பிற்காலப் பாண்டியர்கள் II

விக்கிரம பாண்டியன்

பாண்டிய மன்னன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குப் பிறகு அவன் மகன் விக்கிரம பாண்டியன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். சோழ மன்னன் மூன்றாம் குலோத்துங்கன் உதவியால் ஆட்சிப் பெற்ற விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோத்துங்க சோழனிடம் மிகுந்த நன்றியுடையவனாய் திகழந்தான். கி.பி.1180ம் ஆண்டில் பாண்டிய மன்னனாகப் பதவியேற்ற இவன் கி.பி.1190ம் ஆண்டு இறந்தான்.

முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்

கி.பி.1190ம் ஆண்டு பாண்டிய மன்னன் விக்கிரம பாண்டியனின் மறைவுக்குப் பிறகு அவன் மகன் முதலாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றான். இவன் தற்போதைய மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலிப் ஆகிய இடங்களை ஆண்டான். இவன் கி.பி.1217ம் ஆண்டு வரையில் ஆட்சி செய்தான்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் முக்கியமான பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். இவன் அறிவும் வலிமையையும் துணிவும் போர்த்திறமையும் கொண்டு விளங்கினான். இவன் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிக் காலத்திலேயே பாண்டிய நாட்டின் விடுதலைக்காக உள் நாட்டு குழப்பங்களை ஆரம்பித்தாலும், மூன்றாம் குலோத்துங்க சோழனின் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிற்றரசனாகவே இருந்து வந்தான்.

மூன்றாம் குலோத்துங்க சோழனின் பின்பு ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராஜராஜ சோழன். அவன் முன்னோர்கள் அளவிற்கு ஆட்சி புரியும் ஆற்றல் இல்லாமால் இருந்தான். இதை அறிந்த முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மூன்றாம் இராஜராஜ சோழனை எதிர்த்து போர் புரிந்து வெற்றிகொண்டான். தஞ்சை, சிதம்பரம் வரைப் படை எடுத்து வந்து மூன்றாம் இராஜராஜ சோழன் பழையாறைக்கே செல்ல வைத்தான்.

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனிடம் சமாதானம் கோரி பாண்டியனுக்கு அடங்கிய சிற்றரசனாக இருக்க ஒப்புக் கொண்டு தஞ்சை வரை ஆட்சி புரிந்தான் மூன்றாம் இராஜராஜ சோழன். முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் ஆட்சிக்காலம் சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு ஆரம்பம் எனலாம்.

இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்

முதலாம் மாறவர்மன் சுந்தரபாண்டியனின் மறைவுக்குப் பிறகு இரண்டாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய மன்னனாகப் படவியேற்றான். ஆனால் இவன் ஆட்சி காலம் சில மாதங்கள் மட்டுமே நடந்தது. இந்த தகவலை திருத்தாங்கல் கல்வெட்டின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.இவனது மெய்க்கீர்த்தி ‘பூதலவனிதை’ எனத் தொடங்கும்.

இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன்

கி.பி. 1239ம் ஆண்டு முதல் கி.பி.1251ம் ஆண்டு இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சி செய்தான். இவனது மெய்க்கீர்த்தி “பூமலர்த்திருவும்,பொருசய மடந்தையும்” எனத் தொடங்கும். இவன் ஹொய்சாள மன்னன் வீரசோமேச்சுரனின் சகோதரி மகன் ஆவான். கொங்கு நாட்டு மன்னன் விக்கிரம சோழன் இவன் மைத்துனன் ஆவான். இவன் ஆட்சி காலத்தில் மூன்றாம் இராஜேந்திர சோழன் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வெற்றி கொண்டான். ஆனால் ஹொய்சாள வீரசோமேச்சுரன் பாண்டிய நாட்டினை மீட்டெடுத்துக் கொடுத்தான்.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *