சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதனுக்குப் பிறகு அவன் மகன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டின் மன்னனாகப் படவியேற்றான். இவன் தாயின் பெயர் வெளியத்து வேண்மாளான நல்லினி என்பதாகும். சேரமன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயமலை வரையில் படையெடுத்துச் சென்று பல மன்னர்களை போரில் வென்றவன் என்ற பொருளில் இமயவரம்பன் என்ற பட்டப்பெயரைப் பெற்றான்.
சங்க காலத்து இலக்கியமான பதிற்றுப்பத்தில் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் பற்றிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன. குமட்டூர் கண்ணனார் என்ற புலவர் பாடிய இரண்டாம் பத்துப் பாடல்கள் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனைக் குறித்துப் பாடப்பட்டவை.
போர்கள்
வட நாட்டுப் போர்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் சேர நாட்டை ஆண்டுவந்த காலமும், வட இந்தியாவில், நந்த மன்னர்களின் வலிமை குன்றி சந்திர குப்த மௌரியரின் தலைமையில் மௌரியப் பேரரசு வலுவடைந்து வந்த காலமும் ஒன்றாக இருக்கவேண்டும் என சரித்திர ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகிறது.
இந்தக் காலகட்டத்திலேதான் சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கில் படை எடுத்துச் சென்று இமயமலை வரையிலும் உள்ள பல மன்னர்களை போரிட்டு வென்றதாக தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வட நாட்டு மன்னர்களை போரில் வென்று சிறைபிடித்ததாக சங்க இலக்கியமான பதிற்றுப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இமயவரம்பன் என்ற பட்டப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இதற்குப் போதிய வரலாற்றுச் சான்றுகள் இல்லை என்பதால் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் பலர் இதனை ஏற்றுக்கொள்வதில்லை. அதேசமயத்தில், நந்த மன்னர்களுக்கும் மௌரியர்களுக்குமான போரில் சேரர்கள் நந்த மன்னர்களுக்கு உதவியாகப் படைகளை அனுப்பியிருக்கக்கூடும் என சில ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
கடம்பர்கள்
கடம்பர்கள் சேரநாட்டின் வட எல்லைப் பகுதியில் கடம்பின் பெருவாயில் பகுதியில் வாழ்ந்துவந்தனர். இவர்கள் பிற்காலத்தில் கதம்பர் என்ற பெயரில் தலைதூக்கிய மக்களின் முன்னோடிகள் என்று ஆராய்ச்சியாளர்களால் கருதப்படுகின்றனர். கடம்பர்களின் பரம்பரை, கடம்பு மரத்தைச் சின்னமாகக்கொண்டு கடலாட்சியில் ஈடுபட்டனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான பதிற்றுப்பத்தில், கடம்பர்கள் ஆரம்ப காலங்களில் கடலாட்சி செய்த இனத்தவர்கள் என குறிப்புகள் உள்ளன.
கப்பல்களை நிர்மாணிப்பதிலும், செலுத்துவதிலும் மற்றும் கடல் போரிலும் கடம்பர்கள் திறமையும் வலிமையையும் பெற்றவர்கள். கடம்பர்கள் கடல் கொள்ளைக்காரர்களாக விளங்கினர். வெள்ளைத் தீவை மையமாகக் கொண்டு கடம்பர்கள் கடல் கொள்ளையில் ஈடுபட்டனர். மேற்கு திசை நாடுகளிலிருந்து வரும் கப்பல்களைக் கடம்பர்கள் கொள்ளையிட்டு வந்த காரணத்தினால் சங்ககால இலக்கியங்களில் இவர்கள் கடற் கடம்பர் என குறிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய இலட்சத் தீவு எனும் தீவுக்கூட்டமே அப்போதைய வெள்ளைத் தீவாகும். சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன், இந்த கடம்பர்களை போரிட்டு வென்றான். அவர்களது கடம்பு மரத்தைக் கொண்டு வந்து அந்த மரத்தால் தனக்குப் போர்முரசு செய்துகொண்டான்.
நெடுஞ்சேரலாதன் மற்ற குறிப்புக்கள்
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தமிழகம் முழுவதும் ஆண்டான். யவனர்களின் செல்வத்தைக் கைப்பற்றினான். தமிழகத்துடன் கடல் வழியாக கப்பலில் வந்து வாணிபம் செய்த கிரேக்கர்களையும் பின்னர் வாணிபம் செய்ய வந்த ரோமானியர்களையும் சங்க இலகியங்கள் யவனர்கள் என்று குறிப்பிடுகின்றன. கைது செய்யப்பட்ட யவனர்களின் தலையில் நெய் ஊற்றி நெய் வழிய வழிய அவர்களை ஊர்வலமாக இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இழுத்துவந்தான். இது சங்க காலத்தில் தமிழகத்தில் இருந்த தண்டனை முறைகளில் ஒன்று.
இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் தன் எதிரிகள் அனைவரையும் வென்றான். போர் புரியும்போது மார்பில் சந்தனம் அணிந்திருந்தான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் மிகச்சிறந்த கொடைவள்ளல்.போர் களத்திலேயே நெடும் காலம் வாழ்ந்தான். சேர மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்குப் பின்னர் அவன் தம்பி பல்யானைச் செல்கெழு குட்டுவன் சேர நாட்டிற்கு மன்னனாகப் பதவியேற்றான்.
Superb website. Thanks a lot. Thank You for the precious information.