விக்கிரம சோழனுக்குப் பிறகு அவரது மகன் இரண்டாம் குலோத்துங்க சோழன் சோழ மன்னராகப் பதவியேற்றார். கி.பி. 1133ம் ஆண்டு மே மாதத்திற்கும் சூன் மாதத்திற்கும் இடையில் இரண்டாம் குலோத்துங்க சோழன் மன்னராகப் பதவியேற்றிருக்கவேண்டும் என்பதை நாம் அவரின் கல்வெட்டுகள் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். படவியேற்றதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் வரை விக்கிரம சோழனும் இரண்டாம் குலோத்துங்க சோழனும் சேர்ந்தே சோழப் பேரரசை ஆண்டு வந்துள்ளனர்.
இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தில் சோழப் பேரரசில் அமைதி நிலவியது. பெரும் போர்கள் நிகழ்ந்ததாக எந்த ஒரு ஆதாரமும் சரித்திர ஆராட்சியாளர்களுக்கு கிடைக்கவில்லை. பொதுவா பெரும் போர்கள் ஏதும் நடைபெருமாயின் வெற்றி பெற்ற மன்னர்கள் அது பற்றிய குறிப்புகளை கல்வெட்டுகளில் பதிவிடுவது வழக்கம். மேலும் புலவர்கள் இந்தப் போர் பற்றி அவர்கள் நூலில் குறிப்பிடுவார்கள். இதுபோன்ற என்ற எந்த ஒரு குறிப்பும் சரித்திர ஆராட்சியாளர்களுக்கு கிடைக்காததால் இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தில் சோழப் பேரரசில் அமைதி நிலவியது என்பதை நாம் உறுதி செய்யலாம்.
சோழப் பேரரசிற்குள் அடங்கிய பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் உள்நாட்டு குழப்பங்கள் ஏதும் விளைவித்ததாக குறிப்புக்கள் இல்லை. அதேபோல் சோழ எல்லைகளிலும் எதிரிகள் யாரும் போர் புரிந்ததாக ஏதும் குறிப்புக்கள் இல்லை.
இதே காலகட்டத்தில் சோழர்களின் எதிரிகளான மேலை சாளுக்கியர்கள் முழுவதுமாகத் தோற்கடிக்கப்பட்டு ஹோய்சாளர்கள் வம்சம் துவங்கியது. மேலை சாளுக்கியர்கள் ஹோய்சாள அரசின் ஆட்சிக்குட்பட்ட நாடாக மாறியது. இரண்டாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தில் சோழப்பேரரசு கீழை சாளுக்கிய தேசமான வேங்கி மற்றும் தெற்கு கலிங்கம் வரை பரவி இருந்தது. சோழர்களின் தலைநகராக விளங்கிய கங்கை கொண்டசோழபுரத்தை விடுத்தது தில்லையில் இருந்தபடி இரண்டாம் குலோத்துங்க சோழன் ஆட்சி செய்ததாகத் தெரிகிறது.
சோழப் பேரரசில் அமைதி நிலவியதால் இறை பணிகள் அதிகம் நடைபெற்றது. இரண்டாம் குலோத்துங்க சோழன் சிதம்பரம் கோயிலுக்கு திருப்பணிகள் செய்ததாகத் தெரிகிறது.
சிதம்பரம் திருப்பணிகள்
இரண்டாம் குலோத்துங்க சோழன் சிற்றம்பலத்தை பொன்னாலும் பற்பல விலை உயர்ந்த மணிகளாலும் அலங்கரித்தார். உள் கோபுரத்தை பொன்னால் வேய்ந்தார். மேலும் ஏழு நிலை கோபுரங்கள் கட்டினார். சிவகாமி கோட்டம் அமைத்தார். விழா நாட்களில் எம்பெருமான் உலா வருவதற்குப் பொன்னாலும் மணியாலும் அழகுற செய்யப்பட்ட தேரொன்று செய்தார். நான்கு பக்கங்களிலும் கூடங்களோடு கூடிய திருக்குளம் ஒன்று கட்டினார்.
கடலில் திருமால்
எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்மப் பல்லவனால் தில்லையம்பலத்தில் திருமால் நிறுவப்பெற்றார். தில்லை நடராஜர் கோயிலை புதுப்பித்து பெரிதாக அமைக்க இரண்டாம் குலோத்துங்க சோழன் முற்பட்டதிற்கு திருமாலை வழிப்பட்டு வந்தவர்கள் இடையூறு விளைவித்தனர். இதனால் சினம் கொண்ட இரண்டாம் குலோத்துங்க சோழன் பள்ளி கொண்டிருந்த திருமாலை பெயர்த்து கடலில் எறிந்துவிட்டார் என ஒட்டக்கூத்தர் அவரது நூலில் கூறுகிறார். இரண்டாம் குலோத்துங்க சோழன் தில்லையில் திருப்பணிகள் விரிவாக செய்யத் தொடங்கியபோது ஏற்பட்ட இடப்பற்றாக்குறையால் திருமால் மூர்த்தியைப் பெயர்தெடுத்து கடலில் கிடத்தினார் என்றும் இடத்தைப் மிகையாகிக் கொண்டு திருப்பணிகளை நிறைவேற்றினார் என்ற கூற்றும் நிலவுகிறது.
இரண்டாம் குலோத்துங்க சோழன் வைணவ சமயத்தின் மேல் வெறுப்புடையவன் இல்லை. உண்மையில் வைணவ சமையத்தில் வெறுப்பு உடையவனாக இருந்திருந்தால் இரண்டாம் குலோத்துங்க சோழன் அவர் ஆட்சிக்குட்பட்ட அனைத்து வைணவ கோயில்களுக்கும் இடையுறு செய்திருக்க வேண்டும் ஆனால் அவ்வாறு இல்லாமல் தில்லையில் மட்டுமே அவர் இவ்வாறாக செய்திருக்கின்றார் என்பதிலிருந்து காரணம் வைணவம் மீதான வெறுப்பல்ல என்பது தெரிகிறது.
இரண்டாம் குலோத்துங்கனின் ஆட்சி அமைதியாகவும் நல்ல நிர்வாகத்துடனும் வளமாகவும் இருந்ததாகத் தெரிகிறது. சோழ நாடு முழுவதிலும் குறிப்பிடத்தக்க எந்த ஒரு பிரச்சனையும் இன்றி நாடும் நாட்டு மக்களும் அமைதியுடனும் செழிப்புடனும் இருந்தனர். எந்தவிதமான பெரும் போர் நடந்ததற்கான அறிகுறிகள் இல்லை. தில்லை நடராசர் கோவிலில் உள்ள கோவிந்தராசர் சிலையை கோயில் திருப்பணிக்கு இடம் மாற்றும் போது வைணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாகவும் பின்னர் இரண்டாம் குலோத்துங்க சோழன் வற்புறுத்தி மரமாத்து பார்த்ததாகவும் தெரிகிறது. பின் வந்த வைணவர்கள், இதை இரண்டாம் குலோத்துங்க சோழன் கோவிந்தராசர் சிலையை கோயிலில் இருந்து அகற்றியதாக திரித்து கூறியுள்ளது பற்றி ஒட்டக்கூத்தர் எழுதிய குலோத்துங்க சோழ உலா மூலம் அறியலாம். இரண்டாம் குலோத்துங்க சோழன் கலைத் துறைகளின் வளர்ச்சிக்கும் பொருளுதவிகள் புரிந்துள்ளது பற்றிச் கல்வெட்டு குறிப்புகள் காணப்படுகின்றன. மேலும் இரண்டாம் குலோத்துங்க சோழன் தமிழ்ப் புலமையும், பலவகை செய்யுள் இயற்றும் திறமையும் பெற்றவர் என்பதும் தெரிகிறது. இரண்டாம் குலோத்துங்க சோழன் கி.பி 1150 ஆண்டு இறந்தார். இவரின் மறைவுக்குப் பிறகு இவரின் மகன் இரண்டாம் இராஜராஜ சோழன் சோழப் பேரரசிற்கு மன்னராகப் பதவியேற்றார்.
Comments