பிற்காலப் பாண்டியர்கள் I

பிற்காலப் பாண்டியர்களில் முதல் பாண்டிய மன்னனான மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் சோழ மன்னன் முதலாம் பராந்தக சோழனிடம் தோற்றதைத் தொடர்ந்து பிற்காலப் பாண்டிய மன்னர்கள் சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசர்களாக கப்பம் செலுத்தி வந்தனர்.

அமர புயங்கன்

பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன் பாண்டிய மன்னன் அமர புயங்கன். மன்னன் அமர புயங்கன் ஆட்சிக் காலத்தில் இவன் தலைமையின் கீழ் பல குறுநில மன்னர்கள் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாண்டிய மன்னன் அமர புயங்கன் ஆட்சி புரிந்த வேளையிலே சோழ மன்னன் முதலாம் இராஜராஜ சோழன் சேர நாட்டின் மீது படையெடுத்தான். அச்சமயம் வழியில் எதிர்த்த அமர புயங்கனை போரில் தோற்கடித்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுகின்றது. முதலாம் இராஜராஜன் பாண்டிய நாட்டைக் கைப்பற்றியதன் பின்னர் சோழ நாட்டினையும் பாண்டிய நாட்டுடன் இணைத்து ராசராச மண்டலம் எனப் பெயரிட்டு ஆட்சி புரிந்தான்.

சீவல்லப பாண்டியன்

சீவல்லப பாண்டியன் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்து வந்த சிற்றரசன் ஆவான். இரண்டாம் இஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் சோழப் பேரரசிற்கு ஒழுங்காக கப்பம் செலுத்தி வந்த காரணத்தினால் சோழப் பேரரசிற்கு கப்பம் செலுத்துவதில் இருந்து விடுதலை பெற்றான்.கி.பி. 1054 ஆம் ஆண்டடு சீவல்லப பாண்டியனின் பட்டத்தரசி சோழ நாட்டுத் திருவியலூர்க் கோயிலுக்குப் பல அணிகலன்கள் வழங்கினாள்.

வீரபாண்டியன்

வீரபாண்டியன் கி.பி. 946 முதல் 966 வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த பாண்டிய மன்னன். மூன்றாம் இராஜசிம்மனின் மகனான இவன் கி.பி. 946 ஆம் ஆண்டில் தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர் பாண்டிய நாட்டிற்கு மன்னனாகப் படவியேற்றான். இவனுக்கு சோழாந்தகன், பாண்டி மார்த்தாண்டன் என்ற சிறப்புப் பெயர்கள் இருந்ததாக திருப்புடைமருதூர் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி, இராமநாதபுரம், திருவாங்கூர் போன்ற இடங்களில் வீரபாண்டியனைப் பற்றியக் கல்வெட்டுகள் உள்ளன. திருமங்கலம் வட்டம், கீழ்மாத்தூர்க் கோயில் போன்ற பகுதிகளில் வீரபாண்டியனைப் பற்றியக் கல்வெட்டுகளைக் காணலாம்.

மூன்றாம் இராசசிம்மன் இழந்த பாண்டிய நாட்டைச் சோழரிடமிருந்து வீரபாண்டியன் மீட்டான். இதைத் தொடர்ந்து சோழ நாட்டை ஆண்டு வந்த சுந்தரசோழன் அவன் மகன் ஆதித்த கரிகாலனுடன் படையெடுத்துச் சென்று வீரபாண்டியனோடு சேவூர் என்னும் இடத்தில் போரிட்டான். கி.பி. 966இல் நடைபெற்ற அப்போரில் ஆதித்த கரிகாலன் வீரபாண்டியனைக் கொன்றான். இப்போரின் வெற்றிக்குப் பின்னர், மீண்டும் மதுரை சோழர்களின் ஆட்சியின் கீழ் வந்தது.

மதுரை, நெல்லை, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் காணப்படும் கல்வெட்டுகளில் வீரபாண்டியன் சோழப் பேரரசிற்கு கப்பம் கட்டாமல் ஆட்சி புரிந்ததைக் கூறுகின்றன. இவன் பெயரால் வீரபாண்டி என்ற ஊர் ஒன்று உள்ளது. கொல்லிமலையில் பாண்டியாறு என்னும் ஆறு இவன் பெயரில் உள்ளது.

வீரகேசரி

பாண்டிய மன்னன் வீரகேசரி கி.பி. 1065ம் ஆண்டு முதல் கி.பி.1070ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் பாண்டிய மன்னன் சீவல்லப பாண்டியனின் மகன் ஆவான். சோழ மன்னன் வீரராஜேந்திரனுடன் கி.பி. 1065 ஆம் ஆண்டளவில் போர் செய்து இறந்தான். சோழ மன்னன் வீரராஜேந்திரனும் அவன் மகன் அதிராஜேந்திரனும் கி.பி.1070 ஆம் ஆண்டு அடுத்தடுத்து இறந்த காரணத்தினால் பாண்டிய நாட்டில் ஆட்சிகள் சீராக அமைக்கப்படவில்லை. கி.பி. 1081 வரை ஆண்ட பாண்டிய மன்னர்கள் பற்றிய சரியான தகவல்கள் இல்லை.

மாறவர்மன் சீவல்லபன்

கி.பி. 1132ம் ஆண்டு முதல் 1162ம் ஆண்டு வரையில் மாறவர்மன் சீவல்லபன்என்பவன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான்.கி.பி. இவனது மெய்க்கீர்த்திகள் “பூமகள் சயமகள் பொலிவுடன் தழைப்ப” எனத் தொடங்கும். இவன் சேர மன்னன் வீரரவிவர்மனுக்கு கப்பம் செலுத்திவந்தான். மாறவர்மன் சீவல்லபனைப் பற்றிய கல்வெட்டுக்கள் நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பல ஊர்களிலும் காணப்படுகிறது.

சடையவர்மன் சீவல்லபன்

கி.பி. 1145ம் ஆண்டு முதல் கி.பி.1150ம் ஆண்டு வரையில் சடையவர்மன் சீவல்லபன் பாண்டிய நாட்டை ஆண்டான். சோழ மன்னன் முதலாம் குலோத்துங்கன் காலத்தில் வாழ்ந்த இம்மன்னனது மெய்க்கீர்த்திகள் ‘திருமடந்தையும் சயமடந்தையும்’ எனத்துவங்கும். நெய்வேலி,மதுரை ஆகிய இடங்களில் இவனைப் பற்றிய தகவல்களைக் கொண்டுள்ள கல்வெட்டுக்கள் பல காணப்படுகின்றன.

மாறவர்மன் பராக்கிரம பாண்டியன்

கி.பி. 1150ம் ஆண்டு முதல் 1160ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை பராக்கிரம பாண்டியன் என்ற மன்னன் ஆட்சிசெய்தான். முதலாம் குலோத்துங்கன் காலத்தில் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த இவன் திருபுவனச் சக்கரவர்த்தி எனப் பட்டம் பெற்றிருந்தான். மாறவர்மன் என்னும் அடைமொழியினையும் பெற்றிருந்தான். இவனது மெய்க்கீர்த்தி ‘திருமகள் புணர’ எனத் தொடங்கும்.

சடையவர்மன் பராந்தக பாண்டியன்

சடையவர்மன் பராந்தக பாண்டியன் கி.பி. 1150ம் ஆண்டு முதல் 1162ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். இந்த மன்னனின் மெய்க்கீர்த்தி “திருவளர் செயம் வளரத் தென்னவர் தம்குலம் வளர” எனத் தொடங்கும். சேர மன்னனொருவனை வென்று அவனிடம் கப்பம் பெற்றான். காந்தளூர்ச் சாலையை வென்றான். விழிஞத்தைக் கைப்பற்றினான். தென் கலிங்க நாட்டில் மன்னன் தெலுங்கு வீமனை வென்றான். திருவனந்தபுரத்தில் திருமாலிற்கு மணிவிளக்குகள் அணிவித்தான்.கூபகத்தரசன் மகளை திருமணம் செய்துகொண்டான். அளப்பன, நிறுப்பன ஆகிய கருவிகளுக்கு அரச முத்திரையான கயல் முத்திரை இட வைத்தான்.

About the author