சங்ககாலத்தில் சேர நாட்டை ஆண்ட மன்னர்களுள் ஒருவன் சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை. இவன் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் மகனான குட்டுவன் இரும்பொறைக்கும், வேண்மாள் அந்துவஞ்செள்ளைக்கும் பிறந்தவன். சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சிக்காலத்தில் சேர நாடு தொடர்ச்சியாக பாண்டிய மன்னர்களாலும், சோழ மன்னர்களாலும் மற்றும் குறுநில மன்னர்களாலும் தாக்கப்பட்டது. இதனால் சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை பல ஆண்டுகளைப் பல போர் முனைகளில் கழிக்கவேண்டி இருந்தது. இத்தகைய கடினமான சூழ்நிலையிலும் சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை அனைத்து போர்களிலும் எதிரிகளை திறமையுடன் போரிட்டுத் தோற்கடித்து ஆட்சி புரிந்தான். சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை சேர நாட்டை பதினாறு ஆண்டுகாலம் ஆட்சி புரிந்தான் என்று தெரிகிறது.
சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை பற்றிய தகவல்களை நாம் சங்க கால இலக்கிய நூல்களின் வாயிலாகப் பெறமுடிகிறது. சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை சங்க காலத் தமிழ் நூலான பதிற்றுப்பத்தின் ஒன்பதாவது பத்தின் பாட்டுடைத் தலைவன் ஆவான். பெருங்குன்றூர் கிழார் என்ற புலவர் சேரமான் இளஞ்சேரல் இரும்பொறைபற்றி பாடியுள்ளார். சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை கருவூரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்டவன்.
பதிற்றுப்பத்து பதிகம்
குட்டுவன் இரும்பொறைக்கு மையூர் கிழாஅன்
வேண்மாள் அந்துவஞ் செள்ளை ஈன்றமகன்
வெருவரு தானையொடு வெய்(து)உறச் செய்துசென்(று)
இருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத்(து) ஐந்(து)எயில் எறிந்து
பொத்தி ஆண்ட பெரும்சோ ழனையும்
வித்தை ஆண்டஇளம் பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வாஞ்சி மூதூர்த் தந்துபிறர்க்(கு) உதவி
மந்திர மரபின் தெய்வம் பேணி
மெய்யூர் அமைச்சியன் மையூர் கிழானைப்
புரைஅறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறல் மரபின் பெருஞ்சதுக்(கு) அமர்ந்த
வெந்திறல் பூதரைத் தந்(து)இவண் நிறீஇ
ஆய்ந்த மரபில் சாந்தி வேட்டு
மன்உயிர் காத்த மறுஇல் செங்கோல்
இன்இசை முரசின் இளஞ்சேரல் இரும்பொறையைப்
பெருங்குன்றூர்கிழார் பாடினார் பத்துப்பாட்டு
வேறு பெயர்கள்
இளஞ்சேரல் இரும்பொறை
நிலந்தரு திருவின் நெடியோன்
பூழியர் கோ
வென்வேல் பொறையன்
பல்வேல் பொறையன்
பல்வேல் இரும்பொறை
கொங்கர் கோ
குட்டுவர் ஏறு
பூழியர் மெய்ம்மறை
மரந்தையோர் பொருநன்
பெருநல் யானை இறை கிழவோன்
கவரி வீசியது
சேர மன்னனின் முரசை நீராட்டிவர எடுத்துச் சென்றிருந்தபோது, அரசனைக் காணவந்த புலவர் மோசி கீரனார் முரசு வைக்கும் பெருமைக்குரிய கட்டிலில் அது முரசுக்கட்டில் என்று தெரியாமல் அதன்மீது படுத்து அயர்ந்து உறங்கிவிட்டார். அக்கால வழக்கப்படி இது கடும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை அயர்ந்து உறங்கும் புலவர் மோசி கீரனாரைக் கண்டான். புலவரை தண்டிப்பதற்கு மாறாக புலவர் தானாக உறக்கம் கலைத்து எழுந்திருக்கும் வரையில் சேரமான் இளஞ்சேரல் இரும்பொறை புலவருக்குக் கவரி வீசிக்கொண்டிருந்தான். அந்த அளவுக்கு இவன் தமிழையும் புலவர்களையும் மதித்தான்.
போர்கள்
தகடூரைப் போரிட்டு கைப்பற்றினான். கொல்லி மலையை நீண்ட நாள் முற்றுகையிட்டிருந்தான். தேர்ப்படையுடன் சென்று பகைவரைத் தாக்கினான். இவனோடு போரிட்ட பெரும்பூண் சென்னி என்பவன் புறமுதுகிட்டு போர்களத்திலிருந்து ஓடினான். சோழர்கள் படையெடுப்பை முறியடித்தான். பாண்டியர்களுடனான போரில் வெற்றி பெற்றான். பல குறுநில மன்னர்களை வெற்றி கொண்டான்