வரகுணப்பாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் சீவல்லபன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் பதவியேற்றான். சீவல்லபன் கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான்.
மாறவர்மன், ஏகவீரன், பரசக்கர கோலாகலன், அபனிபசேகரன் ஆகியன சீமாறன் சீவல்லபனின் மற்ற சிறப்புப் பெயர்களாகும். இவன் பின் பாண்டிய நாட்டை ஆண்ட மன்னர்களாகிய வரகுண வர்மன் மற்றும் பராந்தகப் பாண்டியன் ஆகிய இருவரும் இவன் மகன் ஆவர். இவன் சிறப்புப் பெயரால் திருச்செந்தூர் அருகில் “அவனிப சேகரமங்கலம்” என்ற ஊர் அழைக்கப்பட்டது என்று அங்குள்ள கல்வெட்டின் வாயிலாக அறியமுடிகிறது. மேலும் “அவனிபசேகரன் கோளகை” என்ற பொற்காசை சீவல்லபன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சித்தன்னவாசல் குறிப்பு
புதுக்கோட்டையில் உள்ள சித்தன்னவாசல் வாசல் குகைக்கோயிலில் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபனின் பற்றிய குறிப்புக்கள் உள்ளது.
“பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்”
போர்கள்
சீமாறன் ஏகவீரன் பல போர்களைச் செய்தான். புதுக்கோட்டை சித்தன்னவாசலையும் கைப்பற்றினான். இவன் படைகள் குண்ணூர், சிங்களம், விழிஞம் ஆகிய ஊர்களிலும் போர் புரிந்து வெற்றிபெற்றுள்ளது. விழிஞம் எனும் இடம் தற்போதைய திருவனந்தபுரத்திற்கு அருகாமையில். இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான்.
இது தவிர சீமாறன் ஏகவீரன் கங்கர், பல்லவர், சோழர், கலிங்கர், மாசுதர் என பல மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி வாகை சூடினான்.
சிங்களப் போர்
மகாவம்சத்தில் உள்ள குறிப்புகளின் படி, சிங்கள நாட்டை முதலாம் சேனன் மன்னனாக இருந்த சமயம் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் படையெடுத்துச் சென்றான். முதல் சேனையினைப் போரில் தோற்கடித்துப் பல நகரங்களைச் சூறையாடினான். புத்த விஹாரங்களில் இருந்த பொன்னையும், பொருட்களையும் கைப்பற்றி வந்தான் எனத் தெரிகிறது.
சின்னமனூர் செப்பேடு
சின்னமனூர் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது படி, பாண்டியரிடம் போரில் தோற்ற சிங்கள மன்னன் மலைநாட்டுக்குத் தப்பிச் சென்றான். இளவரசன் மகிந்தன் போரில் இறந்தான். பின்னர் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி முதலாம் சேனனுக்கு சிங்களத்தை பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் ஒப்படைத்தான் எனத் தெரிகிறது.
மகாவம்சம்
சீவல்லபன் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்த சமயத்தில் மாயப் பாண்டியன் என்பவன் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு சூழ்ச்சி செய்தான். அவன் சிங்கள மன்னன் இரண்டாம் சேனனை மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். போரில் சிங்களப் படை மதுரையைத் தாக்கி வெற்றி கொண்டது என மகாவம்சம் கூறுகிறது.
பல்லவ போர்
சீவல்லபன் ஆட்சி காலத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் பல போர்கள் நடைபெற்றன. இவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் முதலாம் தெள்ளாற்றுப் போர், குடமூக்குப் போர், நிருபதுங்கவர்மனுடன் அரிசிற்கரைப் போர் ஆகியன சிறப்புடைய போர்களாகும்.
தெள்ளாற்றுப் போர்
கி.பி.836 ஆம் ஆண்டளவில் பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னன் சீவல்லபனுக்கும் போர் நடைபெற்றது. போரில் வென்ற சீவல்லபன் தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினைக் கைப்பற்றினான்.
ஆனால் போரில் தோற்ற மூன்றாம் நந்திவர்மன் மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என “தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்” கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருச்சி சென்னிவார்க் கோயிலில் உள்ள கல்வெட்டும், “தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்’ என்று கூறுகின்றது. பாண்டியன் சீவல்லபன் தொண்டை மண்டலத்தின் தென்பகுதியினை இழந்தான்.
குடமூக்குப் போர்
தஞ்சை கும்பகோணம் அருகில் குடமூக்கு என்ற இடத்தில் நந்திவர்மன், கங்கர், சோழர், கலிங்கர் என பல மன்னர்கள் இணைந்த பெரும் படையுடன் பாண்டியன் சீவல்லபனின் படை போர் புரிந்தது. இந்தப் போரில் அனைத்து மன்னர்களையும் பாண்டியன் சீீவல்லபன் வெற்றி கொண்டான் என நந்திவர்மனின் மகன் நிருபதுங்கவர்மன் தன் வாகூர்ச் செப்பேட்டில் குறிப்பிட்டுள்ளான்.
அரிசிற்கரை போர்
பின்னர் அரிசிலாற்றங்கரை ஊராகிய அரிசிற்கரையில் நடை பெற்ற போரில் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக வாகூர்ச் செப்பேடு கூறுகிறது. மேலும் சோழ நாடு பல்லவர் ஆட்சிக்குள் வந்தது. லால்குடி, கண்டியூர், திருச்சின்னம் பூண்டி, திருக்கோடிகா போன்ற ஊர்களில் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுக்கள் வாயிலாக இந்தத் தகவலை உறுதிசெய்ய முடிகிறது. கி.பி. 862 ஆம் ஆண்டில் பாண்டிய மன்னன் சீமாறன் சீவல்லபன் இறந்தான்.
Comments