பாண்டிய மன்னன் செழியன் சேந்தனின் மறைவிக்குப் பிறகு அவரின் மகன் அரிகேசரி பாண்டிய மன்னனாகப் பதவியேற்றார். பாண்டிய மன்னன் அரிகேசரி கி.பி. 640ம் ஆண்டு முதல் 670ம் ஆண்டு வரையில் சுமார் 30 ஆண்டுகள் பாண்டிய நாட்டை ஆண்டார். மன்னர் அரிகேசரி திருவிளையாடல் புராணத்தில் சுந்தர பாண்டியன், கூன் பாண்டியன், போன்ற பெயர்களினாலும் அறியப்படுகிறார். மேலும் சின்னமனூர்ப் பட்டயங்களில் இவர் பெயர் அரிகேசரி பராங்குசன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை தவிர மாறவர்மன் என்ற பட்டப்பெயரும் இவருக்கு உண்டு.
போர்கள்
பாண்டிய மன்னர் அரிகேசரி பல போர்களில் வெற்றி வாகை சூடியவன். இவன் பல போர்களில் வெற்றி பெற்றவன் என்பதை பறைசாட்டும் வகையில் அரிகேசரி எனும் பட்டப்பெயர் அளிக்கப்பட்டது. சோழ நாட்டின் மீது படை எடுத்துச் சென்று சோழ நாட்டின் தலைநகர் உறையூரை முற்றுகையிட்டு போர் புரிந்தான். சோழ மன்னன் மணிமுடிச் சோழனை போரில் வெற்றி பெற்றான். போரில் பெற்ற வெற்றியின் பரிசாக மணிமுடிச் சோழனின் மகள் மங்கையர்க்கரசியினை திருமணம் புரிந்தான். சோழனின் மகள் மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் பட்டத்து அரசியானாள்.
மன்னர் அரிகேசரி சோழ நாட்டை போரில் வென்றது தொடர்ந்து சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்றார். போரில் சேர மன்னனை மன்னர் அரிகேசரி வென்றார். இதைத் தொடர்ந்து பாழி, செந்நிலம் மற்றும் பல குறுநில மன்னர்களை மன்னர் அரிகேசரி வென்றான். மன்னர் அரிகேசரி கொடும்பாளூரை ஆண்டு வந்த களப்பிரர்களையும், பாண்டிய நாட்டின் தென் பகுதியில் ஆட்சி புரிந்து வந்த குறுநில மன்னரான பரவர் என்ற மன்னனையும் வென்று அடக்கினான். வேள்விக்குடிச் செப்பேடு வாயிலாக பாண்டிய மன்னன் அரிகேசரி திருநெல்வேலியையும் வென்றான் என்று தெரிகிறது. மன்னர் அரிகேசரி பாண்டிய நாட்டை ஆண்ட காலகட்டத்தில் வடநாட்டு மன்னர் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தனர். மன்னர் அரிகேசரி வட நாட்டு மன்னனை நெல்வேலிப் போர்க்களத்தில் தோற்கடித்தார். இதைத் தொடர்ந்து நெல்வேலிவென்ற நெடுமாறன் எனம் பட்டப்பெயர் பெற்றார்.
சைவ சமயத் தொண்டு
ஆரம்ப காலத்தில் சமணத்தினைப் பின்பற்றிய மன்னர் அரிகேசரி பின்னர் சைவ சமயத்தைத் தழுவினார். இவரது மனைவி பாண்டிய பாண்டிய நாட்டின் பட்டத்தரசி மங்கையர்க்கரசி மற்றும் அமைச்சர் குலச்சிறையார் சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள். மேலும் இவர்கள் திருஞான சம்பந்தருடன் நட்புடன் இருந்தனர்.
இம்மூவரும் மன்னர் அரிகேசரியைச் சைவ சமயத்தை தழுவச் செய்தனர். சமண முனிவர் எண்ணாயிரவர்க்கும், திருஞான சம்பந்தர்க்கும் சிவபெருமான் முன்னிலையில் அனல் வாதமும், புனல் வாதமும் நடைபெற்றது. மன்னர் அரிகேசரி ஆட்சிக் காலத்தில் சைவம் சமயம் தழைத்தோங்கி இருந்தது நெல்லையப்பர் கோவில் , உத்திரகோசமங்கை கோவில், அரியநாதர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றிக்கு மன்னர் அரிகேசரி தொண்டு செய்திருக்கிறார். சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட மன்னர் அரிகேசரி, அரசி மங்கையர்க்கரசி, அமைச்சர் குலச்சிறையார் மூவரும் பெரிய புராணத்தில் இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சீனப் பயணி யுவான்சுவாங்
சீனப் பயணியான யுவான்சுவாங் மன்னர் அரிகேசரியின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான். யுவான்சுவாங் குறிப்பில் பாண்டிய நாட்டைப் பற்றி கூறியுள்ளான். பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் அதிக அளவில் இருக்கிறது. அருகிலிருக்கும் தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன. வேறு விளை பொருட்கள் அதிகம் இல்லாத பாண்டிய நாடு அதிக வெப்பம் மிக்கதாய் விளங்குகிறது. பாண்டிய நாட்டு மக்கள் கருத்த மேனியுடன் உடல் உறுதியும் போர் வலிமையையும் மிக்கவர்களாக விளங்குகின்றனர். செல்வ செழிப்புடன் பாண்டிய நாடு கடல் கடந்த வாணிபத்தில் சிறந்து விளங்குகிறது. இவ்வாறு சீனப் பயணி யுவான்சுவாங் அவன் நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளான்.
Comments