மூன்றாம் ராஜேந்திர சோழன் – Rajendra Chola III

சோழர்களின் வழக்கப்படி மூன்றாம் இராஜேந்திர சோழன் கி.பி 1246ல் சோழர்களின் இளவரசனாக பதவியேற்றார். அவரின் தந்தை மூன்றாம் இராஜராஜ சோழன் திறமையற்றவராக விளங்கியதால் பெயரளவிற்கே அவர் சோழ மன்னனாக விளங்கினார். உண்மையில் ஆட்சியும் அதிகாரமும் இளவரசர் மூன்றாம் இராஜேந்திர சோழன் வசம் இருந்தது.

மூன்றாம் இராஜராஜ சோழன் திறமையற்றவராக விளங்கியதால் பாண்டியர்கள் இருபதாண்டு காலத்தில் இரண்டு முறை சோழ நாட்டில் படையெடுத்தும் தீவைத்தும் கொள்ளையடித்தும் உள்ளனர். கோப்பெருஞ்சிங்கன் கலகம் செய்து மூன்றாம் இராஜராஜ சோழனை சிறை வைத்ததற்கும் பாண்டியர்களின் ஆதரவே காரணம்.

மூன்றாம் இராஜேந்திர சோழன் கல்வெட்டுகள் வாயிலாக அவர் பதவியேற்ற மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு பாண்டிய மன்னர்களை வென்றான் என்று தெரிகிறது. மூன்றாம் இராஜேந்திர சோழன் மெய்க்கீர்த்தி கூறும் திருப்புராந்தகம் கல்வெட்டில் ‘இருவர் பாண்டியர் முடித்தலை கொண்டருளின’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் இராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டைக் கொள்ளையடித்ததாயும் தெரிகிறது. இதன் மூலம் பாண்டியர்களால் சோழர்களுக்கு ஏற்பட்ட அவப்பெயரை மூன்றாம் இராஜேந்திர சோழன் நீக்கினான் என்று அறிந்துகொள்ளலாம். மூன்றாம் இராஜேந்திர சோழன் போரில் வென்ற அந்த இரு பாண்டிய மன்னர்களின் பெயர்களை அறியமுடியவில்லை.

மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கும் மூன்றாம் இராஜேந்திர சோழனுக்கும் இடையில் போர் நடந்ததாக எந்த ஒரு குறிப்பும் இல்லை. ஆதலால் மூன்றாம் இராஜேந்திர சோழன் போரில் வென்ற அந்த இரு பாண்டிய மன்னர்கள், பாண்டிய மன்னன் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மறைவுக்குப்பின்னர் மற்றும் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் மன்னராகப் பதவியேற்பதற்கு முன்னர் இருந்த இடைப்பட்ட காலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

முதல் பாண்டியப் போர்

மூன்றாம் இராஜராஜ சோழன் காலத்தில் சோழ தேசம் இழந்த நிலப்பரப்பையும் செல்வத்தையும் மேலும் சோழர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை நீக்கும் பொருட்டும் ஒரு பெரிய படையை குலோத்துங்க ராஜேந்திரன் என்று அழைக்கப் படும் மூன்றாம் ராஜேந்திர சோழன் திரட்டினான். பாண்டிய நாட்டில் முதலாம் மாரவர்மன் சுந்தரபாண்டியன் இயற்கை எய்தியதால் அவனக்கு பின் பின்னர் சடையவர்மன் குலசேகர பாண்டியன் என்பவன் பாண்டியர்களின் மன்னனாகப் பதவியேற்றான்.

மூன்றாம் ராஜேந்திர சோழனுக்கும் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்கும் நடைபெற்ற இந்த முதல் பாண்டியப் போரில் மூன்றாம் ராஜேந்திர சோழன் பெரும் வெற்றி பெற்றான். போரில் தோல்வியடைந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் சோழர்களுக்கு மீண்டும் கப்பம் கட்டும்படி ஆனான். மேலும் சோழர்களுக்கு பாண்டியர்களினால் ஏற்பட்ட அவமானத்தை துடைக்கும் நோக்குடன் இந்தப் போர் நடைபெற்றதால், பாண்டியர்களின் அரண்மனைகள் சூறையாடப்பட்டன, மாளிகைகள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போரின் முடிவில் பாண்டியர்களின் செல்வம் களவாடப்பட்டது.

ஹோய்சாளர்கள்

ஹோய்சாள மன்னன் வீர நரசிம்மன் சோழர்களுடன் பெண் உறவு கொண்டிருந்ததால் மூன்றாம் இராஜராஜ சோழனுக்கு இறக்கும் வரையில் ஆதரவாக இருந்தார். அதேபோல் பாண்டியர்களுடனும் ஹோய்சாளர்கள் பெண் உறவு கொண்டிருந்தனர். ஆதலால் சோழர்கள் மற்றும் பாண்டியர்கள் இருவருக்குமே ஹோய்சாள மன்னர்கள் உதவவேண்டி இருந்தது.

ஹோய்சாள மன்னன் வீர நரசிம்மனின் மறைவுக்குப் பின்னர் அவரது மகன் வீர சோமேச்வரன் என்பவன் ஹோய்சாள மன்னனாகப் பதவியேற்றான். மூன்றாம் ராஜேந்திர சோழனிடம் போரில் தோல்வியடைந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் ஹோய்சாள மன்னன் வீர சொமேச்வரனிடம் உதவி கோரினான். போரில் வென்று சோழர்கள் திரும்பும்போதே ஹோய்சாள படைகள் பாண்டிய நாட்டை நோக்கி நகர்ந்தது. சோழர்கள் ஆக்ரமித்த பாண்டிய நாட்டின் இடங்களைக் கைப்பற்றி பாண்டியர்களுக்கு கொடுத்தனர். இவ்வாறு ஹோய்சாளர்கள் சோழர்கள் வசம் இருந்த புதுகை, மதுரை வரையிலான இடங்களை பாண்டியர்களுக்கு மீட்டுக் கொடுத்தனர்.

தெலுங்கு சோழர்கள்

தெலுங்கு சோழர்கள் மூன்றாம் ராஜ ராஜ சோழனின் ஆட்சி காலத்திலேயே சோழர்களுடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்தனர் தெலுகு சோழர்கள். தெலுங்கு சோழர்கள் இரண்டாம் ராஜாதி ராஜ சோழனின் பரம்பரையாக இருக்கலாம் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஏனெனில் மூன்றாம் குலோத்துங்க சோழன் சோழ நாட்டின் ஆட்சிப் பொறுப்பினை ஏற்ற பின்பு இரண்டாம் ராஜாதி ராஜன் தெலுங்கு தேசம் நோக்கி நகர்ந்தான் என்று சரித்திரக் குறிப்புகள் இருக்கின்றன.

தெலுங்கு சோழ மன்னன் கோபாலன் மூன்றாம் ராஜேந்திர சோழனுடன் நெருகிய நட்பு கொண்டிருந்தான் என்று தெரிகிறது. மூன்றாம் ராஜேந்திர சோழனின் பாண்டிய படை எடுப்புக்கு உதவி செய்தும், பாண்டிய போரில் பங்கு கொண்டும் பெரும் உதவி செய்தான். இந்த உதவியின் பொருட்டு மூன்றாம் ராஜேந்திர சோழன் காஞ்சி நகரினை ஆளும் பணியை தெலுங்கு சோழ மன்னன் கோபாலனிடம் ஒப்படைத்தான். ஆதலால் தெலுங்கு சோழர்கள் வடக்கே நெல்லூர் முதற் கொண்டு தெற்கே செங்கர்பட்டு வரை ஆட்சி புரிந்தனர்.

ஹோய்சாளர்கள் சோழர்கள் நட்பு

சடையவர்ம குலசேகர பாண்டியனுக்கு பின்பு, இரண்டாம் மாறவர்ம சுந்தர பாண்டியன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் படவியேற்றான். இவனும் சோழர்களுக்கு கப்பம் கடும் சிற்றரசனாக விளங்கினான். இவனுக்குப் பிறகு சடையவர்மன் சுந்தர பாண்டியன் என்பவன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான்.

பாண்டிய மன்னர்களின் பரம்பரையில் சடையவர்மன் சுந்தர பாண்டியன் மிகவும் வலிமை வாய்ந்தவனாகவும், பெரும் ஆற்றல் மிக்கவனாகவும் விளங்கினான். பாண்டியர்களின் எழுச்சி கண்ட ஹோய்சாள மன்னன், சடையவர்மன் சுந்தர பாண்டியனை அடக்குவதற்காக சோழர்களிடம் நட்புக்கரம் நீட்டினான். ஹொய்சாள மன்னனின் நட்பை ஏற்றுக்கொண்ட மூன்றாம் ராஜேந்திர சோழன் வீர சொமேஸ்வரனின் மகன் வீர ராமநாதன் என்பவனை சோழ நாட்டில் கண்ணனூர் என்ற இடத்தின் மன்னனாக்கி அங்கிருந்தபடி ஆட்சி புரியும்படி அமர்த்தினான்.

சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது போர் தொடுத்தால் கண்ணனூரைக் கடந்தே வர நேரிடும். சடையவர்மன் சுந்தர பாண்டியனை சோழநாட்டில் நுழையும் முன்பே அவனை தடுத்து நிறுத்திட எண்ணிய மூன்றாம் ராஜேந்திர சோழன் கண்ணணுரின் மன்னனாக ஹொய்சாள வீர ராமநாதனை மன்னனாக்கினான்.

இரண்டாம் பாண்டியப் போர்

மூன்றாம் ராஜேந்திர சோழனின் 37ம் ஆட்சி ஆண்டில் பெரும் படையுடன் சடையவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது போர் தொடுத்தான். பெரும் படை, ராஜ தந்திரம், பெரும் ஆற்றல், வீரம் ஆகிவற்றை கொண்டிருந்த சடையவர்மன் சுந்தர பாண்டியனினுடன் நடை பெற்ற இந்தப் போரில் மூன்றாம் ராஜேந்திர சோழன் தோல்வியடைந்தான். இதைத் தொடர்ந்து மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க ஒப்புக்கொண்டு கப்பம் கட்ட சம்மதித்தான்.

தெலுங்கு சோழர்கள் மற்றும் ஹோய்சாளர்களின் உதவி பெற்று மீண்டும் மூன்றாம் ராஜேந்திர சோழன் போருக்கு வருவான் என்று எண்ணிய சடையவர்மன் சுந்தர பாண்டியன், சோழர்களுக்கு உதவும் ஹோய்சாளர்களையும், தெலுங்கு சோழர்களையும் வென்றான். ஹோய்சாளர்களின் மன்னன் வீர சொமேஸ்வரனைக் கொன்று, அவன் மகன் வீர ராமநாதனை நாட்டை விட்டு விரட்டினான். தெலுங்கு சோழர் மன்னன் கோபாலனைக் கொன்றான். இந்தப் போர்களின் வாயிலாக தென் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய பாண்டியர்களின் சாம்ராஜியத்தை சடையவர்மன் சுந்தர பாண்டியன் நிர்மாணித்தான்.

About the author