பாண்டிய மன்னன் பராந்தக பாண்டியனுக்கும் சேர நாட்டு இளவரசி வானவன்மாதேவிக்கும் மகனாகப் பிறந்த மகன் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் கி.பி. 900ம் ஆண்டு பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். பாண்டிய மன்னனாக முடிசூடிக்கொண்ட இவன் சடையன் மாறன், இராச சிகாமணி, சீகாந்தன், மந்தரகௌரவமேடு என்ற பட்டப் பெயர்களாலும் அழைக்கப்பட்டான். கல்வெட்டுகள் வாயிலாக மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் பிரம்மதேயம், தேவதானம், பள்ளிச்சந்தம் ஆகிய அறச்செயல்களை அதிக அளவில் செய்தான் என்று தெரிகிறது.
போர்கள்
வஞ்சிமாநகர் போர்
மிகப்பெரிய போர் ஒன்று வஞ்சிமாநகரில் நடைபெற்றது. அங்கு சோழ சிற்றரசன் ஒருவனை வைப்பூரிலும், நாவற்பதியிலும் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் வென்றான் என்று தெரிகிறது. ஆயினும் அந்த சோழ சிற்றரசனின் பெயர் தெரியவில்லை.
கொடும்பாளூர் போர்
கி.பி.910ம் ஆண்டில் கொடும்பாளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை ஆண்ட இருக்குவேளிர் குலத்தை சேர்ந்த சிற்றரசர் பூதி விக்கிரம கேசரியை போரில் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் வெற்றி பெற்றான். சிற்றரசர் பூதி விக்கிரம கேசரி சோழ மன்னர் முதலாம் பராந்தக சோழனின் இரு மகள்களில் ஒருவரான அனுபமாதேவி என்பவரை திருமணம் செய்திருந்தான்.
சோழப் போர்
கொடும்பாளூரில் நடை பெற்ற போரில் பூதி விக்கிரம கேசரி தோற்றதைத் தொடர்ந்து முதலாம் பராந்தகச் சோழனுக்கும் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனுக்கும் போர் துவங்கியது. முதலாம் பராந்தகச் சோழனுக்கும் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனுக்கும் இடையில் மூன்று போர்கள் நடைபெற்றது.
முதல் போர்
சோழ மன்னன் முதலாம் பராந்தகச் சோழனுடன் நடைபெற்ற முதல் போரில் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் பெரும் தோல்வியைத் தழுவினான்.
இரண்டாம் போர்
தஞ்சாவூரின் அருகில் உள்ள வெள்ளூர் எனும் இடத்தில இரண்டாவது போர் நடைபெற்றது. இரண்டாம் கட்டப் போரில் பாண்டிய மன்னன் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன், ஈழ மன்னன் ஐந்தாம் காசியப்பனின் உதவியைக் கோரிப் பெற்று, சோழப்படையைத் தாக்கினான். மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனின் தலைமையில் நடந்த இந்த இரண்டாவது போரிலும் பாண்டிய ஈழத்துப் படைகள் முதலாம் பராந்தகச் சோழனுனிடம் தோற்றுப் பின்வாங்கின. இரண்டாவது போரின் முடிவில் முதலாம் பராந்தகச் சோழன் பாண்டிய நாட்டின் தலைநகர் மதுரையை கைப்பற்றினான். போரில் தோற்ற மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் ஈழத்திற்கு தப்பி ஓடினான். பாண்டிய நாடு முழுவதையும் முதலாம் பராந்தகச் சோழன் கைபற்றினான். மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் ஈழ மன்னன் ஐந்தாம் காசிபனிடம் பாண்டிய நாட்டின் பெரு மதிப்பிற்குரிய சுந்தரமுடியையும், வாள், குடையையும் ஒப்படைத்தான்.
மூன்றாம் போர்
மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனுக்கு உதவ ஈழப் படைத்தலைவன் முதலாம் பராந்தகச் சோழனுடன் போர் புரிந்தான். இந்தப் போரிலும் சோழ மன்னன் முதலாம் பராந்தகச் சோழனே வெற்றி பெற்றான். மேலும் சோழர்களுடனான இந்த மூன்று போர்களிலும் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனுக்கு சேர மன்னன் மற்றும் கீழப்பழுவூர்த் தலைவர்களான பழுவேட்டரையர் ஆகியோர் உதவி புரிந்தனர். ஆயினும் அனைத்து போர்களிலும் சோழர்களே வெற்றி பெற்றனர். பாண்டிய மன்னன் கடுங்கோனால் களப்பிரர்களை வென்று அமைக்கப்பட்ட பாண்டிய நாடு மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனின் ஆட்சி காலத்தில் முழுவதுமாக சோழ மன்னன் முதலாம் பராந்தகச் சோழனால் ஆக்கிரமிக்கப்பட்டது.
இறுதிக்காலம்
வெள்ளூர்ப் போரின் முடிவில் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனின் ஈழத்தில் சென்று சிறிது காலம் வாழ்ந்தான். பின்னர் அவன் இறுதிக்காலத்தை அவன் தாயான வானவன் மாதேவி பிறந்த நாடான சேர நாட்டிற்குச் சென்று கழித்தான். கி.பி.946 ஆம் ஆண்டில் மூன்றாம் இராஜசிம்ம பாண்டியனின் இறந்தான்
Comments