முடத்திருமாறன்
பாண்டிய மன்னன் முடத்திருமாறன் கடைச்சங்க கால பாண்டிய மன்னர்களில் ஒருவன். இரண்டாம் கடற்கோளுக்கு முன்னர் கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவன். இரண்டாம் கடற்கோளுக்குப் பின்னர் தமிழகத்தின் வடக்கே மணலூர் என்னும் இடத்தில் தங்கி பின்னர் மதுரையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டான். சங்க இலக்கிய நூலான நற்றிணையில் இவனைப்பற்றிய இரண்டு பாடல்கள் உள்ளன.
மதிவாணன்
பாண்டிய மன்னன் மதிவாணன் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மதுரையில் தமிழ் சங்கத்தினை விரிவுபடுத்தினான். முத்தமிழின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்தான். முத்தமிழிலும் வல்லமை கொண்டவனாகத் திகழ்ந்தான். தமிழ் புலவர்களை ஆதரித்தான். மதிவாணர் நாடகத் தமிழ் என்ற நூலை நாடகத் தமிழிற்காக இயற்றினான்.
பசும்பூண் பாண்டியன்
கடைச்சங்க காலப் பாண்டிய மன்னர்களில் ஒருவன் பசும்பூண் பாண்டியன். பூண் என்பது அரசர்கள் பாதுகாப்பிற்காக மார்பில் அணியும் கவசம். வாகைப்பறந்தலை என்னுமிடத்தில் நடந்த போரில் கொங்கர் படை பசும்பூண் பாண்டியனைப் போரில் கொன்றதாகத் தெரிகிறது. தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனும் பசும்பூண் பாண்டியனும் ஒருவனே என்று வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பொற்கைப் பாண்டியன்
நீதி தவறாது நாட்டை ஆண்ட பாண்டிய மன்னர்களுள் முதன்மையானவனாகக் கருதப்படுகின்றான். பொற்கைப் பாண்டியன் என்ற பெயர் காரணப் பெயர். பழமொழி நானூறு எனும் நூலில் உள்ள ஒரு பாடல் பொற்கைப் பாண்டியனின் வரலாற்றைக் குறிப்பிடுகிறது.
‘எனக்குத் தகவன்றால்’ என்பதே நோக்கித்
தனக்குக் கரியாவான் தானாய், தவற்றை
நினைத்துத்தன் கைகுறைத்தான் தென்னவனும் காணார்
எனச்செய்யார் மாணா வினை.
பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரையில் இரவு நேரங்களில் அரசன் பொற்கைப் பாண்டியன் நகர் வலம் வருதல் உண்டு. அப்படி ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்துகொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் கீரந்தை என்ற வேதியன் அவன் மனைவியிடம், வணிக நிமித்தமாக தான் வெளியூர் செல்லவேண்டி இருப்பதை கூறிக்கொண்டிருந்தான். அதற்கு அவன் மனைவி திருடர்கள் பற்றிய அச்சம் தெரிவிக்க அதற்கு வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே என்று கூறிச் சென்றான்.
இதைக் கேட்ட மன்னன் தனது நாட்டு மக்கள் தன்னிடம் வைத்துள்ள நம்பிக்கையை நினைந்து மகிழ்ந்தான். பாண்டிய மன்னனும் தினமும் அந்தத் தெருவினில் காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. சந்தேகம் கொண்ட மன்னன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது தேவையற்ற சந்தேகம் கொள்வான் என எண்ணிய பாண்டிய மன்னன் அந்தத் தெருவில் இருந்த அனைத்து வீட்டுக் கதவுகளினையும் தட்டினான்.
மறுநாள் பாண்டிய மன்னனின் அரசவையில் அத்தெரு மக்கள் கூடி அவர்கள் தெருவில் வந்து கடவுகளைத் தட்டிய அந்தத் திருடன் கையை வெட்டவேண்டும் என முறையிட்டனர். மக்களின் வேண்டுகோளை ஏற்ற பாண்டிய மன்னன், வாளைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். உண்மையை உணர்ந்த மக்கள் வியந்து நின்றனர். பாண்டிய மன்னனும் பொன்னால் ஆன கை ஒன்றினை வைத்துக்கொண்டான். அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன்.
சிலப்பதிகாரத்தில் வரும் பாடல்
உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி,
புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள்
“அரைச வேலி அல்லது யாவதும்
புரை தீர் வேலி இல்” என மொழிந்து,
மன்றத்து இருத்திச் சென்றீர்: அவ்வழி
இன்று அவ் வேலி காவாதோ?, என,
செவிச் சூட்டு ஆணியின், புகை அழல் பொத்தி,
நெஞ்சம் சுடுதலின், அஞ்சி, நடுக்குற்று,
வச்சிரத் தடக் கை அமரர் கோமான்
உச்சிப் பொன் முடி ஒளி வளை உடைத்த கை
குறைத்த செங்கோல், குறையாக் கொற்றத்து,
இறைக் குடிப் பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை
குணநாற்பது என்னும் நூலிலுள்ள பாடல்,
நாடுவளங் கொண்டு புகழ்நடுதல் வேண்டித்தன்
ஆடுமழைத் தடக்கை அறுத்துமுறை செய்த
பொற்கை நறுந்தார்ப் புனைதேர் பாண்டியன்
கொற்கைஅம் பெருந்துறை குனிதிரை தொகுத்த
விளங்குமுத்து உறைக்கும் வெண்பல்
பன்மாண் சாயல் பரதவர் மகட்கே
இளம் பெருவழுதி
இளம் பெருவழுதி மற்றும் ஒரு சங்க காலத்து பாண்டிய மன்னன். “கடலுள் மாய்ந்த” என்னும் அடைமொழியை பாண்டிய மன்னன் இளம் பெருவழுதி கொண்டிருப்பதால் கடல் போரிலோ அல்லது கடற்கோளிலோ இவன் இறந்திருக்கவேண்டும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். ஈகை இரக்கம் போன்ற நற்குணங்கள் கொண்டவன், திருமாலிடம் மிகுந்த பக்தி கொண்டிருந்தான் என்றும் தெரிகிறது. மேலும் இவன் புலவனாகவும் திகழ்ந்தான். புறநானூற்றிலும், பரிபாடல் நூலிலும் இவன் பெயரில் பாடல்கள் உள்ளன.
அறிவுடை நம்பி
கடைச்சங்க காலப் பாண்டிய மன்னனான இவன் சிறந்த கல்வியறிவு கொண்டவனாகவும், கொடை வள்ளலாகவும், பொருட்செல்வம் உடையவனாகவும், புலமைமிக்கவனாகவும் விளங்கினான். பிசிராந்தையார் மற்றும் கோப்பெருஞ்சோழன் இவன் காலத்தில் வாழ்ந்தவர்கள். இந்த மன்னனைப் பற்றி புறநானுறு, அகநானுறு, குறுந்தொகை மற்றும் நற்றிணை ஆகிய நூல்களில் பாடல்களில் பாடப்பட்டுள்ள.
பூதப்பாண்டியன்
பூதப்பாண்டியன் என்பவன் சங்ககாலத்தில் பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய அரசர்களுள் ஒருவன். இவன் குறுநில மன்னர்களுடன் நட்பாக இருந்தான் என்று நம்பப்படுகிறது. ஒல்லையூர் என்னும் ஊரை போரில் வென்றதாலோ அல்லது வேறு காரணத்தினாலோ “ஒல்லையூர் தந்த” என்னும் அடைமொழி இவன் பெற்றான்.
இவனுடைய மனைவியின் பெயர் கோப்பெருங்கோப்பெண்டு. இவன் இறந்தவுடன் அரசியாரும் உயிர்நீத்தாள். அரசியார் கோப்பெருங்கோப்பெண்டு பற்றி இரண்டு பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இப்பாடல்களை சங்கப் புலவர்கள் அரிசில் கிழார் அவர்களும், பெருங்குன்றூர் கிழார் அவர்களும் பாடியுள்ளனர்.
வெற்றிவேற் செழியன்
பாண்டிய மன்னன் வெற்றிவேற் செழியன் நன்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். கொற்கையில் இளவரசனாகவிருந்த இவன் பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டின் மன்னனாக மதுரையில் முடிசூடிக் கொண்டான் . சேர மன்னன் செங்குட்டுவன் வட நாட்டுப் படையெடுப்பில் இவன் பங்கேற்றான் என்பதை சிலப்பதிகாரத்திலுள்ள நீர்ப்படைக்காதை (127-138) பாடல்கள் கூறுகின்றன.
இவன் ஆட்சி காலத்தில் பாண்டி நாட்டில் மழை வளம் இல்லாததால் குடிமக்கள் மிகவும் துன்புற்றனர். வைகை ஆற்றிம் வறண்டது . கண்ணகியின் சாபமே இதற்குக் காரணம் என நினைத்த மன்னன் கண்ணகிக்கு விழா எடுத்தான். அந்த விழாவிற்குப் பின்னர் மழை பெய்து பாண்டிய நாடு செழித்தது. குடிமக்களும் நலமுடன் வாழ்ந்தனர்.
கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
பாண்டிய மன்னன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி எல்லா அரசர்களுடனும் போர் புரிந்தான். கடலின் சீற்றம் போலவும், காட்டுத்தீ போலவும், சூறாவளிக் காற்று போலவும் போரி புரிந்து கொண்டு வந்த செல்வத்தைக் எடுத்துக்கொள் எனக் கூவி அழைத்துக் கொடுத்தான். பொதியில் எனப்படும் பொதியமலை நாட்டை வென்றன்.இவன் பாண்டிய மன்னன் குறுவழுதியின் மகன் என்ற பொதுவான கருத்து நிலவுகின்றது. இவன் நடத்திய வடநாட்டுப் போரினை பற்றி புறநானூற்றுப் பாடல்கள் இரண்டில் குறிப்புகள் உள்ளன.
“சினப்போர் வழுதியே! ‘தண்தமிழ் பொது’ என்பதை ஏற்க மறுத்த வடவர்களை போரில் எதிர்த்து பிறமன்னர் நடுங்க வைத்தவன் நீ” என ஜயூர் முடவனார் இவனை புறம் 51 இல் இவ்வாறு பாடியுள்ளார்.
“வடபுல மன்னர் வாட அடல் குறித்து-இன்னா வெம்போர் இயல் தேர்வழுதியே! நல்லகம் நிறைய கான வாரணம் ஈயும் புகழுடையோனே!” என மருதன் இள நாகனார் புறம்-52 இல் பாடியுள்ளார்.
முதலாம் நெடுஞ்செழியன்
இவன் சிலப்பதிகாரதில் கூறப்படும் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன் முதலாம் நெடுஞ்செழியன். பட்டத்து அரசியின் பெயர் கோப்பெருந்தேவி. வடநாட்டு மன்னர்களைப் போரில் வென்றவன். பெரும் படை பலம் மிக்கவன். சேர,சோழர்கள் பலரையும் வென்றவன்.சேரன் செங்குட்டுவன் காலத்தில் வாழ்ந்த இவன் செங்குட்டுவனுக்கு முன்னரே வடநாட்டு மன்னர்களை போரில் வெற்றி கொண்டவன். கொங்கு மன்னர்கள் வென்றவன். சரியாக ஆராய்ந்து அறியாமல் கோவலனைச் செய்யாத குற்றத்திற்காக கொலை செய்ய ஆணையிடான். கோவலனின் மனைவி கண்ணகியின் வாயிலாக உண்மையை அறிந்த நெடுஞ்செழியன், நீதி தவறியதற்காக தன்னுயிர் நீத்தான் . இவன் மனைவி கோப்பெருந்தேவியும் தன் கணவன் இறந்த மறுகணமே உயிர் நீத்தாள். எனினும் கோபம் தணியாத கண்ணகி, தன் கற்பின் வலிமையால் மதுரை மாநகரையே எரித்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.
உக்கிரப் பெருவழுதி
பாண்டிய மன்னன் உக்கிரப் பெருவழுதி, பாண்டிய மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனின் மகன் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். போரில் வேகத்தோடும், சினத்தோடும் போரிடும் ஆற்றல் உள்ளவன். இதனால் ‘உக்கிர’ என்னும் அடைமொழி இவனுக்கு வழங்கப்பட்டது. வேங்கைமார்பன் என்னும் அண்டை நாட்டு மன்னனை கானப் பேரெயிலை வெற்றி கொண்டான் என்பதால் கானப்பேரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி என்ற பட்டப்பெயர் பெற்றான்.உக்கிரப் பெருவழுதியும் சோழ மன்னன் இராசசூயம் வேட்டப் பெருநற்கிள்ளியும, சேர மன்னன் மாரி வெண்கோவும் ஒன்றாக கூடியிருந்தனர். சோழ மன்னன் நடத்திய வேள்விக்கு மற்ற இரு அரசர்களும் வந்திருந்தனர். அப்பொழுது மூவரசர்களும் ஒருங்கே அமர்ந்திருந்த அந்த காட்சியைக் கண்ட ஔவயார் அழகான பாட்டுப் ஒன்றை பாடினார். அந்தப் பாடல் புறநானூற்றில் உள்ளது. இவன் ஆட்சி காலத்தில் தான் திருக்குறள் அரங்கேற்றப் பட்டது என்று நம்பப்படுகிறது. இவன் இயற்றிய பாடல்கள் சங்க இலக்கியங்களாகிய அகநானூற்றிலும் நற்றிணையிலும் உள்ளன. இறையனார் களவியல் உரையில் இவன் கடைச்சங்க காலக் கடைசி பாண்டிய மன்னன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.
மாறன் வழுதி
பன்னாடு தந்த மாறன் வழுதி என்ற பட்டத்தினைப் பெற்ற பாண்டிய மன்னன் மாறன் வழுதி நற்றிணை நூலினை தொகுத்தவன். பாண்டிய மன்னன் மாறன் வழுதி அரசனாகவும், புலவராகவும் விளங்கியவன். இவன் எழுதிய பாடல்கள் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளன.
நல்வழுதி
இவன் பரிபாடலில் 12ம் பாடலைப் பாடியவன்.
“தொடித்தோள் செறிப்ப,தோள்வளை இயங்க-நொடி சேராத் திருக்கோவை, காழ்கொள, முத்துத்தொடை கழண்டு விழ வண்டல் மண்ட இலையும், மயிரும் ஈர்த்து முலையும் மார்பும் முயங்கணி மயங்க நிறை உடத்தென உடைத்த வையை!”
இவன் பாடலில் வைகை ஆற்றில் ஏற்பட்ட புதுவெள்ளம் பற்றிப் பாடி அங்கு நீராடும் பொழுது ஏற்பட்ட நிகழ்வுகளைக் குறிப்பிட்டுள்ளான். இவன் பாண்டிய மன்னன் என்பதிற்கான சங்கநூல் பாடல்கள் ஏதுமில்லை. ஆனால் இவன் பெயரில் வரும் வழுதி என்னும் பாண்டியக் குடிப்பெயரை வைத்து இவன் ஒரு சிறு பகுதிக்கு மன்னனாக இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்
குறுவழுதி
இவன் பெரும் பெயர் வழுதியின் மகனாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவன் பெயர் குறுவழுதியார், அண்டர் மகன் குறுவழுதியார் மற்றும் அண்டர் மகன் குறுவழுதி என்று பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப் பெயர்களில் ‘ஆர்’ விகுதி இல்லாத பெயர்கள் இவனை பாண்டிய மன்னன் என நம்பத் தூண்டுகின்றன. வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று. இவர் பெயரில் வரும் அண்டர் என்பது இவரை ஆயர் குல பாண்டிய மன்னனாகக் குறிக்கிறது. இவன் எழுதிய பாடல்கள் புறநானூறு, அகநானூறு மற்றும் குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளன.
இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
சங்க காலத்தில் பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த மற்றும் ஒரு மன்னன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இவன் இலவந்திகைப் பள்ளியில் இறந்ததால் இலவந்திகைத் துஞ்சிய நன்மாறன் என்று வழங்கப்பட்டான். இவனைப் பாராட்டி மதுரை மருதனிளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப்பூம்பட்டினத்து காரிக்கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன்பேரி சாத்தனார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர்.
தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னர்களுள் மிகவும் புகழ் பெற்றவன் சங்ககாலப் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன். அவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே பாண்டிய மன்னனாக முடிசூட்டப்பட்டான். தலையாலங்கானத்துப் போரில் பெரும் வெற்றி பெற்றடைத் தொடர்ந்து “தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்” என்று புகழப்பட்டான். தலையாலங்கானத்துப் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் காலில் அணிந்திருந்தான். இதை வைத்து இவன் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் என்பதை அறிந்துகொள்ளலாம்.
இவன் முதலாம் நெடுஞ்செழியனின் தம்பியான வெற்றிவேற் செழியனின் மகன் என்றும், மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் இவன் முதலாம் நெடுஞ்செழியனுக்கும் முன்னர் பாண்டிய நாட்டை ஆண்டவன் என்றும் கருதுகின்றனர்.
நெடுஞ்செழியன் சிறுவன், வயது முதிராதவன், நாட்டை ஆளும் ஆற்றல் இல்லாதவன் எனக்கருதி சோழ மன்னன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, சேர மன்னன் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, கொங்கு நாட்டை ஆண்ட திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேள், பொருநன் ஆகிய குறுநில மன்னர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். தலையாலங்கானம் என்னுமிடத்தில் நடந்த இந்தப் புகழ் பெற்ற போரில் நெடுஞ்செழியன் பகைவர்கள் அனைவரையும் போரில் தோற்கடித்தான். போரின் முடிவில் பண்டைய தமிழகம் முழுவதும் இவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. நெடுஞ்செழியன் புலவனாகவும் விளங்கினான். இவன் எழுதிய பாடல் புறநானூற்றில் 72வது பாடலாக உள்ளது.
வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி
பாண்டிய மன்னன் பெருவழுதியம் சோழ மன்னன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்பவனும் நெருங்கிய நண்பர்கள். புகார் அரண்மனையில் நண்பர்கள் இருவரும் கூடியிருந்தபோது, புலவர் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் இன்று போல் என்றும் ஆட்சியிலும் கூடியிருக்க வேண்டும் எனப் பாடியுள்ளார்.
“தமிழ் கெழுகூடல் தண்கோல் வேந்தே!
இருபெருந்தெய்வம் போல் இருவிரும் உள்ளீர்!
இன்றே போல் நும்புணர்ச்சி”
—(புறம் – 58)
நம்பி நெடுஞ்செழியன்
பாண்டிய நாட்டை ஆண்ட மற்றும் ஒரு மன்னன் நம்பி நெடுஞ்செழியன். மாவீரனான நம்பி நெடுஞ்செழியன் மற்றொரு பாண்டிய மன்னனான உக்கிரப் பெருவழுதியின் தூதுவனாகக் கானப்பேரெயில் அரசனிடம் சென்றான். தூது பயன் அளிக்காததால் போர் மூண்டது. போரில் உக்கிரப் பெருவழுதியிற்காக போரிட்டு மாண்டான். பேரெயில் முறுவலார் என்னும் புலவர் இவனது புகழைப் பாடியுள்ளார்.
தொடிஉடைய தோள் மணந்தனன்
கடி காலில் பூச் சூடினன்
தண் கமழும் சாந்து நீவினன்
செற்றோரை வழி தடித்தனன்
நட்டோரை உயர்பு கூறினன்
வலியர் என வழி மொழிபவன்
மெலியர் என மீக்கூறலன்
பிறரைத் தான் இரப்பு அறியலன்
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்
வேந்துடை அவையத்து ஒங்குபுகழ் தோற்றினன்
வருபடை எதிர் தாங்கினன்
பெயர் படை புறங்கண்டனன்
பாண் உவப்ப பசி தீர்த்தனன்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
இடுக ஒன்றோ?சுடுக ஒன்றோ
படுவழிப் படுக இப்புகழ் வெய்யோன் தலையே!
—(புறம் – 239)
குலோத்துங்கன் ஒரு தெலுங்கன்…பிற்கால சோழர்கள் தெலுங்கர்களே…தமிழரல்ல