சங்க இலக்கிய நூலான பதிற்றுப்பத்து ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் சேர மன்னன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனின் தந்தையே இங்கு குறிப்பிடப்பட்டுள்ள அந்துவன் அல்லது சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை. சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையின் மனைவி ‘பொறையன் பெருந்தேவி’. இவளது இயற் பெயர் தெரியவில்லை. எனவே இவளை இந்தப் பொறையனின் பெருந்தேவி என்றே குறிப்பிட்டுள்ளனர்.
பொறையன்
அந்துவஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த பொறையநாட்டின் ஆட்சியாளர்கள் வழி வந்தவன். இரும்பொறை என்னும் மரபைத் தொடக்கி வைத்தவன் இவனே. இவனது வழி வந்தவர்களே இரும்பொறை அல்லது பொறையன் என அழைக்கப்பட்டார்கள். இவன் சேர நாட்டு அரசுரிமை பெறுவதற்கான மரபுவழி வந்தவனாக இல்லாது இருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. எனினும் சேர மன்னர்களின் உதியன் மரபுவழி அற்றுப்போனதாலும், இவனது புதல்வர்களுக்கு, அவர்களது தாய்வழியாக பொறையநாட்டு வாரிசுரிமை கிடைத்ததாலும் இவர்கள் சேரநாட்டு அரசர்கள் ஆகும் வாய்ப்புப் பெற்றார்கள்.
பொறையநாடு
அந்துவஞ்சேரல், அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதிகளைப் பாதுகாப்பதற்காக அங்கே அனுப்பப்பட்டான். அவன் அங்கே ஒரு இராச்சியத்தை உருவாக்கினான் அது அமராவதி ஆற்றுப்படுகைப் பகுதி, கொங்கு நாடு, பொறையநாடு என்பவற்றை உள்ளடக்கியிருந்தது. அந்துவஞ்சேரல், இதன் ஆட்சியாளன் ஆனான். இதன் மூலம் அவன் அந்துவஞ்சேரல் இரும்பொறை என அறியப்பட்டான். அந்துவஞ்சேரல் பொறையநாட்டு வாரிசுரிமை பெற்ற இளவரசியை மணந்து கொண்டவன்.
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையின் தலைநகர் கருவூர். கருவூரில் இருந்துகொண்டு சேரநாட்டை திறம்பட ஆண்டன் சேர மன்னன். இவன் காலத்தில் சோழ மன்னர்களின் வழி வந்த முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி என்னும் சோழ மன்னன் உறையூரைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டுவந்தான். சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையைக் காண முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூர் வந்தான்.
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையின் வீரர்கள் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் விஜயத்தின் உண்மையான காரணம் அறியாமல் தவறாக முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி போர் புரிய வந்திருக்கிறான் என்றெண்ணித் தாக்கினர். முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் மார்பில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. அதனை சேர வீரர்கள் எய்த அம்புகள் சிதைத்தன. முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் பட்டத்து யானை படைக் கடலின் நடுவே நாவாய்க் கப்பல் போலவும், வானத்து நட்சத்திரங்கள் இடையே நிலா போலவும், வந்துகொண்டிருந்தது. நாவாயைத் தாக்கும் சுறாமீன் கூட்டம் போல சேரர்களின் வாள் வீரர்கள் யானையைச் சூழ்ந்து தாக்கலாயினர். அதனால் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் பட்டத்து யானைக்கு மதம் பிடித்துவிட்டது. யானை மீதிருந்த முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியின் ஒன்றும் செய்யமுடியவில்லை. இந்தக் கோலத்தைக் கருவூர் வேள்மாடத்து இருந்த சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறையும் புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரும் பார்த்தனர். புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரின் வேண்டுதலின் பேரில் சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறை தானே மதயானை முன் சென்று அதனை அடக்கிச் சோழ மன்னன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளியைக் காப்பாற்றினான்.
புலவர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடிய பாடல்,
‘இவன் யார்?’ என்குவை ஆயின், இவனே
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே.