சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்குப் பின் சேர நாட்டின் மன்னனாக அவன் மகன் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை, என்பவன் பதவியேற்றவன். இவன் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனுக்கும் அவனது அரசியான பதுமன் தேவிக்கும் பிறந்தவன்
சங்கத் தமிழ் இலக்கிய நூல்களில் ஒன்றான பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்து தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மீது பாடப்பட்டது. இந்தப் பாடல்களை அரிசில் கிழார் என்னும் புலவர் பாடியுள்ளார்.
பத்துப்பாட்டு பதிகம்,
பொய்இல் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவிஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேல் தானை அதிக மானோ(டு)
இருபெரு வேந்தரையும் உடன்நிலை வென்று 5
முரசும் குடையும் கலனும்கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டுத்
துகள்தீர் மகளிர் இரங்கத் துப்(பு)அறுத்துத்
தகடூர் எறிந்து நொச்சிதந்(து) எய்திய
அருந்திறல் ஒள்இசைப் பெருஞ்சேரல் இரும்பொறையை
மறுஇல் வாய்மொழி அரிசில் கிழார்
பாடினார் பத்துப்பாட்டு.
தகடூர் மீது படையெடுத்து அதன் மன்னன் அதியமானைப் போரில் வென்றதன் மூலம் பெருஞ்சேரல் இரும்பொறைக்கு தகடூர் எறிந்த என்னும் சிறப்புப்பெயர் ஏற்பட்டது. இந்தப் போரின் வெற்றியை ஒட்டி தகடூர் போர் பற்றியும், பெருஞ்சேரல் இரும்பொறை பற்றியும் தகடூர் யாத்திரை என்னும் தனி நூலும் எழுதப்பட்டது.
தகடூர் யாத்திரை
தகடூர் யாத்திரை என்னும் நூல் பெருஞ்சேரல் இரும்பொறைகும் தகடூரை ஆண்ட குறுநில மன்னன் அதியமானுக்கும் நிகழ்ந்த போர் பற்றி உரைக்கும் ஒரு சங்ககால நூல் ஆகும். இந்த நூலானது புறப்பொருள் சார்ந்தது. இந்த நூல் ஒன்றுக்கு மேற்பட்ட புலவர்களின் பாடல்களைக் கொண்ட தொகுப்பு நூலாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. அரிசில் கிழார், பொன்முடியார் ஆகிய சங்கப் புலவர்கள் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறையைச் சார்ந்து நின்றவர்கள். சேரன் தகடூர் மீது படையெடுத்துச் சென்றபோது அவனுடன் சென்று நேரடியாக நிகழ்வுகளைக் கண்டு கூறுவது போலவே பாடல்கள் அமைந்திருப்பதாகத் தெரிகிறது. இந்த நூல் தற்காலத்தில் முழுமையாகக் கிடைக்கவில்லை. உ. வே. சாமிநாதையர், என் சரித்திரம் என்னும் தனது தன்வரலாற்று நூலில் எழுதியுள்ள குறிப்புக்களில் இருந்து தகடூர் யாத்திரை நூல் அவர் காலத்துக்குச் சற்று முன்னர்வரை இருந்தது தெரியவருகிறது.
பல்வேறு மூலங்களில் இருந்தும் இதுவரை 48 பாடல்கள் கிடைத்துள்ளது . பல நூல்களிலிருந்தும் எடுத்துத் தொகுத்த பாடல்களைக் கொண்ட நூலாகிய “புறத்திரட்டு” என்னும் தொகுப்பில் இருந்து தகடூர் யாத்திரைப் பாடல்கள் சில கிடைத்தன. இது தவிர “நீதித் திரட்டு என்னும் இன்னொரு நூலிலிருந்தும் சில பாடல்களைப் பெற முடிந்தது.
போர்கள்
தகடூர் மன்னன் அதியமானையும் வேறு இரு வேந்தர்களையும் கொல்லி மலை நீர்கூரில் நடந்த போரில் வென்று அவர்களது முரசையும் குடையையும் பெருஞ்சேரல் இரும்பொறை கைப்பற்றினான். அதியமானின் தகடூரையும் கைப்பற்றிக்கொண்டான். தோட்டி நகரைக் கைப்பற்றினான்
கழுவுள் என்பவனின் தலைநகரைப் பாழாக்கினான்.
வேறு பெயர்கள்
பெருஞ்சேரல் இரும்பொறை வேறு பல பெயர்களிலும் அறியப்படுகிறான்,
குட்டுவன் இரும்பொறை
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை
பூழியர் மெய்ம்மறை
கொடித்தேர்ப் பொறையன்
இயல்தேர்ப் பொருநன்
கோதை மார்பன்
களைப்பு மிகுதியால் முரசு கட்டிலில் ஏறி உறக்கத்தில் ஆழ்ந்துவிட்ட சங்ககாலப் புலவர் மோசிகீரனார் என்பவரின் உறக்கம் தானாகக் கலையும் வரையில் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை கவரி வீசினான் என்று புகழப்படுகிறான். கருவூரைச் சேர நாட்டின் தலைநகர் ஆக்கியவன் இவன் என்றும் கருதப்படுகிறது.அரிய பொருள்களை இறக்குமதி செய்யும் கொடுமணம் என்னும் துறைமுகமும், முத்துக்குப் பெயர்போன பந்தர் நகரமும் இவன் நாட்டில் இருந்தன. இவன் சேர நாட்டை 17 ஆண்டுகள் ஆண்டான் எனத் தெரிகிறது.