மூன்றாம் இராஜராஜ சோழன் – Rajaraja III

மூன்றாம் குலோத்துங்க சோழனுக்குப் பிறகு கி.பி 1216ஆம் ஆண்டில் மூன்றாம் இராஜராஜ சோழன் சோழ நாட்டிற்கு மன்னராகப் பதவியேற்றார். சோழ மன்னர்களின் வரிசையில் வந்த இவர் நிர்வாகத் திறமையும் போர்த் திறமையும் அற்ற ஒரு மன்னராக விளங்கினார் என்பதை பேரரசாக இருந்த சோழ நாடு இவர் காலத்தில் சிற்றரசாக மாறியதிலிருந்து நாம் அறியலாம்.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாததால் பாண்டியர்களும், தெலுங்கு சோடர்களும், வேங்கி நாடும் மற்றும் பல அரசுகளும் சோழர்களுக்கு அடங்கிய சிற்றரசர்களாக இருந்துவந்தனர். மூன்றாம் குலோத்துங்க சோழனின் மறைவுக்குப் பிறகு சோழப் பேரரசிற்கு அடங்கிய பல சிற்றரசர்கள் விடுதலை வேண்டி மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தின் தொடர்ந்து உள் நாட்டு குழப்பத்தில் ஈடுபடலாயினர்.

முதல் பாண்டியப் போர்

மூன்றாம் குலோத்துங்க சோழனின் ஆட்சி காலத்தின் துவங்கிய பாண்டியர்கள் உடனான போர்கள் மூன்றாம் இராஜராஜ சோழனின் ஆட்சி காலத்திலும் தொடர்ந்தது. பாண்டிய மன்னர்களின் பரம்பரையில் வந்த மாறவர்மன் சுந்தர பாண்டியன், தாயாதிச் சண்டையினால் ஒற்றுமை இன்றி பிரிந்து கிடந்த பாண்டியர்களை ஒன்றிணைத்தான். ஒன்றிணைத்த பாண்டியர்களின் பெரும் படை சோழ மன்னன் மூன்றாம் இராஜராஜ சோழனின் படையுடன் போரிட்டது. போர்த் திறமையற்ற மூன்றாம் இராஜராஜ சோழனின் தலைமையில் போரிட்ட சோழர்களின் படை பெரும் தோல்வியைத் தழுவியது. தில்லை (சிதம்பரம்) வரை படையெடுத்து வந்த மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் தோற்ற மூன்றாம் இராஜராஜ சோழன் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க ஒப்புக்கொண்டான்.

போரில் மூன்றாம் இராஜராஜ சோழன் தோற்றதைத் தொடர்ந்து போரின் முடிவில் தெலுங்கு சோழர்கள், சேரர்கள், வேங்கி நாடு மற்றும் பல நாடுகளும் மற்றும் சிற்றரசுகளும் சோழர்களிடமிருந்து விடுதலைப் பெற்றதாய் அறிவித்தன. சோழ நாட்டின் எல்லைகள் சுருங்கின. மூன்றாம் குலோத்துங்க சோழனின் காலத்தில் பறந்து விரிந்திருந்த சோழ நாட்டின் எல்லைகள் தஞ்சாவூர் முதல் காஞ்சிபுரம் வரை சுருங்கியது. இந்த விவரங்களை பாண்டியர்கள் மற்றும் சோழர்களின் கல்வெட்டுகள் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

இரண்டாம் பாண்டியப் போர்

பாண்டியளர்களின் எழுச்சியைக் கண்ட ஹொய்சாள மன்னன் வீர நரசிம்மன், பாண்டியர்களின் ராஜ்ய விஸ்தரிப்பை தடுக்கும் நோக்கத்துடன் மூன்றாம் இராஜராஜ சோழனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார். இதனால் மூன்றாம் இராஜராஜ சோழன் பாண்டியர்களுக்கு செலுத்த ஒப்புக்கொண்ட கப்பத்தை செலுத்தாமல் நிறுத்தினார். இதனால் பாண்டியர்களுடனான இரண்டாம் போர் துவங்கிற்று. சோழர்களின் படைகளும் ஹொய்சாளர்களின் படைகளும் இணைந்து மூன்றாம் இராஜராஜ சோழனின் தலைமையில் போருக்கு வந்தன. போர்த்திறமை சிறிதும் அற்ற மூன்றாம் இராஜராஜ சோழனின் தலைமையில் வந்த சோழர் படை மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் மறுமுறையும் பெரும் தோல்வியைத் தழுவியது. திருவயிந்திபுரம் கல்வேட்டுகள் வாயிலாக நாம் இந்தத் தகவலை அறியமுடிகிறது.

கோப்பெருஞ்சிங்கன்

வயலூர் கல்வெட்டின் வாயிலாக சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராஜராஜ சோழனை சிறையெடுத்தது பற்றி நாம் அறியமுடிகிறது. கோப்பெருஞ்சிங்கன் என்பவன் பல்லவர்களின் படைத்தலைவர் கிளையில் வந்த காடவச் சிற்றரசர்களில் ஒருவன். தற்போதைய விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சேந்தமங்கலம் என்ற ஊரை தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். இரண்டு முறை மாறவர்மன் சுந்தர பாண்டியனிடம் போரில் தோற்ற மூன்றாம் இராஜராஜ சோழனிற்கு கப்பம் கட்ட மறுத்து சோழ மன்னனை சிறைப்படுத்தினான். சோழ மன்னனை எப்படி கோப்பெருஞ்சிங்கன் சிறையெடுத்தான்? போர் நடந்ததா? என்பது பற்றி விவரங்கள் சரிவர தெரியவில்லை. மேலும் வைணவக் கோயில்களை கோப்பெருஞ்சிங்கன் சூறையாடினான் என்பது கத்திய கர்நாமிதாம் நூல் வாயிலாக அறியமுடிகிறது.

ஹொய்சாள மன்னன் வீர நரசிம்மன் தீவிர வைணவன். கோப்பெருஞ்சிங்கன் வைணவக் கோயில்களை சூறையாடுவதையும் மூன்றாம் இராஜராஜ சோழனை சிறையெடுத்ததையும் அறிந்த வீர நரசிம்மன் படை எடுத்துவந்தான். போரில் கோப்பெருஞ்சிங்கனை தோற்கடித்து மூன்றாம் இராஜராஜ சோழனை சிறையிலிருந்து மீட்டான். மேலும் பாண்டியர்ள் மீது படையெடுத்துச் சென்று காவிரி வரையிலான பகுதிகளை மூன்றாம் இராஜராஜ சோழனுக்கு மீட்டுக் கொடுத்தான். பேரரசாக விளங்கிய சோழ நாடு மூன்றாம் இராஜராஜ சோழனின் திறமை இல்லாத காரணத்தால் ஹொய்சாளர்களின் தயவில் இயங்கும் சிற்றரசாக மாறியது.

தொடர்ந்து தோல்விகள் மீது தோல்வியை அடைந்த மூன்றாம் ராஜ ராஜ சோழன், தனது திறமையின்மையை உணர்ந்தே இருந்தான். இதைத் தொடர்ந்து 1246ல் மூன்றாம் ராஜேந்திரச் சோழனை இளவரசனாக மகுடம் சூடி பின்பு தனது ஆட்சிக் காலத்திலேயே அவனை மன்னனாக அறிவித்தான்.

About the author