இரண்டாம் இராசசிம்மன்
பாண்டிய மன்னன் வரகுணனின் தந்தை இரண்டாம் இராசசிம்மன் கி.பி. 790ம் ஆண்டு முதல் 792ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இரண்டு ஆண்டுகளே ஆட்சி செய்த இம்மன்னன் ஆட்சியில் போர் எதுவும் நிகழவில்லை. தவிர மிகக் குறைவாக இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்ததால் இவனைப் பற்றிய வரலாறு செப்பேடுகள், பட்டயங்கள் மற்றும் கல்வெட்டுகள் எவற்றிலும் குறிக்கப்படவில்லை.
வரகுணப்பாண்டியன்
இரண்டாம் இராசசிம்மனைத் தொடர்ந்து அவன் மகன் வரகுணன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னன் முதலாம் வரகுணன் கி.பி. 792ம் ஆண்டு முதல் கி.பி. 835ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். மாறன் சடையன் மற்றும் சடையவர்மன் என்ற படப்பெயர்களாலும் இவன் அழைக்கப்பட்டான்.
சின்னமனூர் செப்பேடு
“கொற்றவர்கள் தொழுகழற்கால் கோவரகுண மகாராசன்” என்று சின்னமனூர் செப்பேட்டில் மன்னன் முதலாம் வரகுணன் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. நந்திவர்மன் சோழ நாட்டை ஆட்சி செய்த பொழுது பாண்டிய மன்னன் வரகுணப் பாண்டியன் அவனுடன் போர் செய்தான் என்று இவனை பற்றி சோழ நாட்டில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் வாயிலாக நாம் அறியமுடிகிறது.
கல்வெட்டுகள்
பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளில் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகளே அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் சோழ நாட்டில் பல இடங்களிலும் வரகுணப்பாண்டியன் காலத்துக் கல்வெட்டுகள் காணப்படுகிறது.
வரகுணப்பாண்டியனின் நான்காம் ஆட்சிக்காலக் கல்வெட்டு சோழநாட்டு திருவியலூர்,திருநெய்த்தானம் ஆகிய ஊர்களிலும், எட்டாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுக்கள் ஆடுதுறை, கும்பகோணம், செந்தலை ஆகிய ஊர்களிலும் பதினொன்றாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டுகள் திருச்சிராப்பள்ளி, திருக்கோடிகா ஆகிய ஊர்களிலும் காணப்படுகிறது. மேலும் திருச்சோற்றுத்துறையில் வரகுணப்பாண்டியனின் சில கல்வெட்டுக்களும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
சோழ நாடு
இவ்வாறு சோழ நாடு முழுவதும் பரவலாக வரகுணப்பாண்டியனின் கல்வெட்டுக்கள் இருப்பதன் மூலம் சோழ நாடு முழுவதும் வரகுணப்பாண்டியனின் ஆட்சின் கீழ் இருந்திருக்க வேண்டும் என்ற கருத்து சரித்திர ஆராய்ச்சியார்கள் கருதுகின்றனர்.
தொண்டை நாடு
சோழ நாடு தவிர தொண்டை நாட்டு மன்னன் தந்திவர்மனுடன் போர் செய்து வென்று தொண்டை நாட்டையும் பாண்டிய நாட்டின் அதிகாரத்தின் கீழ் வரகுணப்பாண்டியன் கொண்டுவந்தான்.
சமயத் தொண்டு
வரகுணப்பாண்டியன் சைவ சமயத்தை பின்பற்றினான். நியமத்தில் தங்கியிருந்த வரகுணப்பாண்டியன் சீராப்பள்ளி இறைவனுக்குத் திருவிளக்குகள் வைத்து, 125 கழஞ்சு பொன் கொடுத்தான். வேம்பிலும், நியமத்திலும் கோயில் பணிகள் செய்தான். திருநெல்வேலி அம்பாசமுத்திரக் கோயிலுக்கு 240 பொன்காசுகள் வழங்கினான் என அங்குள்ள உள்ள வரகுணப்பாண்டியனின் பதினாறாம் ஆண்டு ஆட்சிக் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இறுதிக் காலம்
வரகுணப்பாண்டியனின் 39,41,42,43 ஆட்சி ஆண்டுக் கல்வெட்டுக்கள் திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், தளபதி சமுத்திரம், கழுகுமலை, ஏர்வாடி ஆகிய ஊர்களில் உள்ளன. 43 ஆண்டுகள் பாண்டிய மன்னனாக ஆட்சி புரிந்த வரகுணப்பாண்டியன் கி.பி.835 ஆம் ஆண்டு இறந்தான்.
Comments