பராங்குசன் – Maravarman Rajasimha I

பாண்டிய மன்னன் பராங்குசன் கி.பி. 710 முதல் 765 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான். இவன் பாண்டிய மன்னன் கோச்சடையான் ரணதீரனின் மகனாவான். இவன் பாட்டனின் பெயரான அரிகேசரியைப் பட்டமாகப் பெற்றிருந்தான். மேலும் முதலாம் இராசசிம்மன் மற்றும் தேர்மாறன் எனவும் அழைக்கப்பட்டான். மாறவர்மன் என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.

பல்லவப் போர்

பாண்டிய மன்னன் பராங்குசன் ஆட்சிக்காலத்தில் பல்லவ நாட்டை இரண்டாம் நந்திவர்மன் எனும் பல்லவ மன்னன் ஆண்டுவந்தான். சோழ நாடு மற்றும் தொண்டை நாடு இரண்டாம் நந்திவர்மனுக்கு அடிபணிந்து கப்பம் செலுத்தி வந்தன. பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனுடன் ஏற்பட்ட பகை காரணத்தால் பல்லவ நாட்டிற்கும் பாண்டிய நாட்டிற்கும் போர் ஏற்பட்டது. பாண்டி நாட்டைப் பிடிக்க எண்ணிய இரண்டாம் நந்திவர்மன் படையுடன் வந்தான். குழும்பூர், நெடுவயல், பூவலூர், கொடும்பாளுர், பெரியலூர் ஆகிய ஊர்களில் போர் நடைபெற்றது. பாண்டிய நாட்டின் வட எல்லையில் நடைபெற்ற போரில் பாண்டிய மன்னன் பராங்குசன் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மனைத் தோற்கடித்தான். நென்மேலி, மண்ணை ஆகிய இடங்களில் நடை பெற்ற போரில் பல்லவ மன்னன் இரண்டாம் நந்திவர்மன் பாண்டிய மன்னன் பராங்குசனைத் தோற்கடித்தான் என்று திருமங்கை ஆழ்வார் குறிப்பிட்டுள்ளார். இத்தகவலை கச்சிப்பரமேச்சுர விண்ணகரப் பதிகம் மற்றும் நந்தியின் உதயேந்திரச் செப்பேடு இரண்டும் உறுதி செய்கின்றன.

கொங்குப் போர்

பாண்டிய மன்னன் பராங்குசன் கொங்கு நாட்டின் மீது படையெடுத்துச் சென்று அதை வென்றான். போரில் தோல்வியைத் தழுவிய கொங்கு மன்னர்கள் பாண்டிய மன்னன் பராங்குசனிற்கு கப்பம் கட்டினார்கள்.

கங்கப் போர்

பாண்டிய மன்னன் பராங்குசன் கங்க நாட்டின் மன்னனான சிறீபுருசனை போரில் வென்று அவன் மகள் பூதசுந்தரியை மணந்தான். இவர்கள் இருவருக்கும் பிறந்தவனே பராந்தகன் ஆவான். வேள்விக்குடிச் செப்பேட்டின் வாயிலாக இந்தத் தகவல்களை உறுதிசெய்ய முடிகிறது. பாண்டிய மன்னன் பராங்குசன் வடக்கில் உள்ள மாளவ நாட்டை போரில் வென்றான். வெற்றியின் பரிசாக மாளவநாட்டு மன்னரின் மகளை மணந்து கொண்டான்

சைவ சமயப் பணிகள்

சிவ பக்தனான பராங்குசன் காவிரி ஆற்றில் அமைந்திருந்த கொடுமுடிக்கு வருகை புரிந்தான். சிவபெருமானை வணங்கி பொன்னும்,பொருளும் காணிக்கையாக அளித்தான். மனைவி பூதசுந்தரியோடு கொடுமுடியில் பலநாள் தங்கினான். இந்தத் தகவல்கள் கொடுமுடிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *