சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கருவூரைத் தலைநகராகக் கொண்டுசேர நாட்டை ஆண்ட பொறைய வம்சத்து மன்னர்களில் ஒருவன். சங்கத் கால தமிழ் தொகை நூலான பதிற்றுப்பத்தில், புலவர் கபிலர் பாடிய ஏழாம் பத்தின் பாட்டுடைத் தலைவன் இவன்.
இவன் பெயரை பதிற்றுப்பத்தைத் தொகுத்தவர் செல்வக் கடுங்கோ வாழியாதன் எனக் குறிப்பிடுகிறார். சேரர்களில் பொறையர் மரபைச் சேர்ந்த இவன் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன். முடிக்குரிய இளவரசனும் இவனது தமையனுமான மாந்தரஞ் சேரல் இரும்பொறை என்பவன் இறந்துவிட்டதால், வாழியாதன் செல்வக் கடுங்கோ வாழியாதன். இவனுடைய பல்வேறு குண நலன்களைப் பற்றிப் பதிற்றுப்பத்தில் கபிலர் புகழ்ந்து கூறியுள்ளார்.
செல்வக் கடுங்கோ வாழியாதன் நான்கு வெவ்வேறு பெயர்களில் அறியப்படுகிறான்
வேறு பெயர்கள்
சேரமான் கடுங்கோ வாழியாதன்
செல்வக் கடுங்கோ வாழியாதன்
சிக்கற்பள்ளித் துஞ்சிய சொல்வக் கடுங்கோ வாழியாதன்
கோ ஆதன் செல்லிரும்பொறை
சமணம்
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் காலத்தில் தமிழகத்தில் சமணம் பரவத் தொடங்கியிருந்தது. இந்தக் கால கட்டத்தில் சமணத் துறவிகளுக்குப் பாறைக் குகைகளில் படுக்கைகளை உளியால் செதுக்கி உருவாக்கிக் கொடுப்பது சிறந்த அறமாகக் கருதப்பட்டது. கருவூருக்கு அருகாமையில் உள்ள புகழூர் என்னும் இடத்தில் காணப்படும் புகழூர்க் கல்வெட்டு இவனைக் “கோ ஆதன் சொல்லிரும்பொறை” எனக் குறிப்பிடுகிறது. இதில் குறிப்பிடப்படுபவன் சேரமான் செல்வக்கடுங்கோ வாழியாதன் எனத் தொல்லியல் அறிஞர்கள் கருதுகின்றனர். இவனின் மகன் பெருங்கடுங்கோ என்றும், பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ என்றும் அக் கல்வெட்டு மூன்று பேரை குறிப்பிடுகிறது. இந்தக் கல்வெட்டு அசோகன் காலத்து எழுத்தில் உள்ளது. இந்த எழுத்துக்குத் தமிழி எனப் பெயர் சூட்டியுள்ளனர். இந்த எழுத்தின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆகும்.
புகழூர்க் கல்வெட்டு
“தாஅமணன் யாற்றூர் செங்காயபன் உறைய கோ ஆதன் செல்லிரும்பொறை மகன் பெருங்கடுங்கோ மகன் இளங்கடுங்கோ ஆக அறுத்த கல்”
கரூர் மாவட்டம் புகழுரை அடுத்த வேலாயுதம் பாளையம் என்னும் ஊரில் ஆறுநாட்டான்மலை என்னும் சிறு குன்று ஒன்று உள்ளது. அந்த குன்றின் உச்சியில் முருகன் கோயில் உள்ளது. மலையின் இடைப்பகுதியில் வடக்குப் பக்கமும் தெற்குப்பக்கமும் இரண்டு குகைகள் உள்ளன. அந்த குகையில் சமணர் படுக்கைகள் உள்ளன. அந்த படுக்கையை அமைத்துக் கொடுத்த சேர மன்னனைப் பற்றியும் படுக்கையில் இருந்த சமணத்துறவிகள் பற்றியும் அங்குள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
‘புகழூர்க் கல்வெட்டு’ என்பது புகழூர் மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தமிழ் பிராமிக் கல்வெட்டு ஆகும். இந்த இடம் பண்டைக்காலத்தில் சேரர்களின் தலைநகரமாக இருந்த கரூரிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்பவன் சமணத் துறவி ஒருவருக்குக் குகை வாழிடம் ஒன்றைத் தானமாக வழங்கியதைக் குறிக்கவே இக் கல்வெட்டுப் பதியப்பட்டுள்ளது. இக் கல்வெட்டில் மூன்று தலைமுறையைச் சேர்ந்த சேர மன்னர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருப்பது இக்கல்வெட்டுக்கு ஒரு சிறப்பு ஆகும். இந்தக் கல்வெட்டு வெட்டப்பட்ட காலத்தில் பெருங்கடுங்கோவே மன்னனாக இருந்ததாகத் தெரிகிறது. இளங்கடுங்கோ இளவரசராக முடிசூட்டப்பட்டதைக் குறிக்கவே இத் தானம் வழங்கப்பட்டது.
பதிற்றுப்பத்து உணர்த்தும் விவரங்கள்
பெயர் விளக்கம்
நண்பர்களுக்கு இவன் செல்வம் போல் விளங்கியதால் ’செல்வக் கோ’ என்றும் ‘செல்வக் கடுங்கோ’ என்றும் இவன் போற்றப்பட்டான் எனத் தெரிகிறது. போர் வெற்றியில் கிடைத்த செல்வதையெல்லாம் தமிழ் மொழியின் பாதுகாப்புக்குப் பயன்படுத்தியதாலும் இவனைச் செல்வக்கோ என்றனர்
கபிலர் பாடியது,
பாரி இறந்தான், காப்பாற்று என்று கபிலர் இவனைப் பாடவில்லையாம். இவனின் கொடைப் புகழைக் கேள்வியுற்றுப் பத்துப்பாட்டில் இடம்பெற்றுள்ள பத்துப் பாடல்களைப் பாடினாராம். கொடுத்துவிட்டோமே என்று கவலைப்படுவதோ, கொடுக்கிறோம் என மகிழ்வதோ இல்லாமல் வழங்கும் இவன் மிகப்பெரிய வள்ளலாகத் திகழ்ந்தான்.
முத்தையும் பொன்னாலான அணிகலன்களும் பந்தர், கொடுமணம் ஆகிய ஊர்களில் வாழ்ந்த பாணர்களுக்கு வழங்கினான். முதியரைப் பேணினான். இவன் நாட்டுமக்கள் அச்சமின்றி வாழ்ந்தனர். சோழர்கள் மற்றும் பாண்டியர்களை வென்றான். அயிரை நெடுவரை போல வாழ்நாள் சிறக்கட்டும் எனப் புலவர் இவனை வாழ்த்துவதால் இவனது வழிபடு தெய்வம் அயிரைமலை ஐயப்பன் எனத் தெரிகிறது.
பதிற்றுப்பத்து பதிகம்
சேரமான் அந்துவஞ்சேரல் இரும்பொறைக்கும், பொறையன் பெருந் தேவிக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் பல போர்களில் வெற்றி கண்டான். மிகையான வேள்வி செய்தான். இவனின் ஆசிரியன் பெயர் மாய வண்ணன். நெல்வளம் மிக்க ஒகந்தூர் என்னும் ஊரையே ஆசிரியனுக்கு வழங்கினான். மேலும் மாய வண்ணனை அமைச்சனாகவும் கொண்டான். சங்கப் புலவர் கபிலர்க்குச் நூறாயிரம் காணமும் (அக்கால நாணயத்தின் பெயர்) ‘நன்றா’ என்னும் குன்றின்மீது ஏறி நின்று, தன் கண்ணுக்கும் புலவர் கண்ணுக்கும் தெரிந்த ஊர்கள் எல்லாவற்றையும் தானமாகக் கொடுத்தான். செல்வக்கடுங்கோ வாழியாதன் 25 ஆண்டுகள் ஆட்சி புரிந்தான்.
புறநானூறு
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுகப்,
போகம் வேண்டிப், பொதுச்சொல் பொறாஅது ,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகைக்,
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்குசெலல் மண்டிலம்!
பொழுதுஎன வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலைமறைந்து ஒளித்தி;
அகல்இரு விசும்பி னானும்
பகல்விளங் குதியால் பல்கதிர் விரித்தே.
(புறம்-8)