சேரமான் கணைக்கால் இரும்பொறை சேர அரச மரபைச் சேர்ந்தவர் சங்ககால மன்னன். இவர் சோழ மன்னன் செங்கணான் என்பவரோடு போரிட்டு சோழ மன்னனால் பிடிக்கப்பட்டுக் குடவாயில் கோட்டத்துச் சிறையில் அடைக்கபட்டான்.
சோழர்களின் குடவாயில் கோட்டத்துச் சிறைச்சாலையில் இருந்த சேரமான் கணைக்கால் இரும்பொறை ஒருமுறை தாகத்தைத் தணிப்பதற்குக் குடிக்க தண்ணீர் கேட்டார். சேரமான் கணைக்கால் இரும்பொறையை மதியாது சிறைக் காவலர் காலந்தாழ்த்திக் கொடுத்ததால் அந்தத் தண்ணிரைக் குடிக்க மறுத்து ஒரு பாடலையும் பாடிவிட்டு வீழ்ந்து இறந்ததாக வரலாற்றில் கூறப்படுகிறது. சேரமான் கணைக்கால் இரும்பொறை அவரின் நிலை குறித்து வருந்தி எழுதிய இந்தப் பாடல் சங்க இலக்கிய நூலான புறநானூற்றில் 74 ஆவது பாடலாக இடம்பெற்றுள்ளது.
புறநானூறு
குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்
தொடர்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேள் அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி வயிற்றுத்தீ தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ் உலகத்தானே?
விளக்கம்
அந்தக்கால கட்டத்தில் பிறந்த குழந்தை இறந்து போனாலும் அல்லது குழந்தை இறந்தே பிறந்தாலும் அக்குழந்தை ஆண் குழந்தையாய் இருப்பின் அந்தக் குழந்தை ஆளுமை இல்லாதது என்று எண்ணி, அந்தக் குழந்தைக்கு ஆளுமை உண்டாக்குவதற்காக அதனை வாளால் வெட்டிப் புதைப்பார்கள்.
இப்போது நான் காயமில்லாமல் வஞ்சகத்தால் பிடிபட்டுக் கிடக்கிறேனே, நான் ஆண்மகன் ஆவேனா? என் தாகத்தை தணித்துக்கொள்வதற்காகத் தண்ணீரைக் கேட்டுப் பெற்றிருக்கிறேன். இதனை உண்ணவும் வேண்டுமா? என்று எண்ணிக் கலங்கிய சேரமான் கணைக்கால் இரும்பொறை இறுதியில் தண்ணிர் அருந்தாமல் உணவு உட்கொள்ளாமல் இறந்தார்.