குட்டுவன் கோதை

மன்னன் குட்டுவன் கோதை என்பவன் சங்ககாலத்தில் தமிழகத்தை ஆண்ட மூவேந்தர் மரபுகளில் ஒன்றான சேரர் பரம்பரையின் வழிவந்த ஒரு மன்னன். இவன் சேரநாட்டின் ஒரு பகுதியான குட்ட நாட்டை ஆண்ட மன்னன்.

குட்டநாடு

குட்டநாட்டுப் பகுதி என்பது தற்போதைய ஆழப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் மாவட்டங்களை உள்ளடக்கியது. பம்பை ஆறு, மீனச்சிலாறு, அச்சன்கோவில் ஆறு, மணிமாலா ஆறு ஆகிய நான்கு பெரிய ஆறுகள் குட்டநாட்டில் பாய்கின்றன. நெல், வாழை ஆகியன இங்கு முதன்மையாக பயிரிடப்படுகின்றன.

புறநானூறு

மன்னன் குட்டுவன் கோதையைக் குறித்த தகவல்கள் சங்க கால தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான புறநானூற்றின் மூலமே கிடைக்கின்றது. கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர் பாடிய பாடல் ஒன்று புறநானூற்றின் 54 ஆம் பாடலாகச் சேர்க்கப்பட்டுள்ளது.

குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்னும் சோழ மன்னனும் இவனும் ஒரே காலத்தில் வாழ்ந்தவர்களாகத் தெரிகிறது. புகழ் பெற்ற சேர மன்னனான செங்குட்டுவனின் மகனான குட்டுவன் சேரலும் இவனும் ஒருவனே என்று கூறுவாரும் உண்டு. எனினும், குட்டுவன் சேரல் என்பவன் புலவர் பரணருக்குத் தொண்டு செய்ய வழங்கப்பட்டவன். அவன் அரசன் அல்ல. ஆதலால் இவர்கள் இருவரும் வேறு.

பாடல்

எங்கோன் இருந்த கம்பலை முதூர்,
உடையோர் போல இடையின்று குறுகிச்,
செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல்
எம்அன வாழ்க்கை இரவலர்க்கு எளிதே;
இரவலர்க்கு எண்மை யல்லது; புரவு எதிர்ந்து

வானம் நாண, வரையாது, சென்றோர்க்கு
ஆனாது ஈயும் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந்து எழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்,
பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி,

மாசுண் உடுக்கை, மடிவாய், இடையன்
சிறுதலை ஆயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத்து அற்றே
வலிதுஞ்சு தடக்கை அவனுடை நாடே.

(புறம்-54)

விளக்கம்

சேர மன்னன் குட்டுவன் கோதையை புலவர் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் ‘எம் கோன்’ என்று குறிப்பிடுகிறார். செல்வம் அதிகம் கொண்டவர்கள் பெரும் செருக்குடன் நடப்பது போல, என் அரசன் வீற்றிருக்கும் அவையில் தடையில்லாமல் உள்ளே சொல்லுவது எம்மைப் போன்ற வாழ்க்கையை உடைய புலவர்களுக்கு எளிது. மன்னன் குட்டுவன் கோதை இரவலர்களுக்கு எளிமையாகத் தோன்றுபவன். காடு அனைத்து உயிரினங்களுக்கும் வரையறை இல்லாமல் வழங்குவது போல் வழங்குபவன். கொடுப்பதற்காகவே அவன் கை கவிழ்ந்திருக்கும். மிகச் சிறந்த குதிரை வீரன். ஆடு மேய்க்கும் இடையர்கள் புலி உறங்கும் குகை உள்ள பக்கம் செல்ல அஞ்சுவது போல், இவன் எதிரிகள் இவன் ஆட்சி புரியும் குட நாட்டின் பக்கம் வரக்கூட அஞ்சி நடுங்குவர் என மன்னன் குட்டுவன் கோதையை புலவர் பாராட்டுகிறார்.

புறநானுறு தவிர வேறு எந்தக்குறிப்பும் சேர மன்னன் குட்டுவன் கோதையைப் பற்றி ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைக்கப்பெறவில்லை. ஆதலால் இவனின் ஆட்சி காலம் பற்றிய வேறு எந்தத் தகவலையும் அறிய இயலவில்லை.

About the author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *