முற்காலப் பாண்டியர்கள் – Early Pandiyan kings

வடிம்பலம்ப நின்ற பாண்டியன்

சங்க காலத்திற்கு முன்னர் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர் பெயர் வடிம்பலம்ப நின்ற பாண்டியன். நெடியோன் என்ற பெயர் கொண்டும் இவர் அறியப்பட்டார். பல ஆண்டுகள் பாண்டிய நாட்டின் மன்னராக இருந்து ஆண்டமையால் இவர் இந்தப்  பெயர் பெற்றதாகக் கருதுகின்றனர். தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய நச்சினார்க்கினியர் இவரைப்பற்றி அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார். மன்னர் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் கடற்கோளால் மூழ்கிய  குமரி நாட்டில் கடல் தெய்வத்திற்கு விழா எடுத்ததாக அறியப்படுகின்றது.

நிலந்தரு திருவிற் பாண்டியன்

மன்னர்  நிலந்தரு திருவிற் பாண்டியன் மற்றும் ஒரு சங்ககாலத்து பாண்டிய மன்னராவார். கி. மு. நாலாம் நூற்றாண்டு அளவிலோ அதற்கு முன்னரோ இவர் பாண்டிய நாட்டை ஆண்டதாக அறியப்படுகிறது. இவரது ஆட்சி காலத்தில் இவரது அவையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று நம்பப்படுகிறது.மேலும் மன்னர் நிலந்தரு திருவிற் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு உதவியவர் என்று தெரிகிறது . இவரது படைத்தலைவன் பெயர் நாகன். இவர்  பசும்பூண் பாண்டியன் என்று பாராட்டப்பட்டார்.

பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி

மன்னர் முதுகுடுமிப் பெருவழுதி வடிம்பலம்ப நின்ற பாண்டியன் வழியில் வந்தவராவார். இவரது இயற்பெயர்
குடுமி என்பதாகும். இவர் கடைச்சங்க காலத்திற்கு முன்னர் பாண்டிய நாட்டை ஆண்டதாகக் கருதப்படுகிறது. பல யாகங்களையும் வேள்விகளையும் நடத்திய காரணத்தினால் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பட்டத்தினைப் பெற்றார். நெடியோன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தார். சின்னமனூர் செப்பேட்டில், பாண்டிய மன்னன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான். அதனால் ஏற்பட்ட பிரளயத்தில் உலகம் அழிந்தது. ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான் என இந்த மன்னரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ள குறிப்பு

“கொல்யானை பலஓட்டிக்
கூடாமன்னர் குழாந்தவிர்த்த
பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி

மதுரைக் காஞ்சியைப் பாடிய மாங்குடி மருதனார் இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்

“பல்சாலை முதுகுடுமித்
தொல்ஆணை நல்லாசிரியர்
புணர்கூட்டுண்ட புகழ்சால்
சிறப்பின்

புறநானூற்றில் இவரைப்பற்றிய குறிப்புக்கள் பல காணப்படுகின்றன. மன்னர் முதுகுடுமிப் பெருவழுதி பலரையும் போரில் தோற்கடித்தவர். தமிழ் புலவர்களுக்கு அள்ளிக் கொடுத்தவர், ஈகைக்  குணம் மிக்கவர், சிறந்த சிவபக்தர்  என பல குறிப்புக்கள்  புறநானூற்றில் இடம் பெற்றுள்ளது.

சங்க காலத்துப் புலவர்கள் காரிக்கிழார், பெண்பாற் புலவர் நெட்டிமையார், நெடும்பல்லியத்தனார் முதலியோர் முதுகுடுமிப் பெருவழுதி பாடியுள்ளார்கள்.

காரிக்கிழார் பெருவழுதியைப் பற்றி,

“தண்டா ஈகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய பெரும! நீ நிலமிசையானே!”
—(புறம்-6)

நெட்டிமையார் இவனைப் பற்றி,

“எம்கோ வாழிய குடுமி-தம்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்!”
—(புறம்-9)

“ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என”

“அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே”

பெரும்பெயர் வழுதி

பாண்டிய மன்னர் பெரும்பெயர் வழுதி சங்ககாலப் பாண்டிய மன்னர்களில் ஒருவர். புறநானுற்றில் இவரைப்பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளது. கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி என்று புறநானுற்றில் இவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பட்டத்து யானையின் கழுத்தில் மணி கோத்துக் கட்டப்பட்டிருந்த கயிற்றின் மேல் இருந்துகொண்டு மருந்தில் கூற்றம் எனும் ஊரின் கோட்டை கதவுகளை கதவுகளை யானையால் உடைத்து முன்னேறி வென்றார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதியே!
நிலம் பெயர்ந்தாலும்,நீ சொல் பெயராய்!
விலங்கு அகன்ற வியல்மார்பனே!
உன்னை விரும்பி இரவலர் வருவர்!
உன்ன மரத்தின் சகுனம் பொய்க்கநீ ஈவாய்!
தவிரா ஈகை,கவுரியர் மருமகனே!
ஏமமுரசும் இழுமென முழங்க வெண்குடை மண்ணகம் நிழற்ற வாழ்பவனே!
-புறநானூறு: 3

பொன் ஓடைப் புகர் அணி நுதல்
துன் அருந்திறல் கமழ் கடாஅத்து
எயிறு படையாக எயில் கதவு இடாஅக்
கயிறு பிணி கொண்ட கவிழ் மணி மருங்கின்
பெருங்கை யானை இரும்பிடர்த் தலை இருந்து
மருந்தில் கூற்றத்து அருந்தொழில் சாயாக்
கருங்கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதி
(புறநானூறு 3)

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *