பாண்டிய மன்னனான செழியன் சேந்தன் கி.பி. 625ம் ஆண்டு முதல் கி.பி. 640ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை திறம்பட ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் மாறவர்மன் அவனி சூளாமணியின் மகனாவான். சடையவர்மன் என்ற சிறப்பு படத்தை பெற்றிருந்தான். இந்த படத்தை பெற்ற முதல் பாண்டிய மன்னனும் இவனே ஆவான். சடையன் என்பது சிவ பெருமானின் மற்றொரு பெயராகும். சேர மன்னனை போரில் வென்றதால் வானவன் என்ற பட்டப்பெயரும் இவன் பெற்றான்.
யுவான் சுவாங் பயணக் குறிப்பு
பாண்டிய மன்னனான செழியன் சேந்தனின் ஆட்சி காலத்தில் கொங்கு நாடும் பாண்டிய நாட்டின் கீழ் இருந்தது. இவன் பெயரால் அமையப்பெற்ற ஊர்தான் சேந்தன் மங்கலம் ஆகும். இவன் ஆட்சி காலத்தில் தமிழகத்திற்கு வந்த சீனநாட்டு யாத்ரீகரான யுவான் சுவாங் காஞ்சி சென்று, பின் பாண்டிய நாட்டிற்குச் சென்றிருந்தார். மேலும் பாண்டிய மன்னன் செழியன் சேந்தன் இறந்து விட்டான். அதனால் பாண்டி நாடு பஞ்சத்தால் வாடுகிறது என்று தனது பயணக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மலையடிக்குறிச்சி கல்வெட்டு
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மலையடிக்குறிச்சி குகைக் கோயிலில் “மாறன் மகன் சேந்தன்” என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேள்விக்குடிச் செப்பேடு
பாண்டிய மன்னனான செழியன் சேந்தனைப் பற்றி வேள்விக்குடிச் செப்பேடு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது
“சிலைத்தடக்கைக் கொலைக் களிற்றுச் செழியன்
மண் மகளை மறுக்கடித்த வேந்தர் வேந்தன்
செங்கோல் சேந்தன்”
Comments