கடைச்சங்ககாலதில் சேர நாட்டை ஆண்ட முதல் சேர மன்னன் என்று அறியப்படுபவன் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னனாவான். இவனைப் பற்றிய குறிப்புக்கள் சங்ககால இளகிய நூலான புறநானுறு என்னும் நூலில் உள்ளது. சேர மன்னன் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையின் ஆட்சி காலம் மற்றும் அவனின் பெற்றோர்கள் பற்றி வேறு எந்தத் தகவலும் அறிய இயலவில்லை.
பெயர் காரணம்
கருவூர் ஏறிய
இவன் பெயரில் துவங்கும் கருவூர் ஏறிய என்ற இவனின் புணைப்பெயரைக் கொண்டு கருவூர் நகரைத் தலைநகராகக் கொண்டு சேர நாட்டை ஆண்ட முதல் சேர மன்னன் இவனென்று அறிந்துகொள்ளலாம்.
ஒள்வாள்
ஒள்வாள் என்பது இவன் ஒளி படைத்த வாளைக் கொண்டவன் என்பதை குறிக்கிறது.
நரிவெரூஉத்தலையார்
நரிவெரூஉத்தலையார் என்னும் சங்ககாலப் புலவர் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைப் பற்றி புறநானுற்றுப் பாடலில் பாடியுள்ளார். இந்தப் பாடல் ஐந்தாம் பாடலாக புறநானுறு நூலில் இடம்பெற்றுள்ளது. உடல் நலம் குன்றிய புலவர் நரிவெரூஉத்தலையார் சேர மன்னன் கோப்பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்டு அவனின் தோற்றப் பொலிவால் மீண்டும் உடல்நலம் பெற்றார் என்று கூறப்படுகிறது.
உடல் நலம் பெற்ற புலவர் நரிவெரூஉத்தலையார், கோப்பெருஞ்சேரல் இரும்பொறையையின் தோற்றப் பொலிவை வியந்து, தனக்குச் செய்தது போலப் பிறர்க்கும் இன்பம் செய்யும் இயல்பு குன்றாதிருக்க, தீய எண்ணம் உள்ளவர்களோடு சேராமல் ஆளும் நாட்டினைக் குழந்தையைப் போல் பாதுகாக்குமாறு அறிவுறுத்தி இயற்றிய பாடல் இது.
புறநானுற்றுப் பாடல்
எருமை அன்ன கருங்கல் இடைதோறும்
ஆனின் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின் ஒன்று மொழிவல்,
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி,
அளிதோ தானே அது பெறல் அருங்குரைத்தே
(புறம்-5)
பொருள்
எருமைகள் போல் தோற்றமளிக்கும் கரிய நிறமுடைய கற்கள் நிறைந்த இடமெல்லாம் மாடுகளைப் போலப் பரவியிருக்கும் யானைகள் நிறைந்த வலிமையான காடுகளைக் கொண்ட நாட்டை ஆளும் தலைவனே! நீ இவ்வாறு வளமும், சிறப்பும் பெற்றவனாக இருப்பதால் உனக்கு ஒன்று சொல்கிறேன். கேட்பாயாக! அருளும், அன்பும் இல்லாமல், தீமைகள் செய்து, நரகத்தைத் தனது இடமாகக் கொண்டு வாழும் தீயவரோடு சேராமல், உனது நாட்டை ஒரு குழந்தையைப் போன்று பாதுகாத்து அளிப்பாயாக. அத்தகைய காக்கும் வாய்ப்பைப் பெறுவது அரியதாகும்.