தென்காசிப் பாண்டியர்கள்
பதினான்காம் நூற்றாண்டு முதல் தமிழ்நாட்டில் ஏற்பட்ட முகலாய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள் மற்றும் நாயக்க மன்னர்களின் தொடர் படையெடுப்புகளால் பாண்டிய மன்னர்கள் தங்கள் பூர்விக நிலங்களை மற்றும் பரம்பரை தலைநகரான மதுரையை இழந்தனர். மேலும் பேரரசர்களாக விளங்கிய பாண்டிய மன்னர்கள் சிற்றரசாக சுருங்கி தென்காசி, திருநெல்வேலி மற்றும் தமிழ்நாட்டின் தென் பகுதிகளை ஆண்டுவந்தனர். இவற்றில் சில பாண்டிய மன்னர்கள் நெல்லையை தலைநகராகவும் வேறு சில பாண்டிய மன்னர்கள் தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தனர். பாண்டியர்களின் கடைசித் தலைநகரம் தென்காசி ஆகும். இப்படி தென்காசியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தமையால் இவர்கள் தென்காசிப் பாண்டியர்கள் என்று அறியப்படுகிறார்கள்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன்
தென்காசிப் பாண்டியர்களில் முதல் பாண்டிய மன்னன் சடையவர்மன் பராக்கிரம பாண்டியன். சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1422ம் ஆண்டு முதல் கி.பி.1463ம் ஆண்டு வரை பாண்டிய நடை ஆட்சி.சிற்றரசனான சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் தன்னால் தனித்து தென்காசி பெரிய கோவிலை கட்டி முடிக்க இயலாது என்று உணர்ந்தவுடன், இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும் அதற்கு உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்படி இக்கோவிலுக்கு வரும் பக்தர்களின் காணிக்கையை ஏற்று அவர்களின் பாதம் வணங்குவேன் என்றான். கொடுத்த வாக்கை வாக்கை காப்பாற்றுவதற்காக தன் உருவத்தை கோயிலின் வாசலிலேயே செதுக்கினார் சடைவர்மன் பராக்கிரம பாண்டியன்.
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன்
மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1429ம் ஆண்டு முதல் கி.பி.1473ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்தான். இவன் சடையவர்மன் பராக்கிர பாண்டியனின் தம்பியாவன். இவன் தனது முத்த சகோதரனின் ஆட்சிக் காலத்தில் நிறைவு செய்யப்படாத தென்காசி பெரிய கோவில் நிலைக் கோபுரப் பணிகளினை நிறைவு செய்யததாக தென்காசிக் கோயில் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன்
அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் கி.பி. 1473ம் ஆண்டு முதல் கி.பி.1506ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டில் ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் மூன்றாம் சடையவர்மன் குலசேகர பாண்டியனின் மகன் ஆவான். இவனுக்கு அபிராமபராக்கிரம பாண்டியன்,ஆகவராமன் என இரு தம்பிகள் இருந்ததாக புதுக்கோட்டை செப்பேடு கூறுகிறது. இவன் ஆட்சிகாலத்திலேயே குலசேகர பாண்டியனும் கி.பி. 1479ம் ஆண்டு முதல் கி.பி.1499ம் ஆண்டு வரை ஆட்சி செய்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சடையவர்மன் சீவல்லப பாண்டியன்
சடையவர்மன் சீவல்லப பாண்டியன் கி.பி. 1534ம் ஆண்டு முதல் கி.பி.1543ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்த மன்னனாவான். இவன் ஆகவராமனின் மகனாவான். திருவாங்கூர் நாட்டின் மன்னன் உதயமார்த்தாண்டவர்மன் தென்பாண்டிய நாட்டினை கைப்பற்றினான். தென்பாண்டி நாட்டினை சேர மன்னனிடம் தோற்ற சடையவர்மன் சீவல்லப பாண்டியன் விஜயநகரப் பேரரசனான அச்சுததேவராயரிடம் உதவி கேட்டான். அச்சுததேவராயர் தென்பாண்டிய நாட்டினை உதயமார்த்தாண்டவர்மனிடம் இருந்து மீட்டுக்கொடுத்தார். போரின் முடிவில் சடையவர்மன் சீவல்லப பாண்டியன் தனது மகளை அச்சுததேவராயனுக்கு மணம் முடித்து வைத்தான்.
பராக்கிரம குலசேகரன்
கி.பி. 1543ம் ஆண்டு முதல் கி.பி.1552ம் ஆண்டு வரை பராக்கிரம குலசேகரன் என்ற மன்னன் பாண்டிய நாட்டிடை ஆட்சி செய்தான்.அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் முதல் மகனான இவன் தனது தந்தையின் ஆட்சிக்குத் துணையாக இருந்தான் என்பது தெரிகிறது.
நெல்வேலி மாறன்
நெல்வேலி மாறன் கி.பி. 1552ம் ஆண்டு முதல் கி.பி.1564ம் ஆண்டு வரை பாண்டிய நாட்டை ஆட்சிசெய்தான். இவன் அழகம் பெருமாள் பராக்கிரம பாண்டியனின் இரண்டாம் மகன் ஆவான். இம்மன்னனது கல்வெட்டுக்கள் தென்காசியில் உள்ளது.
சடையவர்மன் அதிவீரராம பாண்டியர்
சடையவர்மன் அதிவீரராம பாண்டியர் தென்காசிப் பாண்டிய மன்னர்களுள் ஒருவர். கி.பி. 1564ம் ஆண்டு முதல் கி.பி. 1604ம் ஆண்டு வரை ஏறக்குறைய 40 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான். சடையவர்மன் அதிவீரராம பாண்டியர் திறமையான தமிழ்ப் புலவராகவும் விளங்கினார். வடமொழியிலும், தமிழிலும் உள்ள நளன் கதை கூறும் நூல்களைத் தழுவி நைடதம் என்னும் நூலை இவர் இயற்றினார். மேலும் நீதிகளை எடுத்துக் கூறும் வெற்றி வேற்கை என்னும் நூலையும், காசி காண்டம், கூர்ம புராணம், மாக புராணம் ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். கொக்கோகம் எனப்படும் காமநூலையும் தமிழில் இயற்றியுள்ளார். மிகுந்த இறை பக்தி கொண்டவரான இவர், பல கோயில்களையும் கட்டுவித்துள்ளார். தென்காசியில் இருக்கும் சிவன்கோயில் ஒன்றும் விஷ்ணு கோயில் ஒன்றும் இவற்றுள் அடங்குவனவாகும். இவருக்குச் சீவலமாறன் என்னும் பெயர் உண்டு என்பதை 16 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புலவர் சிதம்பரநாத கவி என்பவர் இவரைப்பற்றி இயற்றிய சீவலமாறன் கதை என்னும் நூலால் அறியமுடிகிறது.
வரதுங்கராமர்
பாண்டிய நாட்டை கி.பி. 1588ம் ஆண்டு முதல் கி.பி. 1612ம் ஆண்டு வரை வரதுங்கராமர் என்னும் பாண்டிய மன்னன் ஆட்சி புரிந்தான். இவன் நெல்வேலி மாறனின் இரண்டாவது மகனுன். சடையவர்மன் அதி வீரராம பாண்டியன் காலத்தில் நல்லூரில் இருந்து ஆட்சி புரிந்த வரதுங்கப் பாண்டியன் ‘வில்லவனை வென்றான்,வல்லம் எறிந்தான்” எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவனும் சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் போல் தமிழில் புலமை பெற்றிருந்தான்.பிரமோத்தர காண்டம்,கருவை கலித்துறை அந்தாதி,கருவை பதிற்றுப்பத்தந்தாதி,கருவை வெண்பா அந்தாதி, கொக்கோகம் ஆகிய நூல்களினைப் பாடியுள்ளான். இவன் சிவனிடம் மிகுந்த பக்தி உடையவனாகத் திகழ்ந்தான்.
வரகுணராம பாண்டியன்
கி.பி. 1613ம் ஆண்டு முதல் கி.பி. 1618ம் ஆண்டு வரை வரகுணராம பாண்டியன் பாண்டிய நாட்டை ஆட்சிசெய்தான். வேத விதிப்படி வேள்விகளைச் செய்த காரணத்தினால் குலசேகர சோமாசிரியார் என்ற சிறப்புப்பெயரைப் பெற்றான். வரகுணராம பாண்டியன் காலத்து பாண்டிய மன்னர்கள் அனைவரும் விஜயநகரப் பேரரசிற்குக் கீழ் சிற்றரசர்களாக இருந்தனர். மற்றும் விஜயநகரப் பேரரசிற்குக் கப்பம் செலுத்தி வந்தனர்.
கொல்லங்கொண்டான்
கொல்லங்கொண்டான் தென்காசிப் பாண்டியர்களில் மற்றும் ஒரு மன்னனாவான்.சேர நாட்டின் மீது படையெடுத்துச் சென்று கொல்லத்தையும் அடங சுற்றுப்புற பகுதிகளையும் வென்றதால் ‘கொல்லங்கொண்ட பாண்டியன்’ என அழைக்கப்பட்டான். திநெல்வேலி சேர மாதேவி கல்வெட்டு வாயிலாக இந்தத் தகவலை நாம் அறியமுடிகிறது.
மேலும் இவன் மலை நாடு, சோழ நாடு, இரு கொங்கு நாடுகள், ஈழ நாடு, தொண்டை நாடு ஆகியவற்றையும் வென்றான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப்பற்றிய கல்வெட்டுக்களை காணமுடிகிறது. போரில் வெற்றி பெற்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு நெல்லைக் கோயில் திருச்சுற்று மாளிகையினை கட்டினான். தற்போது இம்மன்னனின் அரண்மனை சிதிலமடைந்த நிலையில் ராஜபாளையதில் உள்ளது.