சேரமான் மாரிவெண்கோ கடைச்சங்க காலத்தை சேர மன்னர்களில் ஒருவன். சேரமான் மாரிவெண்கோ கி.பி. 184ம் ஆண்டு முதல் கி.பி.194ம் ஆண்டு வரையில் சேர நாட்டை ஆண்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது. சங்க காலத் தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே சேரமான் மாரிவெண்கோ காலத்தில் மட்டும்தான் மூவேந்தர்களாகிய சேர சோழ மற்றும் பாண்டிய மன்னர்கள் மூவரும் நண்பர்களாக ஒன்று கூடியிருந்ததைக் காணமுடிகிறது.
வேள்பாரி
இதற்குக் காரணம் பாரி என்னும் குறுநில மன்னனாக இருக்கக் கூடும். பாரி என்றழைக்கப்படும் வேள்பாரி பறம்பு மலையை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னன் ஆவான். வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என அழைக்கப்பட்டான். பறம்புமலை, பிறம்பு மலை என்றாகி இப்பொழுது ‘பிரான்மலை’ என்று அழைக்கப்படுகிறது. பாரியின் ஆட்சிக்குட்பட்ட பகுதியில் மொத்தம் 300 கிராமங்களே இருந்தன. அப்படி இருந்த போதிலும் அவர் மூவேந்தர்களை விட பெரும் புகழ் பெறக்காரணம் அவரது கொடைத்தன்மையே. இவர் கடையேழு வள்ளல்களில் ஒருவராகச் சங்க இலக்கியத்தில் போற்றப்படுபவர். புலவர் கபிலர் பாரியின் நண்பர்.
மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்கு வேள்பாரியின் புகழ் தென்னகம் முழுவதும் பரவி இருந்தது.வள்ளல்கள் எல்லாரையும் விட உயர்ந்தவனாகப் பாரியைத் தமிழ்ச்சான்றோர்கள் போற்றக் காரணம், படர்வதற்குக் கொம்பின்றித் தவித்த முல்லைக்கொடிக்குத் தான் ஏறி வந்த தேரினை தந்த செயலே ஆகும். பாரி மூவேந்தரால் வஞ்சித்துக் கொல்லப்பட்டார்.
ஔவையார்
புலவர் ஔவையார் சேரமான் மாரிவெண்கோ, பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி ஆகிய மூவரும் ஒருங்கு ஓரிடத்தில் கூடியிருக்கக் கண்டு வாழ்த்துகிறார். ஞாயிறு, திங்கள், தீ இவற்றின் ஒளிகளை ஒருசேரக் காண முடியாது. சோழன் சூரியகுலம், பாண்டியன் சந்திர-குலம், சேரன் அக்கினிக்குலம் ஆகிய மூன்று குலத்தில் தோன்றிய மன்னர்களை ஒரே இடத்தில் ஒற்றுமையாய் கண்ட புலவர் ஔவையார் அவர்களை வாழ்த்திப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் சங்ககால இலக்கிய நூலான புறநானுறு நூலில் இடம்பெற்றுள்ளது.
பாடல்
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவே ஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர் ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!
யான் அறி அளவையோ இதுவே: வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்,
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே!
(புறம்-367)
விளக்கம்
மூவேந்தரும் ஒன்று சேர்ந்திருந்த காட்சியைக் கண்டு ஔவையார் இவ்வாறு வாழ்த்துகிறார். அந்தணர் மூன்று முத்தீ வளர்ப்பார்கள். சமையல் தீ, வேள்வித் தீ, விளக்குத் தீ. இந்த மூன்றும் ஒரே இடத்தில இருப்பதுபோல் மூன்று வேந்தர்களும் ஒரே இடத்தில் உள்ளீர்கள். வெற்றி நிழல் தரும் வெண்கொற்றக் குடை உடையவர்கள் நீங்கள். வானத்து நட்சத்திரத்தின் எண்ணிக்கையைக் காட்டிலும் உங்களது ஆயுட்காலம் பெருக வேண்டும். பொழியும் மழையில் உள்ள நீர்த்துளிகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் உங்களது ஆயுட்காலம் பெருகவேண்டும். சூரியனும் சந்திரனும் இவுலகில் உண்டென்றாலும் இரண்டும் இணைந்து செல்வதில்லை. ஆனால் நீங்கள் மூவரும் இணைந்து காட்சி தருகிறீர்கள். இது பெரும்பேறு.
இந்த நிலம் ஆளும் உங்களுடையது என்றாலும், கையேந்தி நிற்கும் அந்தணர்க்கு பூவும் பொன்னும் நீர் ஊற்றித் தாரை வார்த்து வழங்க வேண்டும். மகளிர் பொன்-கிண்ணத்தில் தரும் தேறலைப் பருகவேண்டும். இரவலர்களுக்கும் பொன்னாலான அணிகலன்களை வழங்கவேண்டும். தனக்கென வைத்துக்கொள்ளாமல் யாவர்க்கும் வழங்கவேண்டும். உங்களுக்கு வழங்கப்பட்ட வாழ்நாள் எல்லாம் வழங்கவேண்டும். இவ்வாறு வாழ்ந்து உங்கள் வாழ்நாள் பெருகவேண்டும். பிறரை வாழச்செய்வதுதான் நல்வினை. இந்த நல்வினை உங்களை ஏற்றிச் செல்லும் மிதவையாக உதவும். வாழ்க்கைத் துன்பத்தில் மூழ்கும்போது உதவும். இந்த நல்வினை போல வாழ்க்கைக்கு இன்பம் தந்து உதவக்கூடியது வேறு ஒன்றும் இல்லை.
Comments