இரண்டாம் இராஜராஜ சோழனிற்குப் பிறகு சோழ மன்னராகப் பதவியேற்றவர் இரண்டாம் இராஜாதிராஜ சோழன் ஆவர். இரண்டாம் இராஜாதிராஜ சோழன், விக்கிரம சோழனின் மகள் வயிற்றுப் பேரனாவார்.
இரண்டாம் இராஜராஜ சோழனின் மகன்கள் சிறுவர்களாக இருந்தமையால் அவரின் தாயாதிகளில் ஒருவனான எதிரிளிப் பெருமாள் என்பவரை இரண்டாம் இராஜராஜ சோழன் சோழ மன்னனாக முடிசூட்டினார். எதிரிளிப் பெருமாள் பின்னர் இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் என்ற பெயரில் அழைக்கப்பட்டார். இரண்டாம் இராஜராஜ சோழனும் இரண்டாம் இராஜாதிராஜ சோழனும் இணைந்து சில ஆண்டுகாலம் சோழப் பேரரசை ஆண்டுவந்தனர்.
பாண்டியப் போர்
இரண்டாம் இராஜராஜ சோழனின் காலத்தில் துவங்கிய பாண்டிய மன்னர்களின் தாயாதிச் சண்டை இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் காலத்திலும் தொடர்ந்தது. இரண்டாம் இராஜராஜ சோழனின் ஆட்சி காலத்தில், பாண்டிய நாட்டில் பெரும் குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்படலாயின.
மதுரையில் மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி 1144 இல் பாண்டிய நாட்டின் மன்னனாக அரியணை ஏறினான். கி.பி. 1162ல் பாண்டிய நாட்டின் தென் பகுதியான கீழ்வேம்ப நாட்டில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மன்னனாகப் பதவியேற்றான். கீழ்வேம்ப நாடு என்பது தற்போதைய திருநெல்வேலி மாவட்டத்தையும் அதை ஒட்டிய பகுதிகளையும் உள்ளடக்கியது. மாறவர்மன் பராக்கிரம பாண்டியனிடமிருந்து மதுரையை கைப்பற்ற எண்ணி மதுரையை முற்றுகையிட்டான் சடையவர்மன் குலசேகர பாண்டியன்.
மாறவர்மன் பராக்கிரம பாண்டியன் இலங்கை மன்னனான பராக்கிரம பாகுவிடம் படையுதவிகள் வழங்குமாறு கேட்டுக்கொண்டான். இலங்கையிலிருந்து ஜகத்விஜய தண்டநாயகன் தலைமையில் பெரும்படை மதுரைக்குக் கிளம்பியது. ஆனால் இலங்கைப்படை மதுரை வந்தடையும் முன்னரே மாறவர்மன் பராக்கிரம பாண்டியனையும் அவன் மனைவி மக்களையும் கொன்று மதுரையினைக் கைப்பற்றியிருந்தான் சடையவர்மன் குலசேகர பாண்டியன்.
ஜகத்விஜய தண்டநாயகன் தலைமையில் வந்த இலங்கைப்படை இராமேஸ்வரம் மற்றும் அதை சுற்றிய பகுதிகளை கைப்பற்றி அங்கிருந்தபடி சடையவர்மன் குலசேகர பாண்டியனுடன் போர் புரிந்தன. இதனால் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கொங்கு நாட்டை ஆண்ட அவனின் மாமனிடம் படை உதவி கேட்டுப்பெற்றான். இருபடைகளும் சடையவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையில் இலங்கைப் படையுடன் போரிட்டன. போரின் முடிவில் ஜகத்விஜய தண்டநாயகன் பெரும் வெற்றிபெற்றான். மேலும் ஜகத்விஜய தண்டநாயகன் மதுரையைக் கைப்பற்றினான். மலை நாட்டில் மறைந்து வாழ்ந்துவந்த மாறவர்மன் பராக்கிரம பாண்டியனின் கடைசி மகன் சடையவர்மன் வீரபாண்டியன் மதுரையில் மன்னராகப் பதவியேற்றான். மேலும் ஜகத்விஜய தண்டநாயகன் கீழை மங்கலம் மேலை மங்கலம் ஆகிய ஊர்களை கண்ட தேவ மழவராயனிடம் வழங்கி ஆட்சி செய்யச் சொன்னான். தொண்டி, கருத்தங்குடி, திருவேகம்பம் ஆகிய ஊர்களின் ஆட்சிப் பொறுப்பினை மழவச்சக்ரவர்த்திக்கு அளித்தான்.
சடையவர்மன் குலசேகர பாண்டியன் மீண்டும் ஒருமுறை படை திரட்டிப் போருக்கு வந்தான். சடையவர்மன் வீரபாண்டியன், மழவச்சக்ரவர்த்தி மற்றும் கண்ட தேவ மழவராயன் மூவரும் ஜகத்விஜய தண்டநாயகனுடன் சேர்ந்து போருக்கு வந்தனர். தற்போதைய ஸ்ரீவில்லிப்புத்தூரில் நடைபெற்ற இந்தப் போரிலும் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பெரும் தோல்வியைத் தழுவினான் என்பது குறிப்பிடத்தக்கது.
போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து கி.பி. 1167ஆம் ஆண்டில் சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழர்களிடம் உதவியை நாடினான். சோழ நாட்டை இரண்டாம் இராஜராஜ சோழன் மற்றும் இரண்டாம் ராஜாதி ராஜ சோழன் இருவரும் இணைத்து ஆண்டுவந்த காலமிது.
சோழர் தளபதி திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் தலைமையில் சோழர்கள் படை இலங்கைப் படைகளுடன் போரில் ஈடுபட்டான். முதலில் நடந்த போர்களில் இலங்கைப் படைகளே வெற்றிபெற்றன. காஞ்சிபுரத்தை அடுத்துள்ள ஆர்ப்பாக்கம் எனும் ஊரில் கிடைத்த கல்வெட்டின்படி கீழ் நிலையிலும் பின் பொன்னமராவதியிலும் நடைபெற்ற போரில் சோழர் படைத் தளபதி பல்லவராயன் தோற்றான்.
பின்னர் இறுதியில் தொண்டி, பாசிப்பட்டினம் ஆகிய ஊர்களில் நடைபெற்ற போர்களில் சோழர் படைகள் வெற்றி பெற்றது என்பது தெரிகிறது. சடையவர்மன் வீரபாண்டியனின் படைகள் மற்றும் இலங்கைப் படைகள் சோழர் படைகளிடம் தோற்றன. சோழர் தளபதி திருச்சிற்றம்பமுடையான் பெருமானம்பிப் பல்லவராயன் இராமேஸ்வரத்தில் இருந்த இலங்கைப் படைகளை முற்றிலுமாக அழித்தார். சடையவர்மன் வீரபாண்டியன் மலை நாட்டிற்கு தப்பிச்சென்றார்.
சோழர் படைத்தலைவன் பல்லவராயன் இலங்கைப் படைத் தலைவர்களான இலங்காபுரித் தண்டநாயகன் மற்றும் ஜகத் விஜய தண்டநாயகன் ஆகிய இருவரின் தலைகளையும் மதுரை கோட்டை வாசலில் வைத்தான் பல்லவராயன் பேட்டைக் கல்வெட்டு வாயிலாக நாம் அறியமுடிகிறது.
போரின் முடிவில் சோழர்களின் ஆதரவுடன் சடையவர்மன் குலசேகர பாண்டியன் மதுரையில் மன்னராகப் பதவியேற்றார். சோழர் படைகளுக்கும் இலங்கை படைகளுக்கும் புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம், மட்டிவாழ் ஆகிய இடங்களிலும் போர்கள் நடைபெற்றது. சோழர் படைத்தலைவன் பல்லவராயன் தலைமையில் சோழர்படைகள் போரில் பெரும் வெற்றிபெற்றனர். இலங்கை மன்னன் பராக்கிரம பாகுவின் படைகள் நிர்முலமாக்கப்பட்டது. மகாவம்சம் மற்றும் தொண்டை நாட்டிலுள்ள கல்வெட்டுகள் வாயிலாக நாம் இதை உறுதி செய்யலாம்.
நேரிடையான போரில் சோழர்களை வெற்றிபெற முடியாததால் போரில் தோற்ற இலங்கை மன்னன் பராக்கிரம பாகு சோழர்களை பழிவாங்கும் நோக்குடன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுடன் நட்பை வேண்டினான். சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கு இலங்கை மன்னன் பராக்கிரமபாகு பல பரிசுகளை அனுப்பினான். மேலும் மன்னன் பராக்கிரமபாகு அவனது மகளை சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கு திருமணம் செய்துவைத்தான். இலங்கையுடன் ஏற்பட்ட தொடர்பைத் தொடர்ந்து சோழர் படைத் தலைவர்களான இராசராசக் கற்குடி மாராயன், இராச கம்பீரன், அஞ்சுக்கோட்டை நாடாள்வான் முதலானோர் மதுரையை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
சடையவர்மன் குலசேகர பாண்டியனின் இச்செயல்களால் கோபம் கொண்ட சோழ மன்னர் இரண்டாம் இராஜாதிராஜ சோழன் பாண்டிய நாட்டின் மீது போர் தொடுத்தார். சோழர் படைத்தலைவன் பல்லவராயன் தலைமையான சோழர்களின் பெரும்படை மதுரையை தாக்கின. கி.பி. 1175ல் நடைபெற்ற இப்போரில் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் படைகள் தோல்வியைத் தழுவின. சடையவர்மன் குலசேகர பாண்டியன் இலங்கைக்குத் தப்பியோடினான். சோழ நாட்டிற்கு வரி செலுத்தவும் சோழ நாட்டிற்கு பணிந்த நாடாக இருக்கவும் சடையவர்மன் வீரபாண்டியன் உறுதியளித்தான். இதனையடுத்து சடையவர்மன் வீரபாண்டியன் பாண்டிய நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றான்.
இரண்டாம் இராஜாதிராஜ சோழனுக்குப் பின்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் இறுதிக்காலம் பற்றி சரியான தகவல்கள் இல்லை. ஆயினும் அவர் இறுதி காலத்தை தெலுங்கு தேசத்தில் கழித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
Comments