கடுங்ககோ அல்லது கடுங்கோன் எனும் பாண்டிய மன்னன் இடைக்கால பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்ற பொழுது தமிழகம் முழுவதும் களப்பிரர் ஆட்சியின் கீழ் இருந்தது. ஏறக்குறைய கி.பி. 250 முதல் கி.பி. 600 வரையில் தமிழகம் முழுவதையும் களப்பிரர் ஆண்டதாகத் தெரிகிறது. தமிழகத்தின் மூவேந்தர்கள் ஆகிய சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் களப்பிரர் ஆட்சிக்கு உட்பட்ட சிற்றரசர்களாக கப்பம் செலுத்தி வந்தனர்.
களப்பிரர் போர்
பாண்டிய நாட்டின் சிற்றரசனாகப் பதவியேற்ற பாண்டிய மன்னன் கடுங்கோன் களப்பிரர் ஆட்சியிலிருந்து பாண்டிய நாட்டை மீட்டெடுத்தான். கி.பி. 575 ஆம் ஆண்டில் மதுரை வவ்விய கருநடர் வேந்தனை விரட்டியடித்து மதுரையைத் தலைநகராக்கி முடிசூட்டிக் கொண்டான். சற்றேறக்குறைய 400 ஆண்டுகளாய் தமிழகத்தை ஆண்டுவந்த களப்பிரர்களின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதைத் தொடர்ந்து கடுங்கோன் பாண்டிய நாடு முழுவதையும் தன் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தான். பாண்டிய மன்னன் கடுங்கோன் ஆட்சி கி.பி.575 முதல் 600 வரை நீடித்ததாகக் கருதப்படுகின்றது. பாண்டிய மன்னன் கடுங்கோன் பற்றிய செய்திகள் பலவற்றையும் வேள்விக்குடி செப்பேடுகள் கூறுகின்றன.

கடுங்கோன் பற்றிய பாடல்
“களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டதனை
இறக்கியபின் படுகடன் முளைத்த பருதிபோல்
பாண்டியாதிராசன் வெளிப்பட்டு
விடுகதிர் அவிரொளி விலக வீற்றிருந்து
வேலை சூழ்ந்த வியலிடத்துக்
கோவும் குறும்பும் பாவுடன் முருக்கிச்
செங்கோல் ஓச்சி வெண்குடை நீழல்
தங்கொளி நிறைந்த தரணிமங்கையைப்
பிறர்பால் உரிமை திறவிதின்நீக்கித்
தன்பால் உரிமை நன்கனம் அமைத்த
மானம்போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநகரழித்த
கடுங்கோன் என்னும் கதிர்வேல் தென்னன்”
இந்த பாடல் வரிகள், பாண்டிய மன்னன் கடுங்கோன் களப்பிரர்களை வென்றது பற்றி சிறப்பித்து கூறுகிறது மேலும் பாண்டிய மன்னன் கடுங்கோனை , கதிரவன் போன்றவன் என்றும் கதிர்வேல் தென்னன் என்றும் சிறப்புப் பெயர் கொண்டு குறிப்பிடுகிறது.
Comments