முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்
முதலாம் ஜடாவர்மன் சுந்தர பாண்டியனுக்குப் பிறகு முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் பாண்டிய மன்னனாகப் பதவியேற்றார்.கி.பி 1268ம் ஆண்டு முதல் கி.பி 1311ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை இவர் ஆண்டார். சோழர், சேரர், கொங்கு நாடு ஆகிய நாடுகளை வென்றான் என்று கல்வெட்டுகள் வாயிலாக அறியமுடிகிறது. மூன்றாம் இராஜேந்திர சோழன் மற்றும் ஹொய்சாள மன்னன் கி.பி 1279ம் ஆண்டில் வென்றான்.
கிபி 1284ம் ஆண்டு படைத்தலைவன் ஆரியச் சக்கரவர்த்தி மூலம் சிங்களத்தின் மீது போர் தொடுத்தான். போரில் பாண்டியர்கள் சிங்களர்களை தோற்கடித்தனர். புத்தரின் சின்னமொன்று பாண்டியர்களால் கைப்பற்றப்பட்டது. கி.பி. 1310ம் ஆண்டில் சிங்கள மன்னன் மதுரைக்கு வந்து பாண்டியனுக்கு அடிபணிந்து புத்தரின் சின்னத்தை மீட்டு சென்றான் என்று அறிய முடிகிறது.
மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மறைவிற்கு பிறகு பாண்டிய நாட்டில் அவனின் மகன்களுக்கு இடையில் பாண்டிய நாட்டின் மன்னராவதில் சண்டை ஏற்பட்டது. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மூத்த மகன் அவன் தம்பி இரண்டாம் வீரபாண்டியனை வெல்ல வேண்டி கில்ஜி பேரரசின் மன்னன் மாலிக்காபூரிடம் உதவியை நாடினான். இரண்டாம் வீரபாண்டியனை வெற்றி கொண்ட மாலிக்காபூர் சுந்தரபாண்டியனையும் சேர்த்தே அடிமைப்படுத்தினான். சகோதரச் சண்டையால் பாண்டிய நாட்டில் முகமதியர் ஆட்சி ஏற்பட்டது.
இபின்பதூதா என்பவரின் குறிப்பின் படி முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டில் உள்நாட்டுக் குழப்பங்கள், கலகங்கள் ஏற்பட்டன. கோயில் வழிபாடு, விழா இன்றி சீரழிந்தன. பாண்டிய நாட்டு மக்கள் மிகவும் துன்புற்றனர் என இபின்பதூதா தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
மாறவர்மன் விக்கிரம பாண்டியன்
கி.பி.1268ம் ஆண்டு முதல் கி.பி.1281ம் ஆண்டு வரை முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகனான இவன் தந்தைக்குத் துணையாய் ஆட்சி புரிந்தான் என திருவெண்ணெய் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது. இவனது மெய்க்கீர்த்திகள் ‘திருமகள் செயமகள்’, ‘திருமலர் மாது’ எனத் தொடங்கும். இவன் கல்வெட்டுக்கள் செங்கற்பட்டு, தென்னார்க்காடு போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
சடையவர்மன் சுந்தரபாண்டியன்
சடையவர்மன் சுந்தரபாண்டியன் கி.பி. 1276ம் ஆண்டு முதல் கி.பி.1293 வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் ஆட்சிக்குத் துணையிருந்த இவன் கருவூரைத் தலைநகராகக்கொண்டு கொங்கு நாட்டை ஆட்சிசெய்தான். சேலம், கடப்பை, தென்னார்க்காடு ஆகிய பகுதிகள் இவன் ஆட்சியின் கீழ் இருந்தது. மணப்பாறை அருகில் பொன்முச்சந்தி என்ற இடத்தில் அமைந்துள்ள கோவிலில்உள்ள கல்வெட்டில் இவன் கோவிலுக்கு நிலங்களை பரிசாக வழங்கியது குறிப்பிடப்பட்டுள்ளது