மூன்றாம் குலோத்துங்க சோழன் – Kulothunga Chola III

இரண்டாம் இராஜாதிராஜ சோழனுக்குப் பின்னர் மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டுக்களளின் படி பார்த்தால் கி.பி 1178ல் அவர் சோழ மன்னராகப் படியேற்றிருக்க வேண்டும் என்பது தெரிகிறது. இரண்டாம் இராஜராஜ சோழன் காலத்தில் துவங்கிய பாண்டியர்களின் தொல்லைகள் இவரின் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது.

முதல் பாண்டியப் போர்

இரண்டாம் இராஜாதிராஜ சோழனால் பாண்டிய நாட்டின் மன்னனான வீர பாண்டியன், சோழர்கள் செய்த உதவியை மறந்து சிங்களர்களுடன் இணைந்து சோழர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினான். சோழ நாட்டிற்கு கப்பம் கட்ட மறுத்தான். மேலும் இதே சமயத்தில் குலசேகர பாண்டியனின் மகன் விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோதுங்க சோழனிடம் சரண் அடைந்து, தன்னை பாண்டிய நாட்டிற்கு மன்னனாக்கும்படி வேண்டினான். இதைத் தொடர்ந்து இரண்டாம் இராஜாதிராஜ சோழனின் ஆட்சி காலத்தில் முதல் பாண்டியப் போர் நடைபெற்றது. சோழர் படைகளுக்கு இரண்டாம் இராஜாதிராஜ சோழனே தலைமையேற்று சென்றான். கிபி 1182 ஆம் ஆண்டு நடந்த இந்தப் போரில் வீர பாண்டியனின் படைகளும் இலங்கை படைகளும் இரண்டாம் இராஜாதிராஜ சோழனிடம் போரில் தோற்றன. போரில் வென்ற இரண்டாம் இராஜாதிராஜ சோழன் விக்ரம சோழனை பாண்டிய நாட்டின் மன்னனாக்கினான். மேலும் சோழ நாட்டிற்கு கப்பம் கட்டவும் பணித்தான். போரில் தோற்ற வீர பாண்டியன் சேர நாட்டிற்குத் தப்பியோடினான்.

இரண்டாம் பாண்டிய போர்

சில வருடங்கள் கழித்து கிபி 1188–89 ஆம் ஆண்டு வீர பாண்டியன் மறுபடியும் சோழர்களுக்கு எதிராக போர்கோடி தூக்கினான். இந்த முறை சிங்களர்களுக்கு பதிலாக சேரர் படைகளுடன் தன் படையை இணைத்து சோழனை எதிர்த்தான். மதுரையை வெல்லும் நோக்கத்துடன் படையை வீர பாண்டியன் நடத்தினான். வீர பாண்டியனின் நோக்கத்தை அறிந்த மூன்றாம் குலோத்துங்க சோழன் மதுரைக்கு கிழக்கே உள்ள நெட்டூரில் வீர பாண்டியனின் படைகளை சந்தித்தான். இருபடைகளுக்கும் இடையில் அங்கு போர் மிகப்பயங்கரமாக நடந்ததாகத் தெரிகிறது. போரில் முடிவில் இந்தப் போரிலும் வீர பாண்டியன் பெரும் தோல்வியையே சந்தித்தான். போரில் தோற்ற வீர பாண்டியன் சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்க சோழனிடம் சரணடைந்ததைத் தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க சோழன் பாண்டிய நாட்டின் ஒரு பகுதியைப் பிரித்து அதற்கு வீர பாண்டியனை மன்னராக்கினான்.

சிங்களப் போர்

சோழர்களின் சிறப்பான ஆட்சியை விரும்பாத சிங்களர்கள் எப்பொழுதுமே பாண்டியர்களை சோழர்களுக்கு எதிராகத் திருப்பி தொடர்ந்து போர்கள் பல நடக்கக் காரணமாக இருந்தனர். மேலும் பாண்டிய நாட்டில் பல குழப்பங்கள் ஏற்படவும் தாயாதிச் சண்டைகள் ஏற்படவும் சிங்களர்களே முக்கியக் காரணமாக இருந்தனர். இதனால் இரண்டாம் பாண்டியப் போரில் பெற்ற வெற்றியினைத் தொடர்ந்து மூன்றாம் குலோத்துங்க சோழன் இலங்கையின் மேல் போர்தொடுத்தான். இந்த போர் எந்த சிங்கள மன்னன் காலத்தில் நடைபெற்றது என்பது பற்றி சரியான குறிப்புக்கள் இல்லை. இந்த போர் பராக்கிரம பாகு அல்லது அவனுக்கு அடுத்த வந்த மன்னன் காலத்தில் நடந்து இருக்கலாம் என்று கருதப்படுகிறது. புலனருவா மற்றும் யாழ் ஆகிய இடங்களில் நடந்த போரில் சோழர்களின் படை பெரும் வெற்றியைப் பெற்றது.

கொங்கு நாட்டுப் போர்

கிபி 1186–87 ஆம் ஆண்டில் ஹொய்சாளர்கள் அவர்களின் எல்லையை விஸ்தரிக்கத் தொடங்கினர். அவர்கள் தொடர்ந்து சாளுக்கிய நாட்டின் எல்லைகளில் போர் புரிந்துவந்தனர். சோழர்கள் பாண்டிய நாட்டிலும் அதைத் தொடர்ந்து சிங்களத்திலும் போர் புரிந்து வந்த நேரத்தில் ஹொய்சளர்கள் கொங்கு நாட்டை ஆக்ரமித்தனர். சிங்களப் போரில் வெற்றி பெற்றவுடன் சோழர்கள் படை ஹொய்சளர்கள் மீது படையெடுத்துக் சென்றது. போரில் ஹொய்சளர்கள் படை தோற்கடிக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டது. கொங்கு நாடு ஹொய்சளர்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டது.

கம்பகரேசுவரர் கோயில்

கொங்கு நாட்டுப் போருக்குப் பின்னர் அடுத்த 10 ஆண்டுகளுக்கு சோழ நாட்டில் போர் நடந்ததாக எந்த ஒரு கல்வெட்டு குறிப்புகளும் இல்லை. ஆதலால் இந்த 10 ஆண்டுகள் சோழ நாடு அமைதியுடன் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்த அமைதியான காலகட்டத்தில் பற்பல சிறந்த பணிகள் சோழ நாட்டில் நிகழ்ந்தன. தற்போதைய தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருபுவனம் என்னும் சிற்றூரில் உள்ள கம்பகரேசுவரர் என்ற சிவாலயம் மூன்றாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது.

திருபுவனம் கம்பகரேஸ்வரர் கோயில்

காஞ்சிப் போர்

கிபி 1208ஆம் ஆண்டு காகதீயா அரசு தனது விஸ்தரிப்பினை ஆரம்பித்தது. நேரடியாக சோழர்களை எதிர்க்க இயலாத காகதீய அரசர்கள் சோழர்களின் எல்லைகளில் இருந்த சிற்றரசர்களை சோழ நாட்டிற்கு எதிராக திருப்பினர். சோழ நாட்டின் எல்லைகளில் கலகங்கள் விளைவித்தனர்.

காகதீய அரசன் கணபதியின் தூண்டுதலினால் காஞ்சிமா நகரை ஆண்டு வந்த வீர நல்ல சித்தன்ன தேவ சோழன் என்கிற சிற்றரசன் குலோத்துங்க சோழனுக்கு அடிபணியாமல் கப்பம் கட்டுவதை நிறுத்தினான். இவனுக்கு துணையாய் காகதீய அரசன் இருந்தான். இதனால் மூன்றாம் குலோத்துங்க சோழன் காஞ்சி மாநகர் நோக்கி சோழர் படைகளை நகர்த்தினான். போரில் சித்தன்ன தேவன் படைகள் மற்றும் காகதீய அரசன் கணபதியின் படைகள் தோல்வியடைந்தன.

மூன்றாம் பாண்டியப் போர்

விக்கிரம பாண்டியனின் மறைவைத் தொடர்ந்து ஜடாவர்ம குலசேகர பாண்டியன் பாண்டிய மன்னனாக மதுரையில் பதவியேற்றான். ஜடாவர்ம குலசேகர பாண்டியன் மதுரையில் இருந்த சோழர்களின் அமைச்சர்களை வெளியேற்றினான். மேலும் சிங்கள நாட்டுடன் உறவு கொண்டு சோழ நாட்டை எதிர்த்தான். இதைத் தொடர்ந்து மூன்றாம் பாண்டியப் போர் தொடங்கியது. சிங்களப் படை மற்றும் பாண்டியர்களின் படை இரண்டும் சேர்ந்து சோழர்கள் படையை எதிர்த்தன. காவிரி நதிக் கரை அருகில் மட்டியூர் என்ற இடத்தில் போர் நடைபெற்றதாகத் தெரிகிறது. பலநாட்கள் நடைபெற்ற இந்தப் போரில் பாண்டியர்கள் மற்றும் சிங்களர்களின் இணைந்த படை போரில் சோழர்களிடம் தோற்றது. ஜடாவர்ம குலசேகர பாண்டியன் மனைவி மற்றும் மக்களுடன் சிங்கள நாட்டிற்கு தப்பியோடினான்.

மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு கி.பி 1216ஆம் ஆண்டில் மூன்றாம் இராஜராஜ சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published.