முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்

பாண்டிய மன்னன் இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனின் மறைவுக்குப் பின்னர் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டின் மன்னனாகப் படவியேற்றான். இவன் கி.பி. 1251 முதல் 1271 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்தான்.

இவன் பிற்காலப் பாண்டிய மன்னர்களுள் மிக முகியமான மன்னன் ஆவான். சோழப் பேரரசின் வீழ்ச்சிக்கு வித்திட்டவன் இவன். மூன்றாம் ராஜேந்திர சோழனை போரில் தோற்க்கடித்து சோழப் பேரரசை முற்றிலுமாகக் கைப்பற்றி பிற்காலப் பாண்டியப் பேரரசை நிறுவியவன இவன்.

மகாராசாதி ராச ஸ்ரீபரமேசுவரன், எம்மண்டலமும் கொண்டருளியவன்,எல்லாம் தலையானான் பெருமாள்,கச்சி வழங்கும் பெருமாள், கோதண்டராமன் போன்ற பல பட்டப்பெயர்களைப் பெற்றவன்.

ஆற்றிய போர்கள்

சேரப் போர்

சேர மன்னர்களில் முக்கியமானவன் வீரரவி உதய மார்தண்டவர்மன். பரலி மாநகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான். வீரரவி உதய மார்தண்டவர்மன் ஆட்சி காலத்தில் சேரமன்னனே மும்மன்னர்களில் பலம் வாய்ந்தவனாகவும் காணப்பட்டான்.

பாண்டியர்களின் செல்வமான கொற்கைப்பகுதி முத்துக்களை வீரரவி உதய மார்தண்டவர்மன் களவாடினான். இதற்கு இலங்கை மன்னன் சந்திரபானு உதவினான். மேலும் வீரரவி உதய மார்தண்டவர்மன் கொட்டுந்தளம் என்ற இடத்தில் இருந்த பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் மகளும் பாண்டிய நாட்டின் இளவரசியுமான முத்துக்குமரியை ஹொய்சாளர்கள் படைத்தளபதி சிங்கண்ணனின் உதவி கொண்டு கடத்திச் சென்றான்.

இந்தக் காரணங்களினால் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் அவன் தம்பி வீர பாண்டியனின் படையெடுப்புக்குச் சேர மன்னன் வீரரவி உதய மார்தண்டவர்மன் ஆளானான். சிறிய நாடாக இருந்த பாண்டிய நாடு சேர நாட்டின் மீது போர் தொடுத்தது. முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் அவன் தம்பி வீர பாண்டியனின் தலைமையில் பாண்டியர்கள் படை இரண்டாகப் பிரிந்து சேர நாட்டின் மீது போர்தொடுத்தது. வீர பாண்டியனின் தலைமையிலானா பாண்டியர்கள் படை கோட்டாற்றுக்கரை என்னும் இடத்தில் இருந்த சேரர்களின் கோட்டையைத் தாக்கியது பாண்டியர்களின் படையை விட நான்கு மடங்கு பலம் வாய்ந்த சேர படை பெரும் தோல்வியை அடைந்தது. பரலியில் நடந்த இறுதிப் போரில் சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டான் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். பரலியில் நடந்த இறுதிப் போரில் சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் இறந்தான்.

ஹொய்சாளப் போர்

பாண்டியர்களின் எழுச்சி கண்ட ஹொய்சாள மன்னன் வீர சோமேஸ்வரன், முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனை அடக்குவதற்காக சோழர்களிடம் நட்புக்கரம் நீட்டினான். ஹொய்சாள மன்னனின் நட்பை ஏற்றுக்கொண்ட மூன்றாம் ராஜேந்திர சோழன் வீர சோமேஸ்வரனின் மகன் வீர ராமநாதன் என்பவனை சோழ நாட்டில் கண்ணனூர் என்ற இடத்தின் மன்னனாக்கி அங்கிருந்தபடி ஆட்சி புரியும்படி அமர்த்தினான். கண்ணனூர் என்னும் ஊர் தற்சமயம் சமயபுரம் என்று அழைக்கப்படுகிறது.

சேரர்களுடனான போரில் வென்றதும் பாண்டியர்களின் படை கண்ணானுரின் மேல் படையெடுத்தது. போரில் ஹொய்சாள மன்னன் வீரசோமேசுவரன் தோற்றான். பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் மகளும் பாண்டிய நாட்டின் இளவரசியுமான முத்துக்குமரியை கடத்திச் சென்ற ஹொய்சாளர்கள் படைத்தளபதி சிங்கண்ணன் போரில் கொல்லப்பட்டான். கண்ணனூரில் நடைபெற்ற மற்றும் ஒரு போரில் போரில் ஹொய்சாள மன்னன் வீரராம நாதனை தோற்கடித்து அவன் தளபதி சோமன் என்பவனைக் கொன்றான். போரின் முடிவில் கண்ணனுர் வரை பாண்டியர்களின் எல்லை விரிந்தது.

சோழப் போர்

சற்றேறக்குறைய 400 ஆண்டுகளாய் சோழர்களால் தொடர்ந்து போரில் தோற்க்கடிக்கப்பட்டு சோழப் பேரரசிற்கு அடங்கிய சிற்றரசாக விளங்கிய பாண்டிய நாடு, பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனின் ஆட்சிக்காலத்தில் இழந்த அதன் பெருமையை மீட்டெடுத்தது.

ஹொய்சாளர்களுடனான போரில் வென்றதும் பாண்டியர்களின் படை சோழ நாட்டின் மீது திரும்பியது. அப்போது மூன்றாம் ராஜேந்திர சோழன் சோழ நாட்டின் மன்னனாக ஆட்சி செய்தான். மூன்றாம் ராஜேந்திர சோழனின் 37ம் ஆட்சி ஆண்டில் பெரும் படையுடன் முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் சோழ நாட்டின் மீது போர் தொடுத்தான். பெரும் படை, ராஜ தந்திரம், பெரும் ஆற்றல், வீரம் ஆகிவற்றை கொண்டிருந்த முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனினுடன் நடைபெற்ற இந்தப் போரில் மூன்றாம் ராஜேந்திர சோழன் தோல்வியடைந்தான். இதைத் தொடர்ந்து மூன்றாம் ராஜேந்திர சோழன் பாண்டியர்களுக்கு அடங்கிய சிற்றரசாக இருக்க ஒப்புக்கொண்டு கப்பம் கட்ட சம்மதித்தான்.

தெலுங்கு சோழப் போர்

தொடர்ந்து சோழர்களுக்கு உதவிவந்த காஞ்சி மன்னன் தெலுங்கு சோழ மன்னன் விஜயகண்ட கோபாலன் மீது முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் படையெடுத்து வெற்றிபெற்றான். போரில் மன்னன் விசயகண்ட கோபாலன் உயிரிழந்தான்.

இலங்கைப் போர்

பாண்டியர்களின் செல்வமான கொற்கை முத்துக்களைக் களவாட சேர மன்னன் வீரரவி உதய மார்தண்டவர்மனுக்கு உதவிய இலங்கையின் திரிகோணமலையில் ஆட்சி செய்த தம்பர்லிங்கா (தாய்லாந்து) அரசன் சந்திரபானுவின் மீது முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் படையெடுத்து வெற்றிபெற்றான்.

பல்லவப் போர்

பல்லவச் சிற்றரசனாக கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.

மற்ற போர்கள்

மகத நாடு மற்றும் கொங்கு நாட்டினையும் போரில் வென்று முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பாண்டிய நாட்டுடன் இணைத்ததான். இந்தப் போர்களின் வாயிலாக தென் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய பாண்டியர்களின் சாம்ராஜியத்தை முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் நிர்மாணித்தான்.

இறுதிக் காலம்

புகழ்பெற்ற பாண்டிய மன்னர்களுள் ஒருவனான முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தன் வழிவந்தவனான முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பவனை கி.பி. 1267ம் ஆண்டு பாண்டிய நாட்டின் மன்னனாக்கினான். கி.பி. 1271ம் ஆண்டு முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் இறந்தான்.

About the author