சேரன் செங்குட்டுவன்

சங்க காலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்கள் பரம்பரையில் ஒன்றான சேரர் பரம்பரையின் வரிசையில் வந்த மன்னர்களில் ஒருவன் சேரன் செங்குட்டுவன். இவன் சேரநாட்டை ஆண்ட புழ்பெற்ற மன்னர்களில் ஒருவன் ஆவான். சேரன் செங்குட்டுவன் கி.பி. முதலாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் சேரநாட்டை ஆண்டதாகக் கருதப்படும் சேரலாதன் என்னும் மன்னனுக்கும், அவன் பட்டத்து அரசியான சோழ நாட்டு இளவரசி மணக்கிள்ளிக்கும் பிறந்த மகன். பதிற்றுப்பத்து, பதிகம் இவனது தாயின் தந்தை பெயரை ஞாயிற்றுச் சோழன் எனக் குறிப்பிடுவதன் வாயிலாக இந்தத் தகவலை நாம் உறுதிசெய்ய முடிகிறது. சிலப்பதிகாரம் இவன் தாயின் பெயரை சோழன் மணக்கிள்ளி என்று குறிப்பிடுகிறது. மணக்கிள்ளி என்னும் தாயின் பெயரை ‘நற்சோணை’ என அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சேரநாடு மிகவும் பலம் இழந்து பெருமை குன்றியிருந்த நேரத்தில் அதன் அரசுப் பொறுப்பை ஏற்ற செங்குட்டுவன் அதனை மீண்டும் ஒரு வலிமை மிக்க நாடாக்கினான்.

ஆட்சி காலம்

வரலாற்றுக் குறிப்பு

சேரன் செங்குட்டுவன் சிலப்பதிகாரக் காப்பியத் தலைவியான கண்ணகிக்குச் சிலை எடுத்தபோது இலங்கையின் மன்னன் முதலாம் கயவாகு சேரநாட்டுக்கு வந்ததாகவும், அவன் பத்தினி (கண்ணகி) வணக்கத்தை இலங்கையில் பரப்பியதாகவும் வரலாற்றுக் குறிப்புகள் உள்ளது. இதன் வாயிலாக சேரன் செங்குட்டுவன் இலங்கை மன்னன் முதலாம் கயவாகு வாழ்ந்த காலத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிகிறது.

மகாவம்சம்

மன்னன் முதலாம் கயவாகு கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மன்னன் என்பது இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் போன்ற நூல்களில் இருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இந்தத் தகவலின் வாயிலாக சேரன் செங்குட்டுவனின் ஆட்சி காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு என்று கணிக்க முடிகிறது. மேலும் சாதவாகன மன்னன் சிறீசதகர்ணியும் சேரன் செங்குட்டுவனுக்கு சம காலத்தில் வாழ்ந்தவனே.

மாற்றுக்கருத்து

சங்க கால புலவர் மாமூலனார் கி.மு 4 ஆம் நூற்றாண்டில் மகத நாட்டை ஆண்ட நந்த மன்னர்கள் பற்றியும் மற்றும் அவர்களுக்கு பிறகு மகத நாட்டை ஆண்ட மௌரிய மன்னர்களின் தமிழகதின் மீதான படையெடுப்பு பற்றியும் கூறியுள்ளார். மாமூலனார் முதிய வயதில் சோழன் கரிகால சோழன் பற்றி பாடியுள்ளார்.

மற்றும் ஒரு சங்கத் புலவர் பரணர் தன் இள வயதில் கரிகால சோழன் பற்றி பாடியுள்ளார். சேரர்களுக்கும் சோழர்களுடன் ஏற்பட்ட போரில் கரிகால சோழன் எய்த அம்பினால் மார்பிலிருந்து பின் முதுகு வரை துளைக்கப்பட்ட சேரமான் பெருஞ்சேரலாதன், இது தனக்கு ஏற்பட்ட பெரும் அவமானம் எனக் கருதி வடக்கிருந்து உயிர் துறந்தார். இதை புறநானுற்றுப் பாடல் ஒன்று விவரிக்கிறது.
“மண்முழா மறப்ப, பண்யாழ் மறப்ப
இருங்கட் குழிசி அவிழ்ந்து இழுது மறப்ப,
சுரும்பார் தேறல் சுற்றம் மறப்ப,
புறப்புண் நாணி, மறத்தகை மன்னன்
வாள் வடக்கிருந்தனன்…..”
(புறம்- 65)

சேரமான் பெருஞ்சேரலாதன் இறந்த பிறகு சில காலம் கழித்து சேர மன்னனாக பதவி ஏறுபவன் சேரன் செங்குட்டுவன். புலவர் பரணர் சேரன் செங்குட்டுவன் பற்றி பாடியுள்ளார். இதன் வாயிலாக கரிகால சோழன் சேரனை விட சில வருடம் மூத்தவன் என்பது தெளிவாகிறது. ஆதலால் சேரன் செங்குட்டுவன் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு ஆகும்.

கண்ணகிக் கோயில்

தமிழ் இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரதின் வஞ்சிக் காண்டத்தில் சேரன் செங்குட்டுவன் பற்றிய பல தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. தமிழ்ப் புலவர் சீத்தலை சாத்தனார் மூலம் கண்ணகியின் கதையைக் கேட்டறிந்த மன்னன் சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்குச் சிலை எடுத்துக் கோயில் அமைக்க எண்ணினான்.

கனகன், விஜயன்

கனகன், விஜயன் என்னும் இரு இமயமலைச் சாரலில் ஆண்ட மன்னர்களை ஆரிய அண்ணல் என்று பதிற்றுப்பத்துப் பதிகம் குறிப்பிடுகிறது. இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இமயத்தில் வில் பொறித்தபோது தம் போன்ற மன்னர் அங்கு இல்லை என்று ஆரிய அண்ணல் கனகனும், விஜயன் தம்பட்டம் அடித்துக்கொண்டதாகவும் மேலும் தமிழ் மன்னர்களை அவதூறு பேசியதாகவும் சிலப்பதிகாரம் கூறுகிறது.

பொதிய மலையில் இருந்து கல்லெடுத்துக் காவிரி ஆற்றில் நீர்ப்படுத்துவது தனது வீரத்துக்கும் பராக்ரமத்திற்கும் சான்றாகாது என்று எண்ணிய சேரன் செங்குட்டுவன், தமிழ் மன்னர்களை அவதூறாகப் பேசிய வடநாட்டு மன்னர்கள் கனகன் மற்றும் விஜயனை வென்று இமய மலையில் இருந்து அவர்கள் தலையிலேயே கற்களைச் சுமந்து வரச்செய்து கங்கை ஆற்றில் நீர்ப்படுத்திச் சேரநாட்டு இடும்பில்பறம் என்னுமிடத்துக்குக் கொண்டுவந்து கண்ணகியின் சிலை வடித்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

மேலும் மாடலன் என்னும் மறையோனின் அறிவுரைகளைக் கேட்டு சினம் தணிந்த சேரன் செங்குட்டுவன் வடநாட்டு மன்னர்கள் கனகன் மற்றும் விஜயனை சிறையிலிருந்து விடுவித்தான் என்றும் தெரிகிறது. கண்ணகிக்குக் கோயில் எடுத்த விழாவில் வடநாட்டு மன்னர்கள் கனகன் மற்றும் விஜயன், இலங்கை மன்னன், மாழுவ மன்னன், குடகக் கொங்கர் முதலானோர் கலந்து கொண்டனர் என்பதும் சிலப்பதிகாரம் தரும் தகவல்கள்.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *