பாண்டிய மன்னன் கடுங்கோனுக்குப் பிறகு அவரது மகன் மாறவர்மன் அவனி சூளாமணி பாண்டிய நாட்டின் மன்னராகப் பதவியேற்றார். வேள்விக்குடிச் செப்பேடுகளின் வாயிலாக பாண்டியன் கடுங்கோனின் மகன் மாறவர்மன் அவனி சூளாமணி என்பது தெளிவாகிறது. மாறவர்மன் அவனி சூளாமணி கி.பி. 600ம் ஆண்டு முதல் கி.பி.625ம் ஆண்டு வரையில் பாண்டிய நாட்டின் மன்னராக ஆட்சி செய்தார் என்பது தெரிகிறது. இவரின் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் வட பகுதியில் பல்லவ மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு கி.பி. 575ம் ஆண்டு முதல் 615ம் ஆண்டு வரையில் பல்லவ நாட்டை ஆட்சி புரிந்தார்.
பாண்டியப் போர்
பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணுவிற்கும் பாண்டிய மன்னர் மாறவர்மன் அவனி சூளாமணிக்கும் போர் நடைபெற்றது. இந்தப் போரில் பல்லவ மன்னர் சிம்ம விஷ்ணு வெற்றி பெற்றார். இந்தப் போர் பற்றிய தகவல்கள் இரண்டாம் நந்திவர்மன் காலத்துக் காசாக்குடிப் பட்டயத்தில் கூறப்பட்டுள்ளது. இவர் காலம் முதல் பாண்டிய மன்னர்கள் மாறவர்மன், சடையவர்மன் என்னும் பட்டங்களைப் புனைந்து கொண்டார்கள்.
வேள்விக்குடிச் செப்பேடு
வேள்விக்குடிச் செப்பேடு பாண்டிய மன்னன் மாறவர்மன் அவனி சூளாமணியை பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறது. குறுநில மன்னர்களை அடக்கியவன், குறும்புகளை அழித்தவன், மானத்தைக் காத்தவன் மரபிலே வந்தவன், பகை மன்னர்களை ஒடுக்கியவன், வீரமும், ஈரமும் புகழும் உடையவன்.
Comments