வரகுண வர்மன்

பாண்டிய மன்னன் சீவல்லபனின் முதல் மகனான வரகுண வர்மன் கி. பி. 862ம் ஆண்டு முதல் கி.பி.880ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். வரகுண வர்மன் என்ற பெயரைத் தவிர சடையவர்மன் என்றும் இரண்டாம் வரகுண பாண்டியன் என்றும் இவன் அழைக்கப்பட்டான்.

மதுரைப் போர்

பாண்டிய மன்னன் சீவல்லபன் இறக்கும் பொழுது மதுரை மாயப் பாண்டியனின் ஆட்சியின் கீழ் இருந்தது. கி. பி. 862 ஆம் ஆண்டு சீவல்லபன் இறந்தபின் பாண்டிய மன்னனாகப் பதவியேற்ற வரகுண வர்மன் பல்லவ மன்னன் நிருபதுங்கவர்மனுடன் உறவு வைத்துக் கொண்டு மாயப்பாண்டியனிடமிருந்து பாண்டிய நாட்டை முழுவதும் மீட்டுக் கொண்டான். இதன் காரணத்தால் வரகுண வர்மன் ஆட்சி காலத்தில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையிலான எந்தப் போரும் நிகழாமல் இருந்தது.

முத்தரையர்கள்

இதே காலத்தில் வரலாற்றுப் புகழ்மிக்க மற்றும் ஓர் குறுநில மன்னர்களான முத்தரையர் என்னும் குறுநில மன்னர்கள் தஞ்சை மாவட்டத்தில் செழிப்பான பல ஆற்றோரப் பகுதிகளை அவர்கள் வசப்படுத்தி ஆட்சி புரிந்து வந்தனர்.செந்தலையில் கிடைத்த கல்வெட்டுகள் வாயிலாக இவர்கள் செந்தலை அல்லது நியமம் என்ற ஊரைத் தம் தலைநகராகக் கொண்டு தஞ்சையை ஆண்டுவந்தனர் என்று தெரிகிறது.

பாண்டியர்களுடன் நட்புறவுடன் இருந்த முத்தரையர்கள் மீது மற்றொரு சிற்றரசரான சோழ மன்னர் விஜயாலய சோழன் மீது படை நடத்திச் சென்றார். போரில் விஜயாலய சோழன் வெற்றி பெற்று தஞ்சையை அவரது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தார். இந்த போரின் மூலம் தமிழகத்தில் முத்தரையர்கள் ஆட்சி முழுவதுமாக முடிவுக்கு வந்தது. போரில் வென்ற விஜயாலய சோழன் பல்லவர்ககள் ஆதிக்கத்திலிருந்து சோழ நாடு விடுதலை பெற்றதாக அறிவித்தார்.

சோழர்கள் ஏழுச்சி

சோழ நாட்டின் ஏழுச்சி கண்டு பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மனுக்கும் பாண்டிய மன்னர் வரகுணவர்மனுக்கும் இடையே ஓர் போர் உடன்படிக்கை ஏற்பட்டது. முத்தரையர்கள் முறியடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பெரும்படையுடன் வரகுணவர்மன் சோழநாட்டின் மீது படையெடுத்து வந்தான்.

ஆனால் போர் துவங்குவதற்கு முன்பே பல்லவ மன்னர் மூன்றாம் நந்திவர்மர் இறந்தார். மூன்றாம் நந்திவர்மன் இறந்ததைத் தொடர்ந்து அவரது இரண்டு மகன்களாகிய நிருபதுங்கவர்மனுக்கும் மற்றும் அபராஜிதவர்ம பல்லவனுக்கும் இடையே யார் அடுத்த பல்லவ மன்னன் என்பது குறித்து சண்டை ஏற்படுத்து.
நிருபதுங்கவர்மனுக்கு பாண்டியர்கள் ஆதரவு அளித்தனர். அபராஜிதவர்ம பல்லவனுக்கு கங்க மன்னன் முதலாம் பிருதிவிபதி மற்றும் விஜயாலய சோழன் ஆதரவு கிட்டியது.

திருப்புறம்பியம் போர்

இரண்டாகப் பிரிந்த பல்லவ சகோதரர்களால் தமிழ் நாட்டில் பெரும் போர் மூண்டது. திருப்புறம்பியம் எனும் இடத்தில் நடத்த போர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க போராகக் கருதப்படுகிறது. பல்லவ சகோதரர்கள் மற்ற அரசர்கள் துணை கொண்டு பெறும் போரில் ஈடுபட்டார்கள். கொள்ளிடத்தின் கரையில் கும்பகோணதிற்கு அருகில் உள்ள திருப்புறம்பியம் என்ற ஊரில் இந்த போர் நடை பெருது. முதுமையின் காரணத்தால விஜயாலய சோழனுக்கு மாறாக அவர் மகன் முதலாம் ஆதித்த சோழனின் தலைமையில் சோழ படைகள் போருக்கு வந்தன

வரலாற்று சிறப்புமிக்க இந்த திருப்புறம்பியப் போரில் பாண்டிய மன்னன் வரகுணவர்மன் மற்றும் நிருபதுங்கவர்மன் படைகள் பெரும் தோல்வித் தழுவின. இப்போரில் கங்கமன்னன் முதலாம் பிருதிவிபதி இறந்தார். போரில் கிடைத்த வருவாயின் பெரும் பகுதி ஆதித்த சோழனுக்குக் கிட்டியது. போரின் முடிவில் சோழர்களின் சாம்ராஜ்ய எல்லைகள் விரிவடைந்தன. அடுத்த 400 ஆண்டுகளுக்குச் சோழப் பேரரசு தென்இந்தியாவை ஆள இந்தப் போர் ஒரு தொடக்கமாக அமைத்ததாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர். பல்லவ மன்னன் ஒருவனுக்கு உதிரப்பட்டியிலும், கச்சியாண்டவர் கோயிலிலும் நடுகற்கோயில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *