ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் பண்டைத் தமிழகத்தின் மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேர மரபைச் சேர்ந்த மன்னன் ஆவான். சங்கத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஆறாவது பத்து இவன் மீது பாடப்பட்டது. காக்கை பாடினியார் நச்செள்ளையார் என்னும் பெண் புலவர் இந்தப் பதிகத்தைப் பாடியுள்ளார். சேர மன்னர் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், வேளாவிக்கோமான் மகளுக்கும் இவன் மகனாகப் பிறந்தான். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அன்பு, அறம், அருள் ஆகிய நற்பண்புகள் உடையவனாக 38 ஆண்டுகள் நல்லாட்சி நடத்தி வந்தான் என்பதை அறிய முடிகிறது.

பெயர்க்காரணம்

ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்

தண்டாரணியம் பகுதியில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து குடிமக்களுக்கு வழங்கச் செய்தான். இதனால் இந்தச் சேரலாதனை, ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் என வழங்கினர்.

வானவரம்பன்

பார்ப்பார்க்கு கபிலை எனப்படும் பசுமாடுகளையும் வழங்கினான். இவன் தந்தை ஆண்ட குடநாட்டில் ஓர் ஊரையும் சேர்த்து அவர்களுக்கு வழங்கினான். இவ்வாறு பார்ப்பார்க்கு வழங்கியதால் வானவரம்பன் என்ற பெயர் பெற்றான். போர் வீரர்களுக்குக் கவசம் போல் விளங்கியதாலும் இவனை ‘வானவரம்பன்’ என்றனர்

பதிற்றுப்பத்தின் தரும் தகவல்கள்

*ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் தலைநகர் நறவு என்னும் ஊர்
*போரிட்டு மழவர் வலிமையைக் குன்றும்படி செய்தான், மழவர் எண்ணிக்கையை குறைத்தான்.
*குழந்தையைப் பேணுவது போல நாட்டுமக்களைப் பாதுகாத்தான்
*இவனது நாட்டுப் பரப்பு கீழைக்கடலையும் மேலைக்கடலையும் தொட்டது
*மனைவியைப் பிரிந்து நெடுங்காலம் போரில் ஈடுபட்டிருந்தான்
*இவனை புலவர்களும் மக்களும் வள்ளல் எனப் புகழ்ந்தனர்
*இவனது செல்வம் பந்தர் என்னும் ஊரில் பாதுகாக்கப்பட்டிருந்தது

பதிற்றுப்பத்து பதிகம்

குடக்கோ நெடுஞ்சேர லாதற்கு வேஎள்
ஆவிக் கோமான் தேவி ஈன்றமகன்
தண்டாரணியத்துக் கோள்பட்ட வருடையைத்
தொண்டியுள் தந்து கொடுப்பித்துப் பார்ப்பார்க்குக்
கபிலையொடு குடநாட்(டு) ஓரூர் ஈத்து 5
வான வரம்பன்எனப் பேர்இனிது விளக்கி
ஏனை மழவரைச் செருவின் சுருக்கி
மன்னரை ஓட்டிக்
குழவிகொள் வா஡஢ன் குடிபுறந் தந்து
நாடல் சான்ற நயன்உடை நெஞ்சின் 10
ஆடுகோட் பாட்டுச் சேரலாதனை
யாத்த செய்யுள் அடங்கிய கொள்கைக்
காக்கைபாடினியார் நச்செள்ளையார்
பாடினார் பத்துப் பாட்டு.

பதிகதின் விளக்கம்

*இந்தப் பத்துப் பாடல்களைப் பாடியவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்னும் சங்ககாலத்தைச் சேர்ந்த பெண் புலவர்.

*தண்டாரணியம் என்னும் தென்னிந்தியக் காட்டில் பிடிபட்ட வருடை ஆடுகளைத் தன் தலைநகர் தொண்டி நகருக்குக் கொண்டுவந்து தன் நாட்டு மக்களுக்குக் கொடுத்தான்.

*பார்ப்பார்க்குப் பசுமாடும், ஊரும் தந்து ‘வானவரம்பன்’ என்று பெயர் பெற்றான்.

*போரிட்டு மழவரை வென்று அவர்களின் எண்ணிக்கையைச் சுருக்கினான்.

*குழந்தையைப் பேணுவது போலத் தன் குடிமக்களைப் பாதுகாத்தான்.

பரிசில்

இந்தத் பாடலை பாடியதற்குப் பரிசாக காக்கை பாடினியார் நச்செள்ளையார்க்கு ஒன்பது காப் பொன்னும் நூறாயிரம் காணமும் (அக்காலச் சேரர்-காசு) ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் கொடுத்தான். மேலும் புலவர் காக்கை பாடினியார் நச்செள்ளையாரை தன் அவைக்களப் புலவராக ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் அமர்த்திக்கொண்டான்.

About the author

Leave a Reply

Your email address will not be published.