விக்கிரம சோழன் – Vikrama Chola

முதலாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசின் மன்னராக விக்கிரம சோழன் பதவியேற்றார். இவர் முதலாம் குலோத்துங்கனுக்கும் இரண்டாம் இராசேந்திர சோழனின் மகள் மதுராந்தகிக்கும் பிறந்தவர் ஆவார். கங்கை கொண்ட சோழபுரத்தில் இவர் சோழ மன்னராகப் பதவியேற்றார்.

முதலாம் கலிங்கப் போர்

விக்கிரம சோழன் அவரின் தந்தை முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் இருந்தே போர்களில் பங்குபெற்றார். முதலாம் குலோத்துங்க சோழனிடம் சாளுக்கியப் போரில் பெரும் தோல்வியைத் தழுவிய ஆறாம் விக்கிரமாதித்தன், நேரடியாக சோழர்களுடன் போர் புரிய விரும்பாமல், கலிங்க நாட்டை வேங்கி நாட்டின் மீது போர் தொடுக்க வைத்தான். வேங்கியில் விஜாயதித்தானே தொடர்ந்து ஆட்சி புரிந்து வந்தான். வேங்கியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் கலிங்கர்கள் வேங்கியின் மீது போர் தொடுத்தனர். வேங்கிக்கு நாட்டிற்கு உதவும் பொருட்டு சோழர்கள் கலிங்கத்துடன் போர் புரிந்தனர்.சோழர்களுக்கும் கலிங்கர்களுக்கும் இடையில் நடந்த இந்தப் போரானது சரித்திரத்தில் முதலாம் கலிங்கப் போர் என்று குறிக்கப்பட்டுள்ளது. முதலாம் குலோத்துங்க சோழனின் மகன் விக்கிரம சோழன் தளபதியாகத் தலைமையேற்றார். விக்கிரம சோழனிற்குத் துணையாக காளிங்கராயனும் கருணாகர பல்லவன் இப்போரினில் ஈடுப்பட்டு துணை நின்றனர். கலிங்க நாடு என்பது தற்போதைய ஒடிசா மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்கள் அடங்கிய பகுதியாகும். முதலாம் கலிங்கப் போரில் கலிங்கர்கள் பெரும் தோல்வியைத் தழுவினர். கலிங்க நாட்டின் தென்பகுதி சோழர்களின் வசம் வந்தது.

கங்காவடி போர்

அது மட்டும் அல்லாமல் இந்தப் போரினை அடுத்து நிகழ்ந்த கங்காவடி போரிலும் விக்கிரம சோழனின் தலைமையில் சோழர் படை பெரும் வெற்றியைப் பெற்றது. மேலும் கருணாகர பல்லவனும் விக்கிரம சோழனுடன் இந்த போரில் பங்குபெற்றான் எனத்தெரிகிறது. இந்த போர்கள் பற்றிய குறிப்பை ஒட்டக்கூத்தர் எழுதிய விக்ரம சோழ உலா நூலின் வாயிலாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

கங்கை கொண்ட சோழபுரத்தில் விக்கிரம சோழர் சோழ மன்னராகப் பதவியேற்ற சமயத்தில் சாளுக்கிய மன்னன் ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கி நாட்டை ஆக்ரமித்தான். வடபகுதியில் சாளுக்கியர்களின் ஆட்சிப் பகுதியில் ஹோய்சாளர்கள் வலு பெறத் துவங்கினர்.

ஈழப் போர்

குலோத்துங்க சோழனின் காலத்தில் உள்நாட்டில் சேரர்களையும் பாண்டியர்களையும் அடக்குவதற்காக சோழர்கள் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் முதலாம் குலோத்துங்க சோழன் ஈழத்திலிருந்த சோழர் படைகளை திரும்பப் பெற்றார். இதனால் விஜயபாகு ஈழம் முழுவதையும் எளிதாக ஆக்ரமித்து அவரின் ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். ஈழத்தின் இழந்த பகுதிகளை மீட்க விக்கிரம சோழர் படையுடன் சென்று விஜயபாகுவை போரில் தோற்க்கடித்தார். புலனருவா பகுதிவரை சோழப் பேரரசின் ஆட்சியின் கீழ் வந்தது.

இந்த இடைப்பட்ட நேரத்தில் ஆறாம் விக்ரமாதித்தன் இறந்தான். இதைத் தொடர்ந்து மேலை சாளுக்கியர்களின் வலு குன்றத் துவங்கியது. ஹோய்சாளர்கள் மேலை சாளுக்கியர்களின் பகுதிகளை ஆக்ரமிக்கத் துவங்கினர். ஹோய்சாளர்கள் சோழர்கள் வசம் இருந்த கங்கவாடி பகுதிவரை ஆக்ரமித்தனர்.

வேங்கிப் போர்

மேற்கூறிய காரணங்களினால் ஈழத்தில் இருந்து கவனத்தைத் திருப்பி விக்ரம சோழன் வேங்கி நாட்டின் மீது போர்தொடுத்தார். போரில் சாளுக்கியர்கள் மற்றும் கலிங்கத்தின் இணைந்த படைகளை தோற்கடித்தார். வேங்கி நாட்டிற்கு அவரது மகன் அபயகுலோத்துங்க சோழனை மன்னராக்கினார். அபயகுலோத்துங்க சோழன் பின்னாளில் இரண்டாம் குலோத்துங்க சோழன் என்று அழைக்கப்பட்டான்.

கங்காவடி போர்

ஹோய்சாளர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட சோழர்கள் பகுதியான கங்கவாடியை விக்ரம சோழர் மீட்டார். போரில் படு தோல்வியைத் தழுவிய ஹோய்சாலர்கள் பின்னர் பல ஆண்டுகளுக்கு சோழர்களுடன் போர் புரியவில்லை.

பொதுவாக விக்கிரம சோழனின் ஆட்சிக்காலதில் சோழப்பேரரசில் அமைதி நிலவியது. இவரது தந்தை முதலாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் நிலவிய அளவிற்கு போர்கள் நடைபெறவில்லை. மேலும் சேரர்களும் பாண்டியர்களும் உள்நாட்டில் குழப்பம் ஏதும் விளைவிக்காமல் அடங்கி இருந்துள்ளனர்.

விக்கிரம சோழனின் ஆட்சிக் காலத்தில் மழை இல்லாமல் சோழ நாட்டில் வறுமை தலை தூக்கியது. ஆதலால் விக்கிரம சோழன் தனது மக்களுக்கு பற்பல தானங்கள் வழங்கியதால் தியாகசமுத்ரம் என்ற பெயர் கிடைத்தது.விக்கிரம சோழன் தீவிர சிவ பக்தனாக விளங்கினான். சிதம்பரம் தில்லைநாதன் கோவிலுக்கு பொற்கூரை வேயந்ததாக கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. சிதம்பரம் அருகே விக்கிரம சோழன் தனக்கு ஒரு மாளிகையும் கட்டிக் கொண்டு அங்கே தன் ஆட்சியின் இறுதி ஆண்டுகளை கழித்தார் எனவும் தெரிகிறது. விக்கிரம சோழனின் காலத்திற்குப்பிறகு அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழ மன்னராகப் பதவியேற்றார்.

About the author