இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன்

இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1251ம் ஆண்டு முதல் கி.பி.1281ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்தான். முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் தம்பியான இவன் சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலத்திலேயே பாண்டிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பிலும் போர்களிலும் தமையனுக்குத் துணையாக பங்கேற்றான். சோழ நாடு மற்றும் தொண்டை நாடு ஆகிய நாடுகளின் பிரதிநிதியாக இருந்தான்.

புரிந்த போர்கள்

சேரப் போர்

சேர மன்னர்களில் முக்கியமானவன் வீரரவி உதய மார்தண்டவர்மன். பரலி மாநகரை தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்தான். வீரரவி உதய மார்தண்டவர்மன் ஆட்சி காலத்தில் சேரமன்னனே மும்மன்னர்களில் பலம் வாய்ந்தவனாகவும் காணப்பட்டான்.

பாண்டியர்களின் செல்வமான கொற்கைப்பகுதி முத்துக்களை வீரரவி உதய மார்தண்டவர்மன் களவாடினான். இதற்கு இலங்கை மன்னன் சந்திரபானு உதவினான். மேலும் வீரரவி உதய மார்தண்டவர்மன் கொட்டுந்தளம் என்ற இடத்தில் இருந்த பாண்டிய மன்னன் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியனின் மகளும் பாண்டிய நாட்டின் இளவரசியுமான முத்துக்குமரியை ஹொய்சாளர்கள் படைத்தளபதி சிங்கண்ணனின் உதவி கொண்டு கடத்திச் சென்றான்.

இந்தக் காரணங்களினால் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் அவன் தம்பி இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியனின் படையெடுப்புக்குச் சேர மன்னன் வீரரவி உதய மார்தண்டவர்மன் ஆளானான். சிறிய நாடாக இருந்த பாண்டிய நாடு சேர நாட்டின் மீது போர் தொடுத்தது. முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் மற்றும் அவன் தம்பி இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியனின் தலைமையில் பாண்டியர்கள் படை இரண்டாகப் பிரிந்து சேர நாட்டின் மீது போர்தொடுத்தது. இரண்டாம் ஜடாவர்மன் வீர பாண்டியனின் தலைமையிலானா பாண்டியர்கள் படை கோட்டாற்றுக்கரை என்னும் இடத்தில் இருந்த சேரர்களின் கோட்டையைத் தாக்கியது பாண்டியர்களின் படையை விட நான்கு மடங்கு பலம் வாய்ந்த சேர படை பெரும் தோல்வியை அடைந்தது. பரலியில் நடந்த இறுதிப் போரில் சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் மீது படையெடுத்து வெற்றி கொண்டான் முதலாம் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன். பரலியில் நடந்த இறுதிப் போரில் சேர மன்னன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மன் இறந்தான்.

தெலுங்கு சோழப் போர்

தொடர்ந்து சோழர்களுக்கு உதவிவந்த காஞ்சி மன்னன் தெலுங்கு சோழ மன்னன் விஜயகண்ட கோபாலன் மீது முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் படையெடுத்து வெற்றிபெற்றான். போரில் மன்னன் விசயகண்ட கோபாலன் உயிரிழந்தான்.

பல்லவப் போர்

பல்லவச் சிற்றரசனாக கோப்பெருஞ்சிங்கனை போரில் வென்று அவனது தலைநகரான சேந்தமங்கலத்தை கைப்பற்றினான். பல்லவ மன்னனின் யானை,குதிரை மற்றும் பிற செல்வங்கள் அனைத்தினையும் கவர்ந்து கொண்டு சேந்தமங்கலத்தினை ஆளும் பொறுப்பினைக் கோப்பெருஞ்சிங்கனிடமே அளித்தான்.

இலங்கைப் போர்

தம்பர்லிங்கா (தாய்லாந்து) நாட்டை சேர்ந்த சந்திரபானு என்னும் அரசன் இலங்கையின் மீது படையெடுத்து அதில் இருந்த தமிழர்களின் வடபகுதியை 1255 ஆம் ஆண்டு வென்றான். இலங்கையின் தென் பகுதியை கைப்பற்றும் அவனின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

பாண்டியர்களின் செல்வமான கொற்கை முத்துக்களைக் களவாட சேர மன்னன் வீரரவி உதய மார்தண்டவர்மனுக்கு உதவிய இலங்கையின் திரிகோணமலையில் ஆட்சி செய்த சந்திரபானுவின் மீது 1255 ஆம் ஆண்டு இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியனின் அண்ணனான முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் படையெடுத்து வெற்றி பெற்றான். வரியாக பல விலை உயர்ந்த ஆபரணங்களையும் யானைகளையும் பெற்றது பாண்டிய அரசு.

கி.பி. 1262ம் ஆண்டு மீண்டும் சந்திரபானுவுக்கும் பாண்டியர்களுக்கும் போர் ஏற்படது. இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் தலைமையில் கி.பி. 1262ம் ஆண்டு முதல் கி.பி.1264 ஆம் ஆண்டு வரை போர் போர் நடந்தது. அதில் சந்திரபானு கொல்லப்பட்டான். வெற்றியின் நினைவாக இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் பாண்டியர் சின்னத்தை திரிகூடகிரியிலும் திரிகோணமலையிலும் பொறித்தான். குடுமியான்மலையில் உள்ள கல்வெட்டு இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் பெற்ற இந்த வெற்றியை கூறுகிறது.

யாழ்ப்பாணப் போர்

இலங்கையின் யாழ்ப்பாணப்பகுதியில் பாண்டியர்களை எதிர்த்து போரிட்டு சாவகன் மைந்தன் தோற்றதால் பாண்டியர் ஆட்சிக்கு அடிபணிந்தான். சாவகன் மைந்தன் சில ஆண்டுகளில் பாண்டிய அரசுக்கு செலுத்தி வந்த வரியை நிறுத்தினான். கி.பி. 1270 ஆம் ஆண்டு சாவகன் மைந்தன் மறுபடியும் இலங்கையின் தென் பகுதியை கைப்பற்ற படையெடுத்தான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் தலைமையின் கீழ் பாண்டியர் படை இலங்கையின் மீது படையெடுத்து சாவகன் மைந்தனை தோற்கடித்தது. மேலும் இலங்கையின் வடபகுதியை ஆள குலசேகர சிங்கையாரியன் என்பவனை ஆட்சியில் வைத்தது. பாண்டியர்களின் ஆட்சி 1311 ஆம் ஆண்டு மதுரையில் வீழ்ந்த பிறகும் 1619 ஆம் ஆண்டு வரையில் குலசேகர சிங்கையாரியன் வழி வந்த மன்னர்கள் இலங்கையின் வடபகுதியை ஆண்டனர்.

கல்வெட்டுகள்

இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டுகள் புதுக்கோட்டையை சுற்றி இருக்கின்றன. குடுமியான்மலை சிக்கந்தநாதர் கோயில் கல்வெட்டு, முறப்ப நாட்டு வேத நாராயண பெருமாள் கோயில் கல்வெட்டு, மற்றும் நெல்லையில் உள்ள கல்லிடைக்குறிச்சியிலும் இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியனின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

மறைவு

இரண்டாம் ஜடாவர்மன் வீரபாண்டியன் கி.பி. 1281 ஆம் ஆண்டளவில் வீரமரணம் அடைந்தான் என்பது வரலாறு.

About the author

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *