு உட்படுத்தினார். இது தவிர சிதம்பரத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு வாயிலாக பாண்டியர்களின் துறைமுக நகரமான கொற்கையில் இருந்த பாண்டியர்களின் கோட்டை முழுவதுமாக குலோத்துங்க சோழனால் எரிக்கப்பட்டது என்றும் பாண்டியர்களின் முத்துகள் யாவும் எடுத்துக் கொள்ளப்பட்டது என்றும் தெரிகிறது. போரில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து இளவரசன் விக்கிரம சோழன் பாண்டிய சோழன் என்ற பெயருடன் பாண்டிய நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றர்.

சேரப் போர்

சேர நாட்டில் காந்தளூர் சாலை எனும் இடம் சேரர்களின் ஆயுதக் கிடங்காககவும் போர் விரர்களுக்கு பயிற்சி அளிக்கும் இடமாகவும் விளங்கியது. பாண்டியர்களுடன் சேர்ந்து சேரர்களும் சோழர்களை எதிர்த்தார்கள். பாண்டியர்கள் தோற்றதைத் தொடர்ந்து சேரர்கள் படை காந்தளூர் சாலைக்குப் பின்வாங்கியது. சேரர் படைக்கு சேர மன்னன் ரவி மார்த்தாண்டவர்மன் தலைமை வகித்தான். மேலும் தோற்று புறமுதுகிட்டு ஓடிய பாண்டியர் படைகளும் சேரர் படைகளுக்குத் துணை நின்றன. இது தீவிர சிங்களத்தில் இருந்து விஜயபாகு பாண்டியர்களுக்கும் சேரர்களுக்கும் ஆதரவாக கடற்படையை அனுப்பி இருந்தான்.

இவ்வாறு ஒரு மிகப்பெரிய படை காந்தளூர் சாலை அருகில் போருக்குத் தயாராக நின்றது. பாண்டிய நாட்டினை வென்றதும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக குலோத்துங்க சோழன் காந்தளூர் சாலைக்குச் சென்றான். அங்கு குலோத்துங்க சோழனை எதிர்பார்த்து மிகப்பெரிய படை அணிவகுத்து நின்றது.

கருணாகரத் தொண்டைமான் மற்றும் உடையான் ஆதித்தன் ஆகிய சோழத் தளபதிகளின் தலைமையில் போரில் ஈடுபட்டது சோழர் படை. சாளுக்கிய நாட்டில் அமைதி திரும்பிய நிலையில் அங்கிருந்து சோழர் தளபதி காளிங்கராயரும் நேராக காந்தளூர் சாலை போரிற்கு படையுடன் வந்தார். இந்த மும்முனைத் தாக்குதலை எதிர்கொள்ளத் தெரியாமல் போரில் அனுபவம் அற்ற இளைய வயதினை உடைய சேர மன்னன் ரவி மார்த்தாண்டவர்மன் போரில் பெரும் தோல்வியைத் தழுவினான். சிங்களத்திலிருந்து வந்த விஜயபாகுவின் கடற்படை நிர்மூலமாக்கப்பட்டது. எஞ்சிய சிங்களக் கடற்படை சிங்களதிற்கு தப்பியோடியது. போரில் குலோதுங்க சோழனிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து ரவி மார்த்தாண்டவர்மனையே தொடர்ந்து சேர நாட்டின் மன்னனாகினார் குலோதுங்க சோழன். தளபதி உடையான் ஆதித்தனை மேற்பார்வை புரியவும் கப்பம் வாங்கவும் ஆணையிட்டு சோழ நாட்டிற்கு குலோதுங்க சோழன் திரும்பினான்.

இரண்டாம் கலிங்கப் போர்

முதலாம் கலிங்கப் போர் நடைபெற்று சில ஆண்டுகள் கழித்து இரண்டாம் கலிங்கப் போர் நடந்தது. இரண்டாம் கலிங்கப் போர் நடந்ததற்குக்கான உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை. முதலாம் கலிங்கப் போரில் தோற்ற கலிங்கர்கள் சோழ நாட்டிற்கு செலுத்த வேண்டிய கப்பத்தை ஒழுங்காக செலுத்தாததே இரண்டாம் கலிங்கப் போர் நடந்ததற்குக் காரணமாக இருக்கலாம் என சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இந்த இரண்டாம் கலிங்கத்துப் போர் சோழ வரலாற்றில் மட்டும் அல்லாது தமிழக வரலாற்றிலே நடந்த சிறப்பு மிக்க போர்களில் ஒன்றாகும். இரண்டாம் கலிங்கத்துப் போர் கலிங்கர்களுக்கும் சோழர்களுக்கும் இடையில் மிகக் கடுமையாக நிகழ்ந்ததாகக் காணப்படுகின்றது.

கலிங்கர்களின் படை, சாளுக்கியர்களின் படை , கங்கவாடி மற்றும் நுலும்பவாடி ஆகிய நாடுகளின் ஒன்றிணைந்த மிகவும் வலுவான படை சோழர்களை எதிர்த்து நின்றது. காஞ்சிபுரம் நகரின் அருகே இப்பெரும் போர் நிகழ்ந்து இருக்க கூடும் என்று அறியப்படுகின்றது. இரண்டு பெரிய படைகளும் போர் புரிந்ததில் இழப்புகள் இருப்பக்கமும் இருந்தாலும் இறுதியில் சோழர்களின் படை கலிங்கர்களின் படையை தோற்கடித்தது.

சோழர்களின் படைகளுக்கு கருணாகரத் தொண்டைமான் தலைமை ஏற்று நடத்தினார். இந்தப் போரில் சோழர்கள் அடைந்த வெற்றியைத் தொடர்ந்து, குலோத்துங்க சோழனைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்டு கலிங்கத்துப்பரணி என்றக் காவியத்தினை ஜெயங்கொண்டார் என்ற புலவர் பாடியுள்ளார். பரணி என்பது ஆயிரம் யானைகளை வென்றவன் மீது பாடப் படுவது. இதன் மூலம் கருணாகரத் தொண்டைமான் மிக வலுவுள்ள படைதனை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளான் என்று நாம் அறியமுடிகிறது.

நில வரி தவிற ஏனைய வரிகள் எல்லாம் நீக்கப்பட்டதால், சுங்கம் தவிர்த்த சோழன் என குலோத்துங்க சோழன் அழைக்கப்பட்டான். கல்வெட்டுகளின் வாயிலாக குலோத்துங்க சோழன் கலைத் துறைகளின் வளர்ச்சிக்கு பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றி அறிந்துகொள்ள முடிகிறது. குலோத்துங்க சோழன் எங்கு இறந்தார் எப்படி இறந்தார் என்பது பற்றிய தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. குலோத்துங்க சோழனின் மறைவிக்குப்பிறகு அவரது மகன் விக்ரம சோழன் சோழப் பேரரசின் மன்னராகப் பதவியேற்றார்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *