சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் என்பவன் சேர நாட்டை ஆண்ட சங்க காலச் சேர மன்னர்களில் ஒருவன். இவன் கி.பி.1ம் நூற்றாண்டில் குட்ட நாட்டின் மன்னனாக ஆண்டவன் என்பது தெரிகிறது. இன்றைய தமிழகத்தின் கொங்கு நாட்டுப்பகுதி, குட்டநாடு மற்றும் பாண்டிய நாட்டின் தென்பகுதியில் உள்ள ஆய்நாடு, வேணாடு ஆகியவற்றை உள்ளடக்கியதே சேர நாடாகும்.
குட்டநாடு
குட்டநாடு தற்போதைய ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கியது. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. குட்ட நாட்டுப் பகுதியில் ஆண்டு முழுவதும் வேளாண்மைத் தொழில் நடைபெறுவதால், இதை கேரளாவின் அரிசிக்கிண்ணம் என்ற சிறப்புப் பெயரைப் பெற்றுள்ளது. குட்ட நாடு இந்தியாவிலேயே கடல் மட்டத்திலிருந்து குறைவான உயரம் கொண்ட பகுதி. கடல்மட்டத்திற்குக் கீழ் இருந்தும் உழவு செய்யப்படும் உலகின் மிகச்சில பகுதிகளிலும் குட்டநாடும் ஒன்று.
தலைநகரம்
சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் திருவஞ்சைக்களம் என்னும் கொடுங்கோளூரைத் தலைநகராகக் கொண்டு குட்ட நாட்டை ஆண்டுவந்திருக்கலாம் என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மேலும் இவன் மனைவியின் பெயர் நல்லினி எனவும் அவள் வெளியன் வேண்மாண் என்பவனின் மகள் எனவும் அறிய முடிகிறது. சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனுக்கு இரண்டு மகன்கள். அவர்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மற்றும் பல்யானைச் செல்கெழு குட்டுவான் ஆவர்.
அகநானூறு
அகநானூற்றில் சங்ககாலப் புலவர் மாமூலர் 65வது பாடலில் “நடுகண் அகற்றிய உதியசேரல்” என்று கூறியிருப்பதால் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன் தன் நாட்டின் எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளான் என்பதை அறிந்துகொள்ளமுடிகிறது. அகநானூற்றில் வரும் 233ம் பாடலில் வரும் “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்” என்ற வரிகளின் வாயிலாக இவன் முதியோர்களைப் பேணினான் என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது. மேலும் பொதிய மலையும், இமய மலையும் போல இவன் நிலைபெற்று வாழவேண்டும் என வாழ்த்துகிறார்.
ஐவரும், நூற்றுவரும் போரிட்டுக்கொண்டபோது இவன் இருபாலாருக்கும் பெருஞ்சோறு வழங்கியதாகப் புலவர் முரஞ்சியூர் முடிநாகராயர் குறிப்பிடுகிறார். சிலப்பதிகாரம், ஓரைவர் ஈரைம்பதின்மர் போரில் பெருஞ்சோறு அளித்த சேரன் பொறையன் மலையன் என்று இவனைச் பற்றிக் கூறுகிறது.
ஆட்சி காலம்
இவன் ஆட்சிசெய்த காலம் குறித்து சரித்திர ஆராய்ச்சியாளர்களிடம் வேறுபட்ட கருத்து நிலவுகிறது.
சில ஆராய்ச்சியாளர்கள் இவன் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த செயலை மகாபாரதத்தோடு தொடர்புபடுத்தி இவன் ஆண்ட காலத்தை கி.மு.3102ம் ஆண்டாக இருக்கும் என்று கருதுகின்றனர். வேறு சில ஆராய்ச்சியாளர்கள் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்ததை சாதவாகனரோடு தொடர்ப்புபடுத்தி இவனின் ஆட்சிகாலத்தை கி.மு. 200ம் ஆண்டுக்குப் பின்னால்தான் என்று கூறுகின்றனர்.வேறு சிலர் ஐவர் மற்றும் நூற்றுவருக்கு சோறு கொடுத்த பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனும், பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்படும் உதியஞ்சேரலாதனும் வேறு வேறு மன்னர்கள் என்று கருதுகின்றனர்.
Comments